Advertisement

செல்லியாண்டியம்மன் கோயிலில் பக்தர்கள் சேறு பூசி நேர்த்திக்கடன்

பவானி: பவானி, செல்லியாண்டியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு, பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் சேறு பூசி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாவட்டம், பவானியில் பிரசித்திபெற்ற, 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த செல்லியாண்டியம்மன் கோவில் உள்ளது. கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளுடன், இந்தாண்டுக்கான மாசி மாத பண்டிகை கடந்த, 16ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது.

நேற்று முன்தினம் சுவாமியின் கருவறையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிநீர் ஊற்றி வழிபாடு செய்தனர். அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதற்காக, எல்லையம்மன் கோவிலில் இருந்து, மேட்டூர் சாலை வழியாக, செல்லியாண்டியம்மன் கோவிலுக்கு அம்மன் அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, பவானி சுற்று பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், உடலில் சேறு பூசி வந்தனர். காய்கறி வியாபாரிகள், காய்கறி, பழங்களை மாலையாக அணிந்து வலம் வந்தனர். சிலர் அம்மன், சிவன் உள்ளிட்ட வேடங்களில் வந்து, நேர்த்திக்கடன் செலுத்தி, சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில், ஒருவருக்கு ஒருவர் சேற்றை பூசி விளையாடினர். இதன் மூலம், உடலில் தோல் உள்ளிட்ட நோய் பிரச்னைகள் நீங்கும் என்ற ஐதீகம் பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதே போன்று ஊர்வலத்தில் சிறு, குறு தொழில் செய்பவர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேற காசு, பழங்கள், மிட்டாய் உள்ளிட்ட பொருட்களை சூறையிட்டு பிரார்த்தனை செய்தனர். இந்த நுாதனமான திருவிழாவில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பண்டிகையை முன்னிட்டு, நேற்று பவானி நகரில், போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில், நுாற்றுக்கணக்கான போலீசார் ஈடுபட்டனர்.

Advertisement
 
Advertisement