Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பேசவைத்த பேரழகி
 
பக்தி கதைகள்
பேசவைத்த பேரழகி


ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்யும் ஒரு  நிறுவனத்தின் தலைவியுடன் நேர்காணலுக்காகச் சென்னை வந்திருந்தேன். நான் ஏன் அழைக்கப்பட்டேன் என்பது அப்போது எனக்கு தெரியாது.
தலைவிக்கு முப்பது வயது இருந்தால் அதிகம். மிக அழகாக இருந்தாள். பரஸ்பர அறிமுகம், விசாரிப்பு முடிந்தவுடன் அறையில் இருந்த மற்ற அதிகாரிகள் வெளியேறியதும் பேச ஆரம்பித்தாள்.
“உங்களுக்கு என்னைப் பத்தித் தெரியும்னு நெனைக்கறேன்.”
“ஓரளவுக்கு.”
“ரெண்டு வருஷத்துக்கு முன்னால எங்கப்பா திடீர்னு இறந்துட்டாரு. ஏகப்பட்ட பிரச்னை. எங்க குடும்பத்துக்குள்ளேயே எனக்கு எவ்வளவு எதிரிகள் இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கிட்டேன். பெரியப்பா, சித்தப்பா, அத்தைன்னு நெருங்கின உறவுக்காரங்க எல்லாமே மோசமா நடந்துக்கிட்டாங்க. ரெண்டு வருஷம் அவங்களோட போராடி எல்லாப் பிரச்னையும் தீத்துட்டேன். இப்போ ஆயிரம் கோடி ரூபா சொத்துக்கு நான் ஒருத்தி தான் சொந்தக்காரி.”
“வாழ்த்துக்கள்.”
“ஆனா எனக்கு எல்லாமே வெறுத்துப்போச்சு, சார்.  மூணு வயசாகும் போது அம்மா இறந்தாங்க. இப்போ அப்பா. என்னை உண்மையா நேசிக்கறதுக்கு  ஒரு ஆள் கெடையாது. ஒருகாலத்துல நான் என் உறவுக்காரங்கள எல்லாம் நேசிச்சேன். ஆனா அவங்க நேசிச்சது என் பணத்த மட்டும் தான்னு தெரிஞ்சதும் மனசு விட்டுப்போச்சு.
“இருக்கறது சென்னைன்னாலும் எங்க பூர்வீகம் மதுரை தான்.  பச்சைப்புடவைக்காரி தான் சார் இஷ்ட தெய்வம். சொந்தக்காரங்க கூட்டமா சேர்ந்து என்னை எதிர்த்தப்போ, அவள் என் பக்கம் நின்னதால தான் ஜெயிச்சேன்.
“இப்போ பேசாம எல்லாச் சொத்துக்களையும் தர்மத்துக்கு கொடுத்துட்டு இமயமலைக்குப் போய்ப் தவம் பண்ணலாம்னு நினைக்கிறேன். சரிதானா?”
எனக்கு எப்படி தெரியும்? அந்தக் கார் வாங்குவதா இல்லை இந்தக் கார் வாங்குவதான்னு எடுக்கற முடிவா என்ன? இதில் மூன்றாம் மனுசனா நான் என்ன சொல்ல முடியும்?
அவள் என்னையே பார்த்தாள். சற்றுத் திரும்பிய நான் அசந்துபோனேன். அறையின்  ஓரத்தில் பச்சைப்புடவைக்காரியின் பொன்னிறச் சிலை இருந்தது.
“ஒரு நிமிஷம்.”
எழுந்து பச்சைப்புடவைக்காரியை விழுந்து வணங்கினேன்.
பதிலளிக்கும் பொறுப்பை அவளிடம் ஒப்படைத்ததால் மனம் லேசானது.
“உங்க பதிலுக்காகக் காத்திருக்கேன்.”
என்ன சொல்வது? அம்பிகை இன்னும் உத்தரவு தரவில்லையே!
நல்ல வேளையாக ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
“யோசிச்சி வைங்க. பத்து  நிமிஷத்துல வந்துடறேன். பேங்க் எம்.டி., வந்திருக்கார்.”
அவள் வெளியேறியதும் பச்சைப்புடவைக்காரியின் காலடியில் அமர்ந்து அவளின் அழகு முகத்தை பார்த்தேன்.
“சார் காபி....”
குரல் கேட்டுத் திரும்பினேன். சீருடை அணிந்த ஊழியை ஒருத்தி நின்றாள்.  
“டேபிள்ல வச்சிருங்க.”
“நேராக வந்திருக்கும் என்னைப் பார்க்காமல், என் சிலைக்கு முன் உட்கார்ந்திருக்கும் உன்னை என்னவென்று சொல்வது?”
‘தாயே’ என்று கதறியபடி காலில் விழுந்தேன்.
“இவளிடம் என்ன சொல்லட்டும்?”
அந்தப் பேரழகி என் தலையில் கை வைத்தாள்.
“இதைக் குடித்து விட்டு அவளிடம் பேசத் தொடங்கு. மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்.”
அன்னை மறைந்தாள். காபியைக் குடித்து முடிக்கவும் தலைவி உள்ளே வரவும் சரியாக இருந்தது.
“என் கேள்விக்கு என்ன பதில் சொல்றீங்க?”
“உங்க கம்பெனில மூவாயிரம் ஊழியர்கள் வேலை பார்க்கறாங்க. உங்க வாடிக்கையாளர்கள் ஆறாயிரம் பேருக்கு மேல இருப்பாங்க அதுபோக நீங்க குறைந்தது ஐயாயிரம் பேரிடமாவது பொருட்கள், சேவைகளை கொள்முதல் செய்யறீங்க.”
“என் கம்பெனிப் புள்ளிவிபரத்தை எதுக்குச் சொல்றீங்க?”
“குறுக்கப் பேசாதீங்க.”
இப்போது எனக்கு என்ன பயம்? பச்சைப்புடவைக்காரியின் கொத்தடிமையாக அல்லவா பேசுகிறேன்?
“நீங்க இந்தக் கம்பெனிய அம்போன்னு விட்டுட்டுப் போனா இவங்க கதி என்னாகும்னு யோசிச்சிப் பாருங்க. பதினாலாயிரம் குடும்பங்கள்ல பிரச்னை பண்ணிட்டுத் தபசு பண்றது அவளுக்குப் பிடிக்காது.”
“நான் என்னதான் செய்யறது?”
“உங்க ஊழியர்களுக்கு நியாயமான சம்பளம். பணி பாதுகாப்பு. வாழ்வில் முன்னேற  நல்ல வழி – இதையெல்லாம் எப்படி அவங்களுக்குக் கொடுக்கறதுன்னு திட்டம் போடுங்க. உங்க வாடிக்கையாளர்களுக்குத் தரமான பொருட்கள நியாயமான விலைக்குக் கொடுக்க என்ன செய்யணும்னு யோசிங்க. நீங்க யார்கிட்டருந்து கொள்முதல் செய்யறீங்களோ அவங்க நல்லா வாழறதுக்கு வழிவகை பன்ணுங்க. இந்த 14000 குடும்பங்கள் உங்கள வாழ்த்தும். அதுவே  நீங்க பதினாலாயிரம் வருஷம் சோறு தண்ணியில்லாம தவம் செய்யறதுக்குச் சமம்.”
“எல்லாத்தையும் விட்டுட்டு ஓடிரலாம்னு நெனச்சேன்.”
“பொறுப்புக்கள உதறிட்டுப் போய்க் காட்டுல தவம் செய்யறது ஒரு நிலை. ஆனா பொறுப்பை நல்லபடியா நிறைவேத்தறது அதைவிடச் சிறந்த தவம். அப்படிச் செய்யும் போது பதினாலாயிரம் குடும்பங்களுக்கு சந்தோஷம் கொடுக்க முடிஞ்சா அதை விட உத்தமமான தவம் வேற எதுவும் இல்ல.”
ஒருவேளை தலைவி எதிர்பார்த்த பதிலை சொல்லவில்லையோ? ஏனெனில் அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.
“ உங்க மனம் போல கம்பெனிய நடத்தச் சரியான ஆளுங்கள இப்பவே தேர்ந்தெடுங்க. படிப்படியா உங்க பொறுப்புக்களக் குறைச்சிக்கங்க. இன்னும் பத்து வருஷத்துல அவங்ககிட்ட எல்லா பொறுப்பையும் கொடுத்துட்டு தவம் செய்யலாம். ஆனா நீங்க இங்க செய்யறதும் தவம் தான்னு பச்சைப்புடவைக்காரி நெனைக்கறா.”
சில நொடிகள் என்னையே வெறித்துப் பார்த்தபடி நின்றாள் தலைவி.
“உங்க கால்ல விழுந்து வணங்க அனுமதிப்பீர்களா?”
“நிச்சயமாக மாட்டேன். கோயில்ல தெய்வம் தவிர மற்றவரை வணங்கக் கூடாதுன்னு விதி இருக்கு. இது பச்சைப்புடவைக்காரியோட கோயில்.  அவ கால்ல விழுங்க. உங்களுக்கு எந்தக் குறையும் வராது.”
சில நிமிடம் பேசி விட்டு வெளியே வந்தேன். படியில் இறங்கும்போது காபி கொடுத்த ஊழியை கூட்டிப் பெருக்கிக்கொண்டிருந்தாள்.
“பிரமாதமாகப் பேசி அசத்தி விட்டாயே!”
“என்னைக் கேலி செய்கிறீர்கள் தாயே? நீங்கள் என் மனதில் எண்ணங்களாக மலர்ந்தீர்கள். என் வாயில் வார்த்தைகளாக வெளிப்பட்டீர்கள். பேசியது நீங்கள். வாயசைத்தது மட்டும் நான்.”
“சரியப்பா. உன்னிடம் ஒரு கேள்வி. அவளுக்குத்தான் ஆயிரம் கோடி நிறுவனம் இருக்கிறது. பல பொறுப்புக்கள் இருக்கின்றன. உனக்குத்தான் பொறுப்பு பெரிதாக ஒன்றுமில்லையே. நீ ஏன் காட்டிற்குப் போய் தவம் செய்யக்கூடாது?”
“எனக்குத்தான் பெரிய பொறுப்பு இருக்கிறதே! அதை விட்டு எப்படி தவம் செய்வதாம்?”
“என்னப்பா உன் பொறுப்பு?”
“ என்னைப் பேச வைத்த பேரழகிக்குக் காலமெல்லாம் கொத்தடிமையாக வாழும் பொறுப்பு இருக்கிறது, தாயே. அந்தப் பேரழகி என்னை உலகிற்கே அரசனாக்கினாலும் சரி, இல்லை அவள் கோயிலில் காலணிகளைப் பாதுகாக்கும் பொறுப்பில் வைத்தாலும் சரி, நரகத்தில் பல கோடி யுகங்கள் வேக வைத்தாலும் சரி  என் அடிமை நிலை இம்மியும் பிசகாமல் வாழ்வது எவ்வளவு பெரிய பொறுப்பு என இந்த அடிமைக்கு மட்டுமே புரியும்.  அது போதும், தாயே!. வேறு தவம், ஜபம் தேவையில்லை.”
சிரித்தபடி மறைந்தாள் அந்தச் சிங்காரவல்லி

 


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.