Advertisement

மூன்றாம் ராஜேந்திர சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே, மூன்றாம் ராஜேந்திர சோழன் ஆட்சி கால ஏரி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகா, மூக்கனுார் பகுதியில் விழுப்புரம் அரசு கலைக்கல்லுாரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ், முண்டியம்பாக்கம் ஜோதிபிரகாஷ், விழுப்புரம் முபாரக், வரலாற்று மாணவர் குமரகுரு ஆகியோர் கள ஆய்வு செய்தனர்.அங்கு ஏரிக்கரை பகுதியில் உள்ள பாறையில், கல்வெட்டு கண்டுபிடிக்கப் பட்டது.

இது குறித்து பேராசிரியர் ரமேஷ் கூறியதாவது; சோழ மன்னன் மூன்றாம் ராஜேந்திர சோழனின் ஆட்சி காலத்தில், இப்பகுதியில் குறுநில மன்னராக இருந்த வன்நெஞ்ச பெருமாளான வானகோவரையனின் 16வது ஆட்சியாண்டான சகரையாண்டு 1182 பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவர், மரகதசோழன் என்னும் மூன்றாம் ராஜராஜனின் பெயரை முன்னொட்டாக கொண்ட குறுநில மன்னர். இவரது காலத்தில் ஆரணி என்ற ஊர் ஏரியின் தென்கரையில் கால்வாய் வெட்டி, மூற்கனுார் ஏரி வரை கொண்டு வந்து, இந்த ஏரியின் தென்கரையில் புதிய கால்வாய் வெட்டி, கடுவனுார் ஏரியில் புகுமாறு, பூமன திருநீற்று செகராயன் என்பவர் செய்ததாக கல்வெட்டு குறிப்பிடுகிறது. மூற்கனுார் என்பது மருவி, தற்போது மூக்கனுார் என அழைக்கப்படுகிறது. மூன்று ஊர்களின் ஏரியிலிருந்து கால்வாய் வெட்டி, நீராதாரங்களை பாதுகாத்து வேளாண்மைக்கு வழிவகை செய்ததை கல்வெட்டு செய்தி தெரிவிக்கிறது. இது சோழர் ஆட்சி காலத்தின் குழப்பமான இறுதி காலம் என கல்வெட்டு அறிஞர் ராசகோபால் குறிப்பிடுகிறார்.

Advertisement
 
Advertisement