Advertisement

சென்னிமலை முருகன் அக்னி நட்சத்திர விழா ரத்து

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர விழா, நடப்பாண்டும் ரத்து செய்யப்பட்டது. சென்னிமலை முருகன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திர விழா, விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

36வது ஆண்டாக, 2019 வரை நடந்தது. இதையொட்டி நூற்றுக்கணக்கான பக்தர்கள், கங்கை, யமுனை, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி, காவிரி நதிகளுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருவர். விழா நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சென்னிமலை மாரியம்மன் கோவிலில் இருந்து, சப்த நதி தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்படுவர். சென்னிமலை மலை கோவிலை, 16 கி.மீ., சுற்றி கிரிவலம் வந்து, மலை மீதுள்ள முருகன் கோவிலை அடைவர். அடுத்த நாள் காலை முருகன் கோவிலில், கணபதி ஹோமம் மற்றும் பூர்ணாகுதி, முதல்கால வேள்வி பூஜை, தீபாராதனை நடக்கும். முக்கிய நிகழ்வாக முருக பெருமானுக்கு சப்தநதி தீர்த்த அபிஷேகம், 1,008 கலசாபிஷேகம், மகா வருண ஜெப ஹோமம் நடக்கும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வர். கடந்த ஆண்டு கொரோனா பரவலால், அக்னி நட்சத்திர விழா ரத்து செய்யப்பட்டது. நடப்பாண்டும் கொரோனா இரண்டாவது அலை படுவேகமாக பரவி வருவதால், விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement
 
Advertisement