Advertisement

நாரதர் பகுதி-7

சத்தியலோகம் களை கட்டியிருந்தது. அன்னை கலைவாணி இசைத்த வீணாகானம் அந்த லோகத்தை ரம்மியமாக்கிக் கொண்டிருந்தது. தேவருலகம் அந்த கானத்தில் மயங்கிக் கிடந்தது. இந்திரலோகத்தில் எதிரொலித்த அந்த இசை கேட்டு, ரம்பா, ஊர்வசி, திலோத்துமா ஆகியோர் தங்களை மறந்து நடனமாடினர். இந்த இனிமையான சூழலில், நாரதர் அங்கு வந்து சேர்ந்தார். அந்த இசை ஞானியும், தன் அன்னையின் இசையில் மயங்கினார். சொந்த வீடல்லவா! அதனால் சற்றே உரிமையுடன் அன்னையின் அருகில் அமர்ந்து, கானத்தை ரசித்தார். இசைவெள்ளத்திற்கு சற்றே ஓய்வு கொடுத்து, கலைவாணி கண் திறந்தாள். அருகில் நாரதர் அமர்ந்திருந்தார். மகனே! எங்கே போயிருந்தாய்? சிவபெருமான், உன்னை திரிலோக சஞ்சாரியாக திரிய வரம் தந்ததில் இருந்து நீ வீட்டிலேயே இருப்பதில்லை. வீட்டில் இருந்து தந்தைக்கு உதவியாக, தாய்க்கு அனுசரணையாக ஏதாவது உதவி செய்யலாம் என்ற எண்ணமாவது உன்னிடம் இருக்கிறதா? தாய் கடிந்து கேட்டாலும், மகன் மீதான பாசமும், அக்கறையும் வெளிப்பட்டன. அம்மா! என்னைத் திட்டாதீர்கள். நான் ஒன்றும் பொறுப்பில்லாதவன் அல்ல. ஆனால், பொறுப்பாக பதில் சொல்ல வேண்டியவர்கள் தான் பொறுப்பற்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் தங்களைப் பற்றி... என் தாய்க்கு ஏதாவது இழுக்கு என்றால், அதைப் போக்குவது மகனான எனது கடமையல்லவா? அதை எப்படி செய்வதென தெரியாமல் தான் விழித்துக் கொண்டிருக்கிறேன். அலைந்து கொண்டிருக்கிறேன்,. சரஸ்வதிக்கு ஏதும் புரியவில்லை. இந்நேரத்தில், பிரம்மா வந்தார். சரஸ்வதியும், நாரதரும் அவரது பாதக்கமலங்களை நமஸ்கரித்தனர். மகனே! எங்கே சென்றிருந்தாய்! நீண்ட நாளாக உன்னைக் காணவில்லையே, என்றதும், அதைத்தான் நானும் விசாரித்தேன். அவன் என்னென்னவோ சொல்கிறான். எனக்கு இழுக்கு என்கிறான், என்றாள் சரஸ்வதி. நாரதா! உன் சேஷ்டையை யாரிடமாவது காட்டினாயா? உன் தாயை யாரோ பழித்திருக்கிறார்கள் என்றால், எந்தச் சூழ்நிலையில் அப்படி பழித்தார்கள்? நீ ஏதாவது அவர்களிடம் வம்பிழுத்தாயா? அந்த கோபத்தில் சரஸ்வதியைப் பற்றி ஏதாவது சொன்னார்களா? என சற்று காட்டமாகவே கேட்டார் பிரம்மா. தந்தையே! இந்த உலகத்தில் என்னை நம்புவார் யாருமில்லை என ஆகிவிட்டது. எல்லாம் நீங்கள் என் தலையில் எழுதிய விதிதான். நான் நல்லது செய்தாலும் எல்லாருக்கும் கெட்டதாகத்தான் தெரிகிறது, என அப்பாவித்தனமாக விழிகளை உருட்டிக் கொண்டு சொன்ன நாரதர் நடந்ததைச் சொன்னார். தாயே! வைகுண்டம் சென்றேன் ஸ்ரீமன் நாராயணனை தரிசிக்க. அவரருகே அமர்ந்திருந்த லட்சுமி தேவியார், உன் அம்மா வைத்திருக்கிறாளே வீணை. அது அவளுக்குச் சொந்தமானதல்ல. நான் செல்வத்துக்கு அதிபதி. அந்த செல்வத்தைக் கொண்டு வாங்கப்பட்டது தான் இந்த வீணை, என்றார்கள், என நாரதர் சொல்ல, பிரம்மா இடைமறித்தார். ஏ நாரதா! கலகம் செய்யாதே! யாராவது ஒருவர், நாம் ஏதாவது சொல்லாமல், தானாக இப்படி பேசுவார்களா? நீ தான் ஏதாவது சொல்லியிருப்பாய், அவள் அதற்கு அப்படி பதில் சொல்லியிருப்பாள், என்றார் கோபமாக.அப்பா! நீங்கள் எப்போதுமே இப்படித்தான். என் மீது சந்தேகப்படுவதே வாடிக்கையாகி விட்டது. நாராயணனும், லட்சுமியும் தற்செயலாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு வாதம் வந்து விட்டது. அதில் என்னையும் அவர்களாகத்தான் இழுத்தனர். அப்போது, லட்சுமி உதிர்த்த வார்த்தைகள் தான் இவை, என்றார் நாரதர் முகத்தை தாழ்த்திக் கொண்டு. வெள்ளைத் தாமரைப் பூவில் வீணாகானம் செய்யும் சரஸ்வதிக்கு கோபம் வந்து விட்டது. என் அன்புக்கணவரே! என் மகனை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்திருக்கிறாள் இந்த லட்சுமி. என் வீணை இசையின் மகிமையை தாங்க முடியாத அவள், இப்படி என்னை அவமானப்படுத்தி இருக்கிறாள். நீங்கள் அவளைக் கண்டித்து வாருங்கள். நீங்கள் போகாவிட்டால் நானே போகிறேன், என்று சரஸ்வதி பொங்கியதும், அம்மா! அங்கே மட்டும் போனால் போனாது. சிவலோகத்தில், பார்வதிதேவியையும் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும், என்றார் நாரதர்.பிரம்மா அதிர்ந்து விட்டார். அடேய்! சிவலோகத்துக்கு வேறு போனாயா? அங்கு என்ன வம்பு செய்தாயோ? அந்த சிவனுக்கு எடுத்ததற்கெல்லாம் கோபம் வரும். ஐந்து தலையுடைய என்னை ஏற்கனவே நாலு தலையாக்கி விட்டார். இனி நெற்றிக்கண்ணையும் திறப்பார், என்று நடுங்கினார். சரஸ்வதி கோபக்கனல் வீச, அவள் என்ன சொன்னாள்? சொல், என்று விரட்டினாள்.அம்மா! நீங்கள் பலமில்லாத வராம். நீங்கள் வீணை இசைப்பதற்குரிய சக்தியை அந்த தேவி தான் கொடுக்கிறாராம். தன் அருள் இல்லாவிட்டால், உன் அன்னை இசைவாணியாக முடியுமா? என்கிறார். மனம் வேதனைப்பட்டு, வந்துள்ளேன். என் சொந்தத்தாயான நீங்கள் தான் உயர்ந்தவர் என்பதை நிரூபிக்க வேண்டும். அதைச் செய்தால் தான் எனக்கு உணவு, தூக்கம் எல்லாம்... என்று சொல்லிவிட்டு அகன்றார்.பிரம்மாவுக்கு புரிந்து விட்டது. மூன்று லோகங்களுக்கும் இடையே பயங்கரவாதப்போர் நடக்கப்போகிறது என்று. நடுக்கத்துடன், அவர் நாராயணனைச் சந்திக்கச் சென்றார்.பரந்தாமா! என் மகன் நாரதன் தங்கள் பக்தன். நாராயணா என்ற வார்த்தையைத் தவிர வேறெதையும் உச்சரித்து அறியான். லட்சுமிதேவியார் ஏதோ தற்செயலாகச் சொல்ல, அதை அவன் அன்னையிடம் சொல்லி விட்டான். சரஸ்வதி கோபத்தில் இருக்கிறாள். அவள் இங்கு வந்தால், கோபித்துக் கொள்ளாதீர்கள், என்று பணிவாக சொன்ன பிரம்மனிடம், பிரம்மா! அவளைக் கோபிக்க எனக்கு வழி இல்லையே! ஏனெனில், நாரதன் உன்னிடம் சொன்னது அனைத்தும் உண்மை. என் மனைவி அவ்வாறு பேசியது நிஜம் தானே, என்றார் கண்ணைச் சிமிட்டியபடி நாராயணன்.

Advertisement
 
Advertisement