Advertisement

திருமணமான பெண்கள் பெற்றோருக்கு பாத பூஜை

கோவை: திருமணமாகி, புகுந்த வீட்டிற்கு சென்ற பெண்கள், பெற்றோரை அழைத்து, குடும்பத்துடன் பாதபூஜை செய்து, வாழ்த்து பெற்ற நிகழ்ச்சி, பார்த்தவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்துள்ளது, அய்யம்பாளையம் கிராமம். இங்குள்ள, கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த குழாயர் குல பெண்கள் பலர், திருமணமாகி பல்வேறு பகுதிகளில், தங்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். புகுந்த வீட்டுக்குச் சென்ற பெண்கள், பிறந்த வீட்டில் உள்ள பெற்றோர் மற்றும் உடன் பிறந்த சகோதரர்களுக்கு மரியாதை செய்யும் விதமாகவும், உறவுகள் மேம்படவும், தங்கள் குலதெய்வக் கோவிலில் சந்திக்க முடிவு செய்தனர். இதன்படி நேற்று, சூலுார் அடுத்த நீலம்பூர் வேடசாமி கோவிலுக்கு, 65க்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர்.

அனைவரும் சேர்ந்து, பொங்கல் வைத்தனர். தொடர்ந்து, தங்களது பெற்றோருக்கு பாதபூஜை செய்து, மாலைகள் அணிவித்து, மரியாதை செலுத்தி, அவர்களின் வாழ்த்துகளை பெற்றனர். பின், மேள, தாளத்துடன் ஆரத்தி எடுத்து, தாய், தந்தையரை கோவிலுக்கு அழைத்து வந்தனர். உடன்பிறந்த சகோதரர்களின் மனைவியர், துணைப் பொங்கல் வைத்தனர். சுவாமிக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜைகள் செய்து, பொங்கலை படைத்து அனைவரும் வழிபட்டனர். தாத்தா, பாட்டிகளுக்கு, பெற்றோர் செய்யும் மரியாதைகளை, குழந்தைகள் ஆர்வத்துடன் கண்டு குதுாகலித்தனர். தொடர்ந்து, குழுவாக புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.

Advertisement
 
Advertisement