Advertisement

திருமுருகநாதசுவாமி கோவிலில் பாதுகாப்பு குளறுபடி: பக்தர்கள் வேதனை

அவிநாசி,:ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருமுருகநாதசுவாமி கோவிலில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குளறுபடி, பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. திருச்செந்துாருக்கு போக முடியலேன்னா, பரவாயில்ல; திருமுருகன்பூண்டிக்காவது போய்ட்டு வந்துடுங்க என, பக்தர்கள் பேசும் அளவுக்கு பிரசித்தி பெற்றது, அவிநாசி அருகேயுள்ள திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் சுவாமி கோவில். சோழர் காலத்தில் கட்டப்பட்ட, ஆயிரத்து 300 ஆண்டு பழமை வாய்ந்தது.

கட்டடங்கள், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. இங்குள்ள தீர்த்தங்கள், சித்த பிரமையைப் போக்கும் வல்லமை கொண்டவை என்பது ஐதீகம். கோவிலில் பூஜை நடத்துவது, விழா எடுப்பது, நிர்வகிப்பது போன்ற பணிகள், இந்து அறநிலையத்துறை வசம் உள்ளது.கடந்த வாரம், கோவில் சுவரில் துளையிட்டு நடந்த கொள்ளை முயற்சி சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து, பக்தர்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. கோவிலில் வணங்கினால், திருமுருகநாதரின் அருள் பரிபூரணமாக கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். அதேநேரம், கோவில் சுற்றுச்சுவர் பலமின்றி உள்ளது. பலன் கிடைக்கும் கோவிலில், பலம் இல்லாத நிலையா என்று பக்தர்கள் வேதனைப்படுகின்றனர்.

கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், கோவிலின் முன், பின் என, தலா, எட்டு வீதம், 16 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, 16 கேமரா பொருத்த அனுமதி பெறப்பட்டுள்ளளது. கோவில் உண்டியல் மற்றும் கதவுகளில் அலாரம் பொருத்தப்பட்டுள்ளது. அவற்றை உடைக்கவோ, தகர்க்கவோ முற்பட்டால், சைரன் ஒலி எழும்பும்; அதனால், கொள்ளையர்கள் சுவரில் துளையிட்டு உள்ளே நுழைய முற்பட்டுள்ளனர். பக்கவாட்டு சுவரை பலப்படுத்த வேண்டும்; கழிப்பறை வசதி உள்ளிட்ட சில கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என, தொல்லியல் துறையினருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்றனர். தொடர்பு எல்லைக்குவெளியே...கோவில் கட்டடத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள, இந்திய தொல்லியல் துறையின் சென்னை அலுவலக கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் சுப்ரமணியத்திடம் விளக்கம் கேட்க, அலுவலக எண்ணை பலமுறை தொடர்பு கொண்ட போதும், அவர், கள ஆய்வுக்கு சென்று விட்டார் என்ற பதிலையே அவரது உதவியாளர் கூறினார். அவரிடம் மொபைல் எண் இல்லை எனவும் கூறினார்.

Advertisement
 
Advertisement