Advertisement

தஞ்சை பெரியகோயிலில் கும்பாபிஷேக விழா துவக்கம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில், பிப்., 5ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழா, நேற்று காலை, பூர்வாங்க பூஜையுடன் துவங்கியது. உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், 23 ஆண்டுக்கு பின், பிப்.,5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. டிச., 2ம் தேதி, கும்பாபிஷேகத்துக்கான பாலாலயம் நடந்தது. விமான கோபுரத்தில் உள்ள, 12 அடி உயர கலசம் புதுப்பிக்கப்பட்டு, 30ம் தேதி, மீண்டும் பொருத்தப்பட உள்ளது.

நேற்று காலை, பூர்வாங்க பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. முன்னதாக, பெருவுடையார் சன்னதியில், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, மங்கல வாத்தியம் முழங்க, பூர்வாங்க பூஜை நிகழ்ச்சிகள் துவங்கியது. தொடர்ந்து, 30ம் தேதி வரை, ஹோமம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளும், 31ம் தேதி வெண்ணாற்றங்கரையிலிருந்து புனித நீர் கொண்டு வருதலும், பிப். 1ம் தேதியிலிருந்து 5ம் தேதி வரை, எட்டுகால யாகசாலை பூஜையும், 5ம் தேதி காலை, 9:30 மணியிலிருந்து, 10:30மணிக்குள், கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

புதிய கொடிமரம் பிரதிஷ்டை: தஞ்சாவூர் பெரிய கோவிலில், ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட கொடிமரம், காலப்போக்கில் சேதமடைந்தது. மன்னர் இரண்டாம் சரபோஜியால், புதிய கருங்கல் பீடம் கட்டப்பட்டு, 1814ல், புதிய கொடி மரம் நிறுவப்பட்டது. இக்கொடி மரம் பழுதடைந்ததால், 2003ல், புதிய கொடி மரம் அமைக்கப்பட்டது. தற்போது கும்பாபிஷேகத்திற்காக, புனரமைப்பு செய்வதற்காக, கொடி மரத்தில் இருந்த பித்தளை கவசங்களை கழற்றியபோது, கொடிமரமும் சேதம் அடைந்திருந்தது, தெரிய வந்தது. இதையடுத்து, புதிய கொடி மரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. பழைய கொடி மரம், 17 ஆண்டுகளுக்கு பின், 12ம் தேதி அகற்றப்பட்டது. புதிய கொடி மரம் அமைப்பதற்காக, சென்னையிலிருநது, 9 லட்சம் ரூபாய் மதிப்பில், 40 உயர பர்மா தேக்கு வரவழைக்கப்பட்டது. புதிய கொடிமரம் வடிவமைத்து, நேற்று காலை பூஜைகள் நடத்தப்பட்டது. தீபாரதனைக்கு பின், பீடத்தில், கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில், கலெக்டர் கோவிந்தராவ், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, இந்திய தொல்லியல் துறை முதல்நிலை பராமரிப்பு அலுவலர் சங்கர் மற்றும் உபயதாரர்கள் பங்கேற்றனர்.

Advertisement
 
Advertisement