Advertisement

மாதேஸ்வரன் மலையில் கார்த்திகை தீப விழா

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள மாதேஸ்வரன் மலையில், கார்த்திகை மகாதீபம் ஏற்றும் விழா நடந்தது.

மேட்டுப்பாளையம் அருகே குட்டையூரில் உள்ள மலை மீது, மாதேஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த, 10 ஆண்டுகளாக கோவில் நிர்வாகத்தினர், 110 லிட்டர் கொள்ளளவு கொண்ட பித்தளை கொப்பரையை செய்து, அதில் நெய் ஊற்றி, காடாத் துணியில் திரி அமைத்து தீபம் ஏற்றி வருகின்றனர். கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, கொப்பரை வைத்து, அதில் நெய் ஊற்றி, 100 மீட்டர் காடாத் துணியில் நெய்யை நனைத்து சுற்றினர். அதன் பிறகு மாலை, 6: 00 மணிக்கு தலைமை பூசாரி மகேந்திரன் பூஜை செய்து, ஊர் பொதுமக்கள் முன்னிலையில் மகாதீபம் ஏற்றினர். அப்போது கோவிலை சுற்றி இருந்த ஏராளமான பக்தர்கள்‌, மலை மாதேஸ்வர சுவாமிக்கு, அரோகரா கோஷம் போட்டனர். பின்பு பக்தர்கள் மாதேஸ்வர சுவாமியை வழிபட்டனர். இந்த மகா தீபம் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும். இதேபோன்று சிறுமுகை கிச்சகத்தியூரில் உள்ள விருட்ச பீடத்தில், கார்த்திகை தீபம் ஏற்றும் விழா நடந்தது. அங்கு புதிதாக அமைக்கப்பட்ட பஞ்சலிங்கம், பாதாள லிங்கம் முன்பாக லக்ஷ்மி தாச சுவாமி தீபம் ஏற்றினார். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement
 
Advertisement