Advertisement

அம்பிகை புகழ் பாடும் ஆடி பிறந்தது!

தட்சிணாயன புண்ணிய காலமான ஆடிமாதம் இன்று தொடங்கியது. இந்நாளில் கோயில், முன்னோர் வழிபாடு செய்தால் நற்பலன் உண்டாகும். ஆடி அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் (ஜூலை 21,28, ஆக.4,11) வெள்ளிக்கிழமைகளில் (ஜூலை17,24,31, ஆக.7,14) அம்மன் கோயில்களில் வளைகாப்பு வைபவம் நடைபெறும். பக்தர்கள் வழங்கும் கண்ணாடி வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்வர். இதை அணியும் கன்னியருக்கு திருமணம் கைகூடும். பிள்ளை இல்லாத பெண்களுக்கு குழந்தை வரம் உண்டாகும். மழை காலத்தின் தொடக்கமான ஆடியில் தொற்று நோய் பரவாமல் தடுக்க கிருமி நாசினியான வேம்பு, எலுமிச்சை, எளிதில் ஜீரணமாகும் கூழ் அம்மனுக்கு படைக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்படும். இது தவிர ஆடிக்கார்த்திகை (ஜூலை16, ஆக.12) மகாபிரதோஷம்(ஜூலை18, ஆக.1),ஆடி அமாவாசை(ஜூலை 20), ஆடித்தபசு, ஆடிப்பெருக்கு(ஆக.2), ஆடிப்பூரம், நாகசதுர்த்தி(ஜூலை 24), கருட பஞ்சமி(ஜூலை25), கருடஜெயந்தி(ஜூலை 28) வரலட்சுமி விரதம்(ஜூலை31) மகாசங்கட ஹரசதுர்த்தி( ஆக.7) என மாதம் முழுவதும் கோயில்களில் வழிபாடு நடந்த வண்ணமிருக்கும். இத்தகு சிறப்பு மிக்க ஆடியை வரவேற்று வழிபடுவோம்.
நன்றி சொல்லும் நன்னாள்: சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய ஆறுதீப்பொறிகள் சரவணப்பொய்கையில் ஆறு குழந்தைகளாக மாறின. அந்த குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை சிவன் கார்த்திகைப்பெண்கள் ஆறு பேரிடம் ஒப்படைத்தார். அவர்களும் ஆறுமுகனை வளர்த்து ஆளாக்கினர். அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதத்தில், ஆடி கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகனை நினைத்து பக்தர்கள் விரதமிருப்பர். ஆடி கார்த்திகை நாளில் விரதமிருந்தால் முருகன் மனம் குளிர்ந்து அருள்புரிவார். இந்த ஆண்டு ஜூலை 16, ஆக.12ல் ஆடிக்கார்த்திகை வருகிறது.

Advertisement
 
Advertisement