Advertisement

நாரதர் பகுதி-6

லட்சுமிதேவி நேராக நாராயணனிடம் சென்றாள். அன்பரே! தங்கள் மீது நான் எவ்வளவு பிரியம் வைத்திருக்கிறேன் என்பதைத் தாங்களே அறிவீர்கள்! உங்கள் மார்பிலேயே குடியிருப்பவள். நீங்கள் சயனிக்கும் போது, சற்றும் கண் அயராமல், தங்கள் திருவழகை ரசித்தபடி, பாதங்களை பிடித்து விடுபவள். சகல ஐஸ்வர்யங்களுக்கும் சொந்தக்காரி, என்றவளை இடைமறித்த பரந்தாமன், லட்சுமி! எதற்காக இதைச் சொல்கிறாய்? இதெல்லாம் எனக்கு தெரிந்தது தானே! என் மனைவியை விட உலகில் உயர்ந்தவர் உண்டோ? கணவனைக் கவனிப்பதில் உனக்கு நிகர் நீ தான், என்றார். நடைமுறையில் அப்படியில்லையே! எனக்கு இசை ஞானம் இல்லை என்றீர்களாமே! எனக்கு இசைக்கருவிகளை மீட்டத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அந்த இசையைப் படிக்கவும், இசைக்கருவிகளை வாங்கவும் நான் நினைத்தால் தான் முடியும். செல்வமின்றி, இவற்றை யாரால் கற்க இயலும்? என்ற லட்சுமியிடம், லட்சுமி! உனக்கு என்னாயிற்று? உனக்கு இப்போது என்ன வேண்டும்? என்பதைத் தெளிவாகச் சொல், என்றார் நாராயணன். நாரதன் தன்னிடம் கூறியதை ஒன்று விடாமல் விவரித்தாள் லட்சுமி. ஓ! இது நாரதன் கூத்தா? வார்த்தைக்கு வார்த்தை நாராயணா...நாராயணா... என்று என்னை அழைக்கிறான். ஆனால், என் வீட்டிலேயே குழப்பம் உண்டாக்கி விட்டு போய்விட்டான். வரட்டும், அவனைக் கவனித்துக் கொள்கிறேன், என்ற நாராயணனிடம், தன் கேள்விக்கு பதில் கிடைக்காததால், சற்றே கோபித்துக் கொண்டு தன் இருப்பிடம் போய்விட்டாள் லட்சுமி. நாரதரை மனதிற்குள் வாழ்த்திய நாராயணன், அவர் இப்போது எங்கிருப்பான் என பார்த்த போது, சிவலோகத்துக்குள் புகுவதைப் பார்த்து கலகலவென சிரித்தார். நந்தியம்பதியிடம் அனுமதி பெற்று பார்வதி சமேத சிவபெருமானைச் சந்தித்தார் நாரதர். நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, எனச்சொல்லி அவரது திருவடியைப் பணிந்தார். வா நாரதா! இன்றைய உன் மூவுலக பயணம் எப்படி இருக்கிறது? என்று ஏதும் தெரியாதவர் போல் கேட்டார் சிவன்.அதற்கு நாரதர், மகாபிரபு! இன்று வைகுண்டம் மட்டும் தான் போனேன். அங்கேயே சிறு குழப்பம். இதன்பிறகு எங்கு போவதென தெரியவில்லை. தங்களிடம் பிரச்னையை சொல்லலாம் என்றாலும், இது பெண்கள் தொடர்புடைய விஷயம் என்பதால், பார்வதிதேவியாரிடம் சொல்வது தான் முறையாக இருக்கும் என்று நினைத்து இங்கு வந்து விட்டேன். லோகத்திற்கே தாயான அவர், என் சந்தேகத்தை எளிதில் தீர்த்து வைத்து விடுவார் என்று உறுதியாக நம்புகிறேன், என்றார்.குழந்தாய் நாரதா! முதலில் நடந்ததைச் சொல். அதன்பிறகு தீர்வைக் காண்போமே, என்றாள் பார்வதி நாரதரின் நடுக்குடுமியை வருடியபடி. நடந்ததை தேவியிடம் தெளிவாகச் சொன்னார் நாரதர். கலகலவென நகைத்தாள் பார்வதி. சிவபெருமான் அவளிடம், தேவி! நாரதன் நியாயத்தைத் தானே சொன்னான். கலை, கலைவாணிக்கு சொந்தம். செல்வம், லட்சுமிக்கு சொந்தம். தத்தமக்கு உரியதை அவர்கள் தெளிவாகத்தான் சொல்லியுள்ளனர். நீ ஏன் பைத்தியக்காரி போல சிரிக்கிறாய். நாரதனிடம், அந்த இரண்டும் சமநிலையுடையது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டியது தானே, என்ற சிவனிடம், பெருமானே! தாங்களே சொல்லிவிட்ட பிறகு அன்னையார் மறுக்கவா போகிறார்கள். கல்வியும், செல்வமும் சமநிலையுடையது. இதுதான் என் கேள்விக்கு பதில் என்றால், போதும்...இத்துடன் பிரச்னை தீர்ந்ததாக நினைத்துக் கொள்கிறேன், என்றார் நாரதர். ஏ...நாரதா... கோபம் கொப்புளிக்க பார்வதிதேவி நாரதரை அழைக்க, தாயே, பராசக்தி...ஏன் திடீரென இந்த காளிகோலம். நான் ஏதாவது தவறாக பேசிவிட்டேனா, என்றார் பதைபதைப்புடன் நடித்த நாரதர். நீ பிறந்ததே தவறு தான். பிரச்னைக்கு தீர்வு சொல்ல இந்த மனிதர் யார்? நீ இவரிடமா கேள்வி கேட்டாய். கேள்வி யாரிடம் கேட்கப்படுகிறதோ, அவர்கள் பதிலளித்தால் தான் முறையானது, மரியாதையும் கூட. மேலும் இவரது மைத்துனன் மனைவி லட்சுமி. அவ்வகையில் அவள் இவருக்கு தங்கை முறை. தங்கையை எந்த சகோதரனாவது விட்டுக் கொடுப்பானா? அவ்வகையில், இவர் தன் தங்கையின் கருத்தை ஆதரிக்கிறார். இனிமேல், கேள்வியை என்னிடம் கேட்டால், பதிலையும் என்னிடமே கேட்டுப் பெறு. இல்லாவிட்டால், என் கண்ணிலேயே படாதே, ஓடிவிடு,என்றாள் முகம் சிவக்க. தாயே! அவரை எப்போதுமே நான் உயர்த்தி தான் பேசுவேன். நீங்கள் இப்போது என்னைக் கோபித்தீர்கள். எனக்கு ஏதாவது ஆனதா? ஆனால், அவர் கருத்தை மறுத்தால், உடனே நெற்றியிலுள்ள கண்ணை படக்கென திறந்து விடுவார். இப்படித்தானே இவர் உலகத்துக்கே நல்லது செய்யப் போன மன்மதனையே எரித்தார். இப்போது கூட பாருங்கள்! கட்டிய மனைவியின் கருத்தை ஆதரிக்காமல், சகோதரியின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். இவரைப் போன்றவர்களிடம் ஒதுங்கிப் போவது தான் எங்களைப் போன்றவர்களுக்கு நல்லது. இல்லாவிட்டால், சாபம் கொடுத்து பூலோகத்தில் மானிடப் பிறவி கொடுத்து, துன்பத்தில் மூழ்கடித்து விடுவார். உங்களையே தக்கனின் மகளாகப் பிறக்கச் செய்தவர் அல்லவா? என்று பற்ற வைத்தார் நாரதர்.நியாயத்தைச் சொன்னாய் நாரதா. அது கிடக்கட்டும். சரஸ்வதிக்கு சொந்தமானது இசைக்கலை. அது ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம் தான். அந்த இசையை ஒரு குருநாதரிடம் கற்கவும், இசைக்கருவிகளை வாங்கவும் செல்வம் வேண்டும் என்ற என் மைத்துனி லட்சுமியின் கருத்திலும் எந்த பாதகமும் இல்லை. ஆனால், வீணை இருந்தும் பயனில்லை. அதை மீட்டும் முறையும் தெரிந்தும் பலனில்லை. இதை மீட்ட கைகளுக்கு அசையும் சக்தி வேண்டுமே. அந்த சக்தி நானல்லவா? என்றாள். தாயே! பார்த்தீர்களா! இந்த விபரம் தெரியாமல் அல்லவா, லட்சுமி தேவியார் சொன்னதை நான் நம்பி விட்டேன். உங்கள் கருத்து தான் சரி, என்று சொல்லி, பார்வதிதேவியின் பாராட்டைப் பெற்று, நடந்த விபரத்தை தன் தாய் சரஸ்வதியிடம் சொல்வதற்காக கிளம்பினார் நாரதர்.

Advertisement
 
Advertisement