Advertisement

ராம நாமம் எழுதியவர்களுக்கு போனஸ்

பிரயாக்ராஜ்: அயோத்தி பிரச்னையில் சுமுக தீர்வு ஏற்பட பிரார்த்தனை செய்து 1.25 லட்சத்துக்கு மேல் ராம நாமம் எழுதியவர்களுக்கு போனஸ் வழங்க ராம் நாம் வங்கி முடிவு செய்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ராம் நாம் வங்கி என்ற பெயரில் ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது. வங்கி என்ற பெயர் இருந்த போதும் இதற்கென ஏ.டி.எம். கிடையாது; காசோலையும் கிடையாது. இந்த வங்கியின் பரிவர்த்தனை அனைத்துமே ராம நாமம் தான். இந்த வங்கியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

பிரயாக்ராஜில் கடந்த ஜன. 15 - மார்ச் 4 வரை கும்பமேளா நடந்தது. அப்போது அயோத்தி பிரச்னையில் சுமுகமான தீர்வு ஏற்பட ஒரு லட்சம் ராம நாமம் எழுதி பிரார்த்னை செய்ய வங்கியின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தற்போது அயோத்தி வழக்கில் சுமுகமான தீர்ப்பு கிடைத்திருப்பதால், 1.25 லட்சத்துக்கு மேல் ராம நாமம் எழுதியவர்களுக்கு விழா எடுக்க இருப்பதாக ராம் நாம் வங்கியின் நிர்வாக குழு தெரிவித்தது. இது தொடர்பாக நிர்வாகக் குழு உறுப்பினர் குஞ்சன் வர்ஷினி கூறியதாவது: வங்கி சார்பில் ராம நாமம் எழுதுவதற்காக புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் தினமும் 108 முறை ராமநாமம் எழுதி தங்கள் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இதில் ஆர்வத்துடன் பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் இதற்காக அலைபேசி செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. அயோத்தி தீர்ப்பு வெளியாகும் வரை ராம நாமம் எழுதி அனுப்பலாம் என கூறப்பட்டது. 1.25 லட்சத்துக்கு மேல் ராம நாமம் எழுதியவர்களுக்கு போனஸ் வழங்க வங்கி முடிவு செய்துள்ளது. பிரயாக்ராஜில் அடுத்தஆண்டு நடக்கும் மகா மேளாவின் போது 1.25 லட்சத்துக்கு மேல் ராம நாமம் எழுதியவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும். அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சான்றிதழ் மற்றும் தேங்காய் வழங்கப்படும். ஒரு கோடிக்கு மேல் ராம நாமம் எழுதியவர்களுக்கு மகா மேளாவில் தங்குவதற்கு இடவசதி செய்து கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Advertisement