Advertisement

பழநி சிலை மோசடி: மீண்டும் விசாரணை

பழநி:பழநி முருகன் கோயிலில்நவபாஷாண மூலவர் சிலையை மறைத்து வைப்பதற்காக நடந்த ஐம்பொன் சிலை மோசடி வழக்கு தொடர்பாக சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மீண்டும் விசாரணையை துவக்கினர். பழநி முருகன் கோயிலில் 2004ல் நவபாஷாண மூலவர் சிலையை மறைத்து ஐம்பொன் சிலை வைக்கப்பட்டது. அந்த சிலை கருமையாக மாறியது. இதில் சர்ச்சை ஏற்பட்டதால் சிலை அகற்றப்பட்டு தனி அறையில் வைக்கப்பட்டது. ஐம்பொன் சிலையை சென்னை ஐ.ஐ.டி., உலோகவியல்துறையினர் ஆய்வு செய்தனர்.221.100 கிலோ எடையும், 111 செ.மீ., உயரமும் கொண்ட இந்த சிலை செய்ததில் தங்கம், வெள்ளி எடை குறைந்திருந்தது. பின்னர் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க எடுத்து செல்லப்பட்டது.

மீண்டும் விசாரணை துவக்கம்: சிலை மோசடி தொடர்பாக அப்போதைய சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் குழுவினர் பல கட்ட விசாரணை நடத்தினர். இதில் அப்போதைய இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் தனபால், இணைஆணையர் கே.கே.ராஜா, ஸ்தபதி முத்தையா, 2004ல் பணிபுரிந்த ஓய்வுபெற்ற நகை மதிப்பீட்டாளர்கள் புகழேந்தி, தேவேந்திரன் கைதாகினர்.நேற்று மீண்டும் ஏ.டி.எஸ்.பி., மாதவன் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 7 பேர் பழநிக்கு வந்தனர். தனியார் தங்கும் விடுதியில் வைத்து பழநி கோயிலில் தற்போது பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

Advertisement
 
Advertisement