Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நன்மையும் தீமையும்!
 
பக்தி கதைகள்
நன்மையும் தீமையும்!

அந்தப் பள்ளியின் ஆண்டுவிழாவிற்கு என்னை அழைத்திருந்தனர். எல்லாம் முடிந்து கிளம்பும் போது இரவு எட்டு மணியாகி விட்டது.
“சார் ஒரு நிமிஷம். எங்க ஹெட் மிஸ்ட்ரஸ் உங்களைப் பாக்கணும்னு சொன்னாங்க.”
அந்தப் பள்ளியின் சீருடையான பச்சைநிறப் புடவையும், வெள்ளை நிற ரவிக்கையும் அணிந்தபடி பெரிய அறையின் நடுவே கம்பீரமாக இருந்த பெண்ணைப் பார்த்ததுமே அவள் யார் எனத் தெரிந்தது. நெடுஞ்சாண்கிடையாக  விழுந்து வணங்கினேன்.
“தாயே! ஆசிரியை வேடத்தில் இருக்கும் நீங்கள் என்னையும் உங்கள் மாணவனாக ஏற்க வேண்டும்”
“அவ்வளவு தானே! செய்தால் போயிற்று. அங்கே தெரியும் காட்சியைப் பார்.”
அது பெரிய ஜவுளிக்கடை. அதை சகோதரர் இருவர் நிர்வகித்தனர். ஒருவர் சரக்கு வாங்குவது, வாடிக்கையாளரிடம் பேசுவது, தறிக்காரர்களை நிர்வகிப்பது போன்ற வேலைகளைச் செய்வார். ஆனால் அவ்வளவாகப் படிக்காதவர். மற்றொரு சகோதரர் படித்தவர். கணக்கு வழக்கு பார்த்துக் கொள்வார்.  
வியாபாரம் கொழித்தது. படித்த சகோதரரின் மகன், மகளுக்குத் திருமணம் நடந்தது. படிக்காதவர் இளையவர். அவரது மகளும் மகனும் பள்ளியில் படித்தனர்.
இந்நிலையில் திடீரென படித்தவர், படிக்காதவரிடம் உப்பு பெறாத விஷயத்திற்குக் கூட சண்டையிட்டார். நாள் ஆக ஆகச் சண்டை பெரிதானது.
ஒரு நாள் படிக்காதவர் அழாக்குறையாக,“அண்ணா உங்களுக்கு என்னப் பிடிக்காமப் போயிருச்சி. அதுதான் எப்போதும் சண்டை போடறீங்க. நாம கடையையும், சொத்தையும் பிரிச்சிப்போம். நமக்குள்ள அண்ணன் – தம்பி உறவு கடைசி வரை இருக்கணும்னு ஆசைப்படறேன்.”
“இதுல பிரிக்கறதுக்கு என்ன இருக்கு?”
“என்னன்ணா சொல்றீங்க?”
“நான் சொன்னா  புரியாது. நீ நம்ம கடையோட ஆடிட்டர்கிட்டப் போய் விவரம் கேளு.”
அங்கே தம்பிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தம்பிக்குத் தெரியாமல் பல வருடங்களாகக் கடைக்கணக்கில் ஊழல் செய்திருந்தார் அண்ணன். நஷ்டம் என்று சொல்லி இருவரும் நடத்திய கூட்டு நிறுவனத்தை மூடி விட்டு தன் பெயரிலேயே புது நிறுவனம் தொடங்கினார் அண்ணன். கடையின் பெயர் மாறவில்லை. ஆனால் அதன் உரிமை மாறி விட்டது. அண்ணன் மட்டுமே கடைக்கு உரிமையாளர். ஊழியராகச் சம்பளம் பெறுவதாக தம்பியின் ஆவணங்கள் மாறியிருந்தன அவற்றில் தம்பியின் போலிக் கையெழுத்தும் இருந்தது. தம்பி இருந்த வீட்டைத் தவிர மற்ற சொத்துக்களும் அண்ணனின் பெயரில் மாற்றப்பட்டிருந்தன.
தம்பிக்குத் தலை சுற்றியது. மனைவியிடம் விஷயத்தைச் சொல்லி அழுதபபடியே கீழே சாய்ந்தார். பதறிய மனைவி ஆம்புலன்சை கூப்பிட்டார். அவர் இறந்து பத்து நிமிடம் ஆகி விட்டதாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்தனர்.
முன்னால் இருப்பவள் மூவுலகையும் ஆள்பவள் என்பதை மறந்து கொதித்தேன்.
“என்ன தாயே கொடுமை! எனக்கு அனுமதி கொடுங்கள். படுபாவி அண்ணனகை் கொன்றால்தான் மனம் ஆறும்.”
“அந்த அண்ணன்காரன் போல பாவம் செய்தவர்கள் லட்சம் பேர் இருக்கிறார்கள். பட்டியல் தருகிறேன். எல்லோரையும் கொன்று விட்டுவா. உனக்காக காத்திருக்கிறேன்.”
கதறியபடி அன்னையின் காலில் விழுந்து வணங்கினேன்.
“பாவம் செய்தவர்களை பார்த்துக் கொள்கிறேன். என்றும் மறக்க முடியாதபடி கண்டித்துப் பாடம் கற்பிக்கிறேன். ஆனால் இப்போது உனக்குப் பாடம் நடத்த போகிறேன்.”
“காத்திருக்கிறேன் தாயே!”
“நீயும் ஒரு அண்ணன்தான். உனக்கும் தம்பிகள் இருக்கிறார்கள். நீயும் இதே பாவத்தைச் செய்திருக்கிறாய்.”
“தாயே!” எனக் கதறினேன். வேறு யாராவது என்மீது பழிபோட்டால் அவர்களை ஒருவழி செய்திருப்பேன். இந்த உலகமே என்னைப் பழித்தபோது அன்னையிடம் கதறியிருக்கிறேன். அவளே பழித்தால் யாரிடம் போவது? உன்னை விட்டால் யார் இருக்கிறார்கள்?
“ஞானம் பெற வந்தவன் இவ்வளவு உணர்ச்சிவசப்படலாமா?”
“உங்கள் கொத்தடிமை மீது இப்படி பழி சொல்லலாமா?”
“உன் தம்பிகள் மீது பாசத்தை பொழிகிறாய் என எனக்குத் தெரியும். அவர்கள் விஷயத்தில் நீ கொஞ்சமும் நியாயம் தவறாதவன் என்பதையும் அறிவேன். அந்தக் காட்சியில் வரும் அண்ணன் போல் நீ செய்திருந்தால்  உன்னைப் பார்க்க வந்திருக்க மாட்டேன். என்னைப்பற்றி எழுத வைத்திருக்கவும் மாட்டேன்.”
கண்ணீரின் ஊடே தாயைப் பார்த்துச் சிரித்தேன்.
“நாற்பது வருடங்களுக்கு முன் நிகழ்ந்த சம்பவத்தை உனக்கு நினைவூட்டுகிறேன்.”
என் மனம் பின்னோக்கி ஓடியது.
அப்போது என் வயது பதினெட்டு. நானும் என் தம்பியும் தனியாக பகல்நேர ரயிலில் சென்னை சென்று கொண்டிருந்தோம். ஜன்னலோரம் ஒரு இருக்கை. பின் அடுத்து ஒரு இருக்கை. மொத்தம் எட்டு மணி நேர பயணம்.
இரண்டு மணி நேரத்துக்கு ஒருவர் ஜன்னலோர இருக்கையில் அமர்வது, அதன்பின் இருக்கையை மாற்றுவது என முடிவு செய்தோம்.
“நீ பெரியவன். நீயே முதல்ல ஜன்னல் பக்கத்துல உக்காரு.” என்றான் தம்பி. அது மிகவும் சுகமாக இருந்தது. இரண்டு மணி நேரம் கழித்து இருக்கை மாற்றித் தரும்படி கேட்டான். நான் மறுத்தேன்.
“முடியாது! ஜன்னல் சீட்டுக்கான டிக்கெட்ல என் பேர் தான் இருக்கு. உன் சீட்டு இதுதான். சென்னை வரைக்கும் இப்படியேதான் போகணும்.”
அவன் வாதிட்டுப் பார்த்தான். கெஞ்சினான். நான் மசியவில்லை. கடைசிவரை ஜன்னலோரத்தில் நானே உட்கார்ந்து வந்தேன்.
“நீ செய்ததைத்தான் அந்தக் காட்சியில் வந்த அண்ணன்காரனும் செய்தான். நீ திருடியது ஜன்னலோர இருக்கையை. அவன் திருடியது தம்பியின் உழைப்பை, அவன் சொத்துக்களை. பத்து ரூபாய் திருடினாலும் பத்துகோடி திருடினாலும் திருட்டு திருட்டுதான்.”
நான் திகைத்து நின்றேன். பிற்காலத்தில் என் பெயரில் இருந்த குடும்பச் சொத்துக்களைக்கூடப் பாகம்பிரித்துத் தம்பிகளிடம் கொடுத்துவிட்டேன். என்றாலும் அன்று ரயிலில் செய்தது அநியாயம்தானே!
“உன் மனதில் அப்போது வஞ்சம் இருந்தது. ஆனால் வளர வளர அது போய்விட்டது.”
“என்ன தாயே! அது தானாகவே போனது போல சாதாரணமாகச் சொல்கிறீர்கள்! கையில் கிளிதாங்கிய என் தாய் அசுரர்களை சம்ஹாரம் செய்ததுபோல் மனதில் இருந்த வஞ்சத்தை அழித்தாள். அதனால்தான் இன்று தாயின் முன் நின்று கொண்டிருக்கிறேன்.”
“இதுதான் இன்றைய பாடம். உன்னைவிடக் கெட்டவர்களைப் பார்த்தால் பொங்கி எழாதே. அவர்களைச் சபிக்காதே. சரியான நேரத்தில் உனக்கு கடவுளின் அருள் கிடைக்கவில்லையென்றால் நீயும் அந்தக் காட்சியில் வந்த அண்ணன் போலவே இருப்பாய்.”
“சரி, என்னைவிட நல்லவர்களைப் பார்த்தால்…”
“மனம் நிறைந்த அன்புடன் வாழ்ந்தால் நீயும் அந்நிலையை அடையலாம் என நம்பிக்கை கொடுக்கிறார்கள். உன்னைவிடத் தீயவர்கள் உன்னுடைய கடந்த காலம். உன்னைவிட நல்லவர்கள் உன் எதிர்காலம்.”
“அற்புதம் தாயே!”
“பாடம் முடிந்தது. குருதட்சணையைக் கொடுத்துவிட்டுக் கிளம்பு.”
 பிரபஞ்சத்தின் சொந்தக்காரிக்கு என்ன குருதட்சணை தரமுடியும்?
“தாயே! என் மனதில் இன்னும் காமம், கோபம் உள்ளிட்ட தீய குணங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றை உங்கள் பாதங்களில் தட்சணையாக சமர்ப்பிக்கிறேன்.”
“பெரிய ஆளப்பா நீ. அந்த குணங்களை வைத்துக் கொண்டு நான் அவஸ்தைப்படவா?”
“இல்லை தாயே! இந்த குணங்கள் அனைத்தும் இருளின் வடிவம். உங்கள் கால் நகத்திலிருந்து வரும் ஒளியில் அந்த இருட்டு காணாமல் போகும். என்னிடமும் அந்த இருட்டு இருக்காது. இது நடந்தால் என்னுடன் வாழ்பவர்கள் மகிழ்வார்கள் அல்லவா? அப்போது நீங்களும் மகிழ்வீர்கள் அல்லவா? இதைவிடப் பெரிய குருதட்சணை வேறு என்ன இருக்கமுடியும்”
அன்னை கலகல என சிரித்தபடி மறைந்தாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.