Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பானுகோபனும் வீரவாகுவும்
 
பக்தி கதைகள்
பானுகோபனும் வீரவாகுவும்

மூன்றாம் நாள் போருக்கு பானுகோபன் புறப்படும் முன் பாட்டியான மாயையை மனம்உருகி வேண்டினான்.
அடுத்த கணமே சூரபத்மனின் அன்னையும் பானுகோபனின் பாட்டியுமாகிய மாயாதேவி ஒளியுருவாய் வானில் தோன்றி ‘குழந்தாய். என்னை கூப்பிட்ட காரணம் என்ன..’ என்றாள்.
‘பாட்டியே! சிவகுமாரன் முருகர் நவ வீரர்களோடும், பெரும் படைகளுடனும் வந்து நம் குலத்தைப் பூண்டோடு வேரறுக்க சபதம் பூண்டு வந்துள்ளார். போரில் நம் அணி வெற்றியாக விளங்க தாங்கள் தான் ஏற்ற மாய மந்திர வழிகளைக் காட்ட வேண்டும்.’
மாயை உடனே, ‘பேரனே! சற்றும் மனம் தளராதே. இதோ.. அற்புதமான ஒரு அஸ்திரத்தைத் தருகிறேன். இதை நீ பிரயோகித்தால் எதிராளிகள் மதிமயங்கி மண்ணில் சாய்வர். அது மட்டுமல்ல. அவர்கள் அனைவரையும் களத்திலிருந்து அப்புறப்படுத்தி அறிவு மயங்கிய நிலையிலேயே அலைகடலுக்கு அப்பால் கொண்டு வைத்துவிடும் இந்த மந்திரப் படைக்கலன்’
பாட்டியின் பாதம் பணிந்து அஸ்திரங்களைப் பெற்ற ஆனந்தத்தில் கோஷத்துடனும், கொதிப்புடனும் களம் கண்டான் பானுகோபன்.
‘வீரவாகுவே.. முதல் நாள் போரில் வென்று விட்டோம் என்ற மமதையில் இருக்கிறாயா.. வீரம் இருந்தால் இப்போது வெளியே வா..’
பானுகோபனுக்கும், வீரவாகுவுக்கும் இடையே நெடுநேரம் போர் நடந்தும் பானுகோபனால் பதிலடி தர முடியவில்லை. பாட்டி கொடுத்த மாயப் படைக்கலனால் தான் நவவீரர்களையும் மாய வைக்க முடியும் எனக்கருதிய பானுகோபன் வெற்றித் திருமகளை மனதில் துதித்தபடி அஸ்திரத்தை விடுத்தான்.
வீரம் வழங்காத வெற்றியை மாயம் மறைமுகமாகத் தந்தது.
தேவர்களின் படைவீரர்களும், நவவீரர்களும் உயிர்கலங்கி மண்ணில் சாய்ந்தனர். அனைவரின் உடலங்களையும் ஏழுகடல் தாண்டி எடுத்து சென்றது மாய அஸ்திரம். பானுகோபன் வெற்றிச் சங்கம் முழங்கினான். அச்சமயம் வீரர்களே இல்லாமல் வெறிச்சோடிய யுத்த களத்தைக் கண்ட நாரதர் முருகப்பெருமானிடம் ஓடி செய்தியை அறிவித்தார்.
அடுத்த நொடியே ஆறுமுகப்பெருமான் ஆயுத நாயகமாக விளங்கும் ஆற்றல் வாய்ந்த வேலாயுதத்தை விடுத்து கடல்கள் தாண்டிச் செல்லக் கட்டளையிட்டார்.

‘கதிர்வேலுக்கு எதிர்வேல் உண்டா?’

துதிக்கும் அடியவர்க்கு
 ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின்
  அவர் குலத்தை முதல் அறக்களையும்
   எனக்கோர் துணையாகும்.
சொலற்கரிய திருப்புகழை
உரைத்தவரை அடுத்த பகை
 அறுத்தெறிய உருக்கி எழும்
  அறத்தை நிலைகாணும்

வேல் என்றாலே ‘அறிவு’ என்றுதான் பொருள். பறந்து சென்ற வேல் ஏழு கடல்களைத் தாண்டி அறிவு மயங்கிச் சாய்ந்தும், ஓய்ந்தும், மாய்ந்தும் கிடந்த வீரர்களுக்கு புத்துயிர் ஊட்டியது.
உணர்வு பெற்ற நவவீரர்களும், ஏனைய படையினரும் வேலையே திருமுருகனாகக் கண்டு வணங்கி மகிழ்ந்தனர். கந்தபுராண ஆசிரியர் இவ்விடத்தில் முருகனுக்குரிய அனைத்து சிறப்பு அம்சங்களும் வேலுக்கும் பொருந்தியுள்ளது என்று மிக அருமையாக ஒப்பிடுகிறார்.
முருகன் ஒளிமயமானவன். வேலும் பிரகாசமாகவே விளங்குகிறது. ஆறுமுகம் கொண்டவன் முருகன். வேலும் ஆறு பட்டைகளோடு அமைந்திருக்கும் சிவபெருமானிடமிருந்தே தோன்றியவன் முருகன்.
வேலாயுதமும் சிவபிரானே உருவாக்கி புதல்வனுக்கு வழங்கியது. கடவுளின் சக்தியே முருகன். வேலையும் ‘சக்தி’ என்றே குறிப்பிடுவது மரபு.

அந்தம் இல் ஒளியின் சீரால்
அறுமுகம் படைத்த பண்பால்
எந்தைகண் நின்றும் வந்த
இயற்கையால் சக்தியாம் பேர்
தந்திடும் பனுவல் பெற்ற
தன்மையால் தனிவேல் பெம்மான்
கந்தனே என்ன நின்னைக்
கண்டு உளக்கவலை தீர்ந்தோம்!

வேலால் விழிப்புணர்வு பெற்ற வீரவாகுத்தேவர் தனக்குத்தானே ஒரு சபதம் ஏற்றுக்கொண்டார்.
‘எப்பாடு பட்டாவது பானுகோபனைப் போரில் மடியச் செய்வேன். இது உறுதி. அவனை வெற்றி கொண்ட பின்பே எம்பெருமான் கந்தனைச் சென்று காண்பேன். அதுவரை முருகன் முகத்திலேயே விழிக்க மாட்டேன். இது திண்ணம்.’
‘இச்செயலை இந்த கால கட்டத்திற்குள் கட்டாயம் செய்து முடிப்பேன்’ என்று நமக்கு நாமே ஒரு நிர்பந்தம் ஏற்படுத்திக் கொள்வது நல்ல பழக்கமாகும்.
‘DeadLine’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். உண்மையில் அதுதான் நம்மை ‘வாழ வைக்கும் கோடு’ நம் ஆற்றலை அபரிதமாகப் பெருகச் செய்யும்.
‘வெற்றிபெற்ற பின்பே வேலவரைக் காண்பேன்’ என்று சூளுரை செய்து கொண்ட வீரவாகு சூரபத்மனின் நகருக்குச் சென்றார்.
‘மாய மந்திரத்தால் எங்களைத் தற்காலிகமாக வேண்டுமானால் வீழ்த்தலாம். நிரந்தர வெற்றி நிச்சயமாக எங்கள் பூதப் படைகளுக்கே. எங்கிருக்கிறாய் பானுகோபனே.. எழுந்துவா..’
கோஷமிட்டபடி நவவீரர்கள் வீரமகேந்திரபுரியின் வீதிகளில் சென்று கண்ணில் பட்ட நகரின் வளங்களை எல்லாம் நாசப்படுத்தினர்.
முழக்கங்களைக் கேட்ட சூரபத்மன் தன் மைந்தனான இரணியனை அழைத்தான்.
‘உடன் நீ போருக்குச் செல். சகோதரன் அக்னிமுகனும், மந்திரி தருமகோபனும் அடுத்து போர்க்களம் காண இருக்கிறார்கள்.’
‘தந்தையே.. இப்போதே செல்கிறேன். ஆனால் வென்று வருவேன் என்று நான் உறுதிகூற மாட்டேன். ஏனென்றால் நமக்கு வரம்தந்து வாழ்வு தந்த சிவபிரானின் செல்வனோடு நாம் சண்டை செய்வதா? அளப்பரிய ஆற்றல் பெற்றவர் அல்லவா அந்த ஆதிசிவன்! நெற்றிக்கண் நெருப்பால் மன்மதனை நிர்மூலமாக்கினார். சிரித்தே முப்புரங்களை எரித்தார். அந்தகாசுரனை சூலத்தால் அழித்தார். இடது காலால் எமனை எற்றினார். பொங்கிவந்த கங்கையை தலையில் தாங்கினார். ஆலகால விடத்தையே அள்ளி விழுங்கினார். அத்தகைய சிவபெருமானைப் பகைப்பது நாம்பெற்ற வரத்திற்கு உகந்ததா.. நன்றி கொன்ற பாவமே நம்குலத்தை அழித்துவிடும் தந்தையே..

ஒன்றொரு பயன்தனை உதவினோர் மனம்
கன்றிட ஒருவினை கருதிச் செய்வரேல்
புன்தொழில் அவர்க்கு முன் புரிந்த நன்றியே
ஏகான்றிடும் அல்லது கூற்றும் வேண்டுமோ!

என் மனதில் பட்டதைத் தங்களுக்கு கூற வேண்டும் என்ற எண்ணத்தால் எடுத்துச் சொன்னேன். புதல்வனா எனக்கு புத்திமதி கூறுவது என்று தவறாக நினைக்காதீர்கள். இப்போதே போருக்குச் செல்கிறேன்’
போர்க்களததிற்கு சென்ற இரணியன் முடிந்தவரை தன் வலிமையைக் காட்டினான். பிறகு மாண்டு விடுவதற்கு அஞ்சி நாம் ஒருவனாவது தந்தைக்கு உரிய ஈமக்கடன்களைச் செய்ய எஞ்சுவோம் என எண்ணி கடலில் மூழ்கி மீனாக உருமாறினான்.
இரணியனுக்குப் பிறகு நான்காம் நாள் போருக்கு அக்னிமுகனும், அதன்பின் மந்திரி தருமகோபனும் வந்தார்கள். தேவர்களின் படை இருவரையும் தீர்த்துக்கட்டியது. மாயப்படைக்கலனால் அனைவரையும் மயக்கமுறச் செய்த பானுகோபன் மீண்டும் ஐந்தாம்நாள் போருக்கு வந்தான்.
‘எப்போது மீண்டும் போர்முனைக்கு வருவான் பானுகோபன்?’ என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த வீரவாகுவின் கண்களில் பானுகேபான் பட்டதும் ஆயுதங்களும், அஸ்திரங்களும் அப்படியும் இப்படியுமாகப் பாய்ந்தன.

வெஞ்சமர்க்கு ஆற்றல் இன்றி
வஞ்சனை புரிந்து விண்ணில் நின்று
மாயம் புரிந்த

பானுகோபனை வாளாயுதத்தால் கீழே வீழ்த்தினார் வீரவாகு. வெற்றி! வெற்றி! என பூதப்படையினர் ஆர்த்தனர்.
– தொடரும்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.