Advertisement

தைப்பூசம் நடத்துவது ஏன்?

நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். இதனை உத்ராயண புண்ணிய காலம் என்பர். இந்த மாதத்தில் மகர ராசியில் இருக்கிறார். சக்தியின் அம்சமாக திகழ்பவர் சந்திரன். தைப்பூச நாளில் சந்திரன் ஆட்சி பலத்தோடு கடக ராசியில் சஞ்சரிக்கிறார். அன்று, மகரத்தில் இருக்கும் சூரியனும், கடகத்தில் இருக்கும் சந்திரனும் ஒருவருக் கொருவர் பலத்தோடு பார்த்துக்கொள்வர். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? அம்பிகை சிவகாமி கண்டு களிக்க, நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடுகிறார். சிவன், பார்வதி இணைந்து ஆடுவதாகவும் சொல்வர். மார்கழி திருவாதிரையில் இறைவன் தனித்து ஆடுகிறார். நடனமாடினால் மகிழ்ச்சி பிறக்கும். மகிழ்ச்சியில் திளைக்கும் இறைவனிடம் நாம் வேண்டியதைப் பெறலாம். இல்லற வாழ்வில் பெறும் இன்பத்தின் அடையாளம் குழந்தை. அம்மையப்பரான சிவபார்வதி, மகிழ்ந்திருந்து ஈன்றெடுத்த ஞானக்குழந்தை முருகன். அவ்வகையில், பெற்றோருக்குரிய தைப்பூசம் பிள்ளைக்கும் சிறப்பான நாளாக அமைந்தது. தைப்பூச நாளில் சிவபார்வதி, முருகப்பெருமானை தரிசித்து வேண்டிய வரம் பெறுவோம்.

Advertisement
 
Advertisement