Advertisement

தஞ்சை பெரியகோவிலில் கும்பாபிஷேகம்: பந்தகால் முகூர்த்தம்

தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில், 23 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், பாலாலாய யாகச்சாலைக்காக இன்று காலை பந்தகால் முகூர்த்தம் செய்யப்பட்டது.

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவிலை கி.பி.,1010ம் ஆண்டு ராஜராஜசோழன் கட்டி முடித்து கும்பாபிஷேகம் செய்தார். அதன் பிறகு தஞ்சை ஆண்ட மன்னர்களும் பல்வேறு திருப்பணிகளை செய்து கும்பாபிஷேகம் செய்து வந்துள்ளனர். கடந்த 1996ல், கடைசியாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு 12 ஆண்டுக்கு பிறகு நடைபெற வேண்டிய கும்பாபிஷேகம் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, 23 ஆண்டுக்கு பிறகு வரும் 2020 பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்ட, தொல்லியல்துறையினர் கோவிலில் திருப்பணிகளை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், அறநிலையத்துறையினர் சார்பில், கும்பாபிஷேத்திற்காக, பாலாலாய யாகச்சாலை அமைக்க, இன்று காலை பாலாலாய முகூர்த்தக்கால் கம்பை வைத்து, அதற்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடத்தினர். பின்னர் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதை தொடர்ந்து வரும் நவ.29ம் தேதி நான்கு கால யாகசாலை பூஜையுடன் துவங்கி டிசம்பர் மாதம் 2ம் தேதி பாலாலயம் நடைபெறுகிறது. அதன் பிறகு உற்சவர் சிலைகள் நடராஜர் மண்டபத்தில் வைக்கப்பட்டு, வழிப்பாடு நடைபெற உள்ளது. இவ்விழாவில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி போன்ஸ்லே, உதவி ஆணையர் கிருஷ்ணன்,கோவில் செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர் ரெங்கராஜன் உள்ளிட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.

Advertisement
 
Advertisement