Advertisement

சபரிமலையில் நெய்யபிஷேகம் நிறைவு: சரங்குத்தியில் எழுந்தருளிய அய்யப்பன்

சபரிமலை: சபரிமலையில் நெய்யபிஷேகம், நேற்று காலை நிறைவு பெற்றது. மண்டல, மகரவிளக்கு காலத்தில் வந்த பக்தர்களை வழியனுப்பும் வகையில், அய்யப்பன் நேற்று இரவு, சரங்குத்தியில் எழுந்தருளினார்.

சபரிமலையில், மண்டல,- மகரவிளக்கு காலத்தில், 60 நாட்களாக நடந்த நெய்யபிஷேகம், நேற்று காலை, 10:30 மணிக்கு நிறைவு பெற்றது. தொடர்ந்து, தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு களபபூஜை நடத்தினார். பிரம்மகலசத்தில் களபம் நிறைக்கப்பட்டு, மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி எடுத்து, கோவிலை வலம் வந்தார். பின், சுவாமிக்கு களபம் அபிஷேகம் நடந்தது; தொடர்ந்து, உச்சபூஜை நடந்தது.நேற்று இரவு, 9:00 மணிக்கு, அய்யப்பன் சரங்குத்தியில் எழுந்தருளினார். தொடர்ந்து, தீப்பந்தம் அணைக்கப்பட்டு, மேளதாளம் நிறுத்தப்பட்டு, அய்யப்பன், மாளிகைப்புறம் கோவில் மணி மண்டபத்துக்கு எழுந்தருளினார். பக்தர்களை அனுப்பி, பூதகணங்களை அழைத்து வருவதாக நம்பப்படுகிறது.

இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்து, வழக்கமான பூஜைகள் நடந்தாலும், நெய்யபிஷேகம் கிடையாது. இன்று வரும் பக்தர்கள், நெய்யை கோவிலில் கொடுத்து, அபிஷேகம் செய்த நெய்யை, பிரசாதமாக பெற்று செல்லலாம்.இரவு, 10:00 மணிக்கு மாளிகைப்புறத்தம்மன் கோவில் மணி மண்டபத்தில், குருதிபூஜை நடக்கிறது. அதன்பின், பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது.நாளை காலை, 5:00 மணிக்கு நடை திறந்த பின், 6:30 மணிக்கு, பந்தளம் மன்னர் பிரதிநிதி பிரதீப்குமார் வர்மா முன்னிலையில், கோவில் நடை அடைத்ததும், திருவாபரணங்கள் பந்தளத்துக்கு புறப்படும்.

Advertisement
 
Advertisement