Advertisement

நூற்றாண்டு கால கோயில் சிற்பங்களை புதுப்பிக்கும் பேராசிரியர்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ளது புலியூரான் கிராமம். இங்குள்ள கோவிலில் முற்கால பாண்டியர் காலத்தில் (ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய) சைவ சமயமும், சமண சமயமும் நன்கு வளர்ச்சி பெற்றிருந்தது. அதற்குச் சான்றாக, இந்த ஊரில் உள்ள சிவன் கோயிலில், தொன்மை வாய்ந்த விநாயகர், முருகன், நந்தி சிலைகள் உள்ளன. இந்த ஊரில் கண்டறியப்பட்ட சமண சமய தீர்த்தங்கரர், பார்சுவநாதர் சிலைகள் மதுரை திருமலை நாயக்கர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாறு கொண்ட இந்த சிவன் கோவிலில் உள்ள கற்சிலைகளை புதுப்பிக்க கிராமத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் கந்தசாமி இந்த பணியில் தன் மாணவர்களுடன் ஈடுபட்டுள்ளார். அவர் கூறியதாவது, புலியூரான் கிராமத்திற்கு, புலிக்குட்டி நல்லூர் என்ற பெயர் முன்பு இருந்தது. இங்குள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிவன் கோயிலில், செலவுகளுக்காகவும், அந்த கோவிலை பராமரிப்பதற்காகவும் நிலங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கிராமம் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் வெண்பு நாட்டு பிரிவின் கீழ் இருந்த ஊராகும். கிராமத்தில் புகழ் பெற்ற சிவ ஆலயம் பாண்டியர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு, சிவன், நந்தி, விநாயகர், முருகன் உள்ளிட்ட கற்சிற்பங்கள் உள்ளன. இவற்றை பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். எண்ணெய் விளக்கு புகை, சூடம் ஏற்றி, சிற்பங்களில் மாசு படிந்துள்ளது. அவற்றை இந்த ஊரடங்கு காலத்தில் தூய்மைப்படுத்தி, புதுப்பிக்கும் வேலையை இந்த கிராமத்து இளைஞர்கள் மற்றும் கிராம மக்களின் ஒத்துழைப்போடு செய்து வருகிறேன். அரிய பொக்கிஷங்களான இந்த கற்சிலைகளை புனரமைத்து பாதுகாப்பது நமது கடமை. தொடர்ந்து மக்களுடைய வழிபாட்டில் இருப்பதால், கோவில் மற்றும் சிற்பங்களின் வரலாற்றை கிராமத்தின் வருங்கால இளைஞர்களும், ஆய்வாளர்களும் தெரிந்து கொள்வர் என்றார்.

Advertisement
 
Advertisement