Advertisement

இஸ்லாமியர் பெயரில் சுமைதாங்கி கல்

உத்திரமேரூர்-பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழர்கள், தங்கள் வீட்டு கர்ப்பிணிகள், குழந்தை பிரசவிப்பதற்கு முன் இறக்க நேரிட்டால், அவர்கள் நினைவாக எழுப்பப்படுவதே, சுமைதாங்கி கல் என அழைக்கப்படுகிறது. இதில் இறந்த பெண்ணின் பெயர், ஆண்டு உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருக்கும்.இவை, பெரும்பாலும் சாலையோர மரத்தின் நிழலிலும், விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதைகள் மற்றும் நீர்நிலைகளின் அருகிலும் நிறுவப்பட்டிருக்கும். வழிபோக்கர்கள், தங்கள் சுமையை இந்த கல்லில் வைத்து, இளைப்பாறி செல்வர். பிறர் சுமையை, கல்லில் இறக்கி வைப்பதன் மூலம், இறந்தவரின் ஆன்மா சாந்தி அடைந்ததாக, தமிழர்கள் நம்பினர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், இன்றும் பல இடங்களில், சுமைதாங்கி கற்களில், தமிழ் பெண்களின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது.இந்நிலையில், தமிழர்களைப் போல, இஸ்லாமியர்களால், 1936ல், உத்திரமேரூர் நல்ல தண்ணீர் குளக்கரையில், ஆர்.தாவூத்கான் என்ற ஆண் பெயர் பொறிக்கப்பட்ட சுமைதாங்கி கல் இன்றும் உள்ளது.இது குறித்து, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவைஆதன் கூறியதாவதுஉத்திரமேரூரை சுற்றி பல இடங்களில் காணப்படும் சுமைதாங்கி கற்கள், பெண்களின் பெயரில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், உத்திரமேரூர் நல்ல தண்ணீர் குளக்கரையில் உள்ள சுமைதாங்கி கல், இஸ்லாமியர்களால் அமைக்கப்பட்டது மட்டுமல்லால், ஆர்.தாவூத்கான் என்ற ஆண் பெயரில் அமைக்கப்பட்டு உள்ளது. இது மிகவும் அரிதாக காணப்படும் சுமைதாங்கி கல்.பொதுவாக, இறந்த கர்ப்பிணிகள் நினைவாக எழுப்பப்பட்ட சுமைதாங்கி கல், நாளடைவில், அறச்செயலாக, அதாவது தர்ம காரியமாக, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வைக்கப்படும் பழக்கமாக மாறியது. அது போன்றதொரு சுமைதாங்கி கல்லாக இதை கருதலாம்.பழமைக்கு சாட்சியாய் வரலாற்றை சுமந்து நிற்ப தோடு, தமிழர்களைப் போல, இஸ்லாமியர் அமைத்த அரிய சுமைதாங்கி கல்லை பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Advertisement