Advertisement

ஆக்கிரமிப்பு கோவில் நிலங்கள் மீட்க குழு; அறநிலையத்துறை

கோவை: ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள, கோவை மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களை மீட்க, குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குச் சொந்தமாக நன்செய், புண்செய் நிலங்கள் மட்டுமின்றி வர்த்தக கட்டடங்கள், வீடுகள், மனையிடங்கள் உள்ளன. வாடகை அடிப்படையில் பயன்படுத்தி வரும் குத்தகைதாரர்கள், நியாயமான வாடகை செலுத்தாமல் காலம் கடத்தி வருகின்றனர். பலர் ஆக்கிரமிப்பும் செய்துள்ளனர்.ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்காக, மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் செந்தில்வேலவன், உதவி கமிஷனர்கள் தலைமையில் மூன்று குழுக்கள் உருவாக்கியுள்ளார்.

இத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆக்கிரமிப்பாளர்கள் பலரும் இதுவரை அதிகாரிகளை சரிக்கட்டியும், அரசியல்வாதிகளை பயன்படுத்தி சமாளித்து வந்தனர். ஆக்கிரமிப்பு நிலங்களை தங்களுக்கு சொந்தமானதாக பயன்படுத்தி வந்தனர். இனி, அது நடக்காது. ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தை எப்போது, எந்த அதிகாரி அகற்றுவார், எந்த அதிகாரி கோப்புகளை பார்க்கிறார் போன்ற விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது. ஆக்கிரமிப்புதாரருக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி, பதில் பெறப்படுகிறது. அதன் பின்பே, ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது என்றனர். சமீபத்தில் ஆய்வுக்கு வந்த, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம், மருதமலை அடிவாரத்தில், சோமையம்பாளையம் ஊராட்சி மற்றும் மாநகராட்சி எல்லையில் உள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதாக, தி.மு.க.,வினர் புகார் கூறினர். இதுதொடர்பாக, சர்வே எடுத்து, ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க, அமைச்சர் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் கூறுகையில், சம்பந்தப்பட்ட இடம், சோமையம்பாளையம் ஊராட்சி, கோவை மாநகராட்சி மற்றும் மருதமலை கோவில் என மூன்று பிரிவினருக்கு பாத்தியப்பட்டதாக இருக்கிறது. நில அளவைத்துறை மூலமாக ஆய்வு செய்து, எந்த துறைக்குச் சொந்தமானது என இறுதி செய்யப்பட்டு, ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்படும், என்றார்.

Advertisement
 
Advertisement