Advertisement

வாடகை அறை முன்பதிவு திருமலையில் புதிய முறை அமல்

திருப்பதி : திருமலையில் வாடகை அறை முன்பதிவு செய்வதில் புதிய முறை அமல் படுத்தப்பட்டுள்ளது. திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக, திருமலையில் வாடகை அறைகள் உள்ளன. இந்த அறைகளை நேரடி முன்பதிவு மற்றும் ஆன்லைன் வாயிலாக பக்தர்கள் பெற்று வருகின்றனர். வாடகை அறை தேவைப்படும் பக்தர்கள் திருமலையில் உள்ள மத்திய விசாரணை அலுவலகத்தில் சென்று, தங்களின் முன்பதிவு டோக்கனை காண்பித்து, அறை உள்ள இடத்தின் துணை அலுவலகத்திற்கு சென்று சாவியை பெற வேண்டும்.மத்திய விசாரணை அலுவலகத்தின் அருகில் வாகன நிறுத்தம் இல்லாததால், பக்தர்கள் பலர் அவதியுற்று வருகின்றனர்.

மேலும், அறைகளைப் பெற இரண்டு இடங்களில் பக்தர்கள் வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.இவற்றை எளிமையாக்க, தேவஸ்தானம் புதிய முறையை அமல்படுத்தி உள்ளது. இதன்படி, வாடகை அறை முன்பதிவு செய்த பக்தர்களின் வசதிக்காக திருமலையில் பல்வேறு பகுதிகளில் கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு சென்று பக்தர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். அவர்களின் மொபைல் போனுக்கு, வாடகை அறை அளிக்கப்பட்ட பகுதி மற்றும் அதன் துணை அலுவலகம் குறித்த குறுந்தகவல்கள் அனுப்பப்படும். பக்தர்கள் நேரடியாக துணை அலுவலகத்திற்கு சென்று, பணத்தை செலுத்தி தங்களின் வாடகை அறையின் சாவியை பெற்றுக் கொள்ளலாம். இந்த புதிய முறை நேற்று முதல் அமல்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
 
Advertisement