Advertisement

கோவில் இடங்களுக்கு வாடகை வசூல் ஒத்தி வைப்பு

புதுச்சேரி: வாடகை வசூலிப்பதை ஒத்தி வைக்குமாறு இந்து அறநிலையத்துறை மற்றும் வக்பு வாரியத்திற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் அலுவலக செய்திக்குறிப்பு:புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு கடந்த 23ம் தேதி முதல் வரும் 14ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் நோக்கில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 2,000 வழங்கப்பட உள்ளது. கடைகள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு எவ்வித பிடித்தமும் செய்யாமல் சம்பளம் வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை இந்தமாத வாடகை கேட்டு வலியுறுத்தக்கூடாது என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனைத்தொடர்ந்து கோவில் மற்றும் வக்பு நிலங்களில் குடியிருப்பவர்களிடம் வாடகை வசூலிப்பதை மூன்று மாதங்கள் வரை ஒத்திவைக்குமாறும், மேற்கூறிய இடங்களை வர்த்தக ரீதியாக பயன்படுத்துவோரிடம் வாடகை வசூலிப்பதை ஒரு மாதம் வரை ஒத்திவைக்குமாறும் இந்து அறநிலையத்துறை மற்றும் வக்பு வாரியத்திற்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
 
Advertisement