Advertisement

விவேகானந்தர் பகுதி-10

இந்த முறையும் விவேகானந்தர், அம்பிகையிடம் தான் கேட்க வந்ததை மறந்துவிட்டார். அம்பிகையின் முன்னால் நின்றபோது ஏதோ ஒரு பரவசநிலை ஏற்பட்டது. தாயே! எனக்கு பக்தியையும் ஞானத்தையும் தா, என்றே இந்த முறையும் வேண்டிக்கொண்டார். மறுநாள் குருநாதரைச் சந்தித்தார். ராமகிருஷ்ணர் அவரிடம், நரேன்! இம்முறையாவது அம்பிகையிடம் உன் பணத்தேவையை சொன்னாயா? என்றார். இல்லை என விவேகானந்தர் தலையசைத்தார். ராமகிருஷ்ணர் அவரிடம் கடிந்து கொள்வது போல் நடித்தார். நீ அசட்டுத்தனமாக நடந்து கொள்கிறாய். அம்பிகையை பார்த்த உடனேயே உன் தேவையை நீ சொல்லியிருக்கலாம் அல்லவா? உன்னை நீயே கட்டுப்படுத்திக் கொண்டிருக்கலாம் அல்லவா? இன்னும் ஒருமுறை முயற்சித்துப் பார். அம்பிகையிடம் உன் பணத்தேவையைச் சொல், என்றார். அந்த நிமிடமே விவேகானந்தர் அம்பிகை சன்னதிக்கு கிளம்பிவிட்டார். கோயில் வாசலில் கால் வைத்ததுமே ஏதோ ஒரு உணர்வு தடுத்தது. அம்பிகையிடம், கேவலம் பணத்துக்காக பிரார்த்தனை செய்யப் போகிறோமே? என்ற எண்ணம் சன்னதிக்குள் செல்ல முடியாமல் தடுத்தது. அவளோ கருணை வாய்ந்தவள். என்ன கேட்டாலும் தருபவள். அதற்காக கேவலமான பணத்தையா கேட்கவேண்டும்! அவர் தலைகுனிந்தார். அம்பிகையின் முன்னால் சென்றார். அம்மா! ஞானத்தையும், பக்தியையும் தவிர எனக்கு வேறு எதுவுமே தேவையில்லை. அதை எனக்குக் கொடு, என்றார். சன்னதியில் இருந்து வெளியேறினார். மனம் திருப்தியாக இருந்தது. இதற்கெல்லாம் காரணம் ராமகிருஷ்ணரின் சித்தம்தான் என்பதை புரிந்து கொண்டார். மீண்டும் ராமகிருஷ்ணரிடமே சென்றார். குருவே! நான் பலமுறை அம்பிகையிடம் சென்றேன். என்னால் அவளிடம் பணம் கேட்க முடியவில்லை. அப்படிக்கேட்பதற்கே மனம் கூசுகிறது. ஆனால், என் குடும்ப வறுமை நீங்குவதற்காக உரிமையுடன் உங்களிடம் பணம் கேட்கிறேன். அதற்குரிய வரத்தை தாருங்கள், என்றார். ராமகிருஷ்ணர் மறுத்து விட்டார். மகனே! நீ என்னிடம் வெறும் பணத்தைப் பெறுவதற்காகவா அம்பிகை உன்னை என்னிடம் அனுப்பியிருக்கிறாள்! அம்பிகையின் சித்தம் அதுவல்ல. இருப்பினும் சொல்கிறேன். ஒரு பிடி அரிசிக்கும், கந்தை துணிக்கும் கஷ்டமில்லாமல் உன் குடும்பத்தார் இருப்பார்கள். புறப்படு, என்றார். இந்த சம்பவத்திற்கு பிறகு இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக பாவிக்க வேண்டும் என்ற விவேகம் அவருக்குள் ஏற்பட்டது. அவர் உறவுகளைத் துறக்க தயாராகிவிட்டார். இனி எனக்கும் அந்த குடும்பத்திற்கும் சம்பந்தம் எதுவும் வேண்டாம். நான் துறவியாகப் போகிறேன் என உறுதி எடுத்துக் கொண்டார். இதன்பிறகு ராமகிருஷ்ணர் மறைந்து விட்டார். ராமகிருஷ்ணரின் சீடர்கள் விவேகானந்தரை தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டனர். பேலூர் என்ற இடத்தில் ராமகிருஷ்ணரின் பெயரால் ஒரு மடம் நிறுவப்பட்டது. அங்கே ராமகிருஷ்ணரின் சிலை அமைக்கப்பட்டது. ராமகிருஷ்ணரின் சீடர்கள் முற்றிலுமாக வீட்டுத்தொடர்பை அறுத்து துறவறம் பூண்டுவிட்டனர். அவர்களில் லாட்டு, யோகின் என்பவர்கள் ராமகிருஷ்ணரின் துணைவியாரான அன்னை சாரதா தேவியுடன் தீர்த்த யாத்திரை கிளம்பினர். விவேகானந்தருக்கு மட்டும் குடும்பத்தின் வறுமை நிலை முழுமையான துறவறம் பூண முட்டுக்கட்டையாக இருந்தது. கோர்ட்டில் தொடரப்பட்டிருந்த சொத்து தொடர்பான் வழக்கு இழுத்தடித்தது. அதற்காக அவர் பலமுறை நீதிமன்றம் செல்வதை தவிர்க்க முடியாததாகிவிட்டது. இவ்வளவு கஷ்டத்திற்கு மத்தியிலும் அவர் பல இளைஞர்களை துறவறம் பூணச்செய்து மடத்திற்கு அழைத்து வந்தார். இதைக்கண்ட அந்த இளைஞர்களின் உறவினர்கள் விவேகானந்தரை கடுமையாக திட்டி தீர்த்தனர். இதற்கிடையே விவேகானந்தர் தங்கியிருந்த இடத்திற்குரிய ஒப்பந்தம் முடிந்துவிட்டது. ஒருபுறம் சீடர்களின் உறவினர்களின் ஏச்சும்பேச்சும், மறுபுறம் இடமே இல்லாத ஒரு நிலையும் அவரை வாட்டியது. இதற்கு மத்தியில் சீடர்களை எப்படி தக்கவைப்பது? என்ற பிரச்னை ஏற்பட்டது. புது இடத்தில் அவர்களை தங்க வைக்க வேண்டுமானால் பணம் வேண்டும். இதற்காக ஒருசிலரை நாடினார் விவேகானந்தர். அவர்களோ, நரேன்! இது உனக்கு வேண்டாத வேலை. நீ பல இளைஞர்களை கெடுக்கிறாய். அவர்கள் இல்லறத்தில் மூழ்கி சுகமான வாழ்வு வாழ்வதை ஏன் தடுக்கிறாய்? அதுமட்டுமின்றி நீயும் உன் சுகத்தை ஏன் அழித்துக்கொள்ள வேண்டும்? என்று கூறினர். விவேகானந்தரின் மீதுள்ள அக்கறையால் தான் அவர்களும் இவ்வாறு சொன்னார்கள். ஆனால், விவேகானந்தர் அவர்களின் கருத்தை ஏற்கவில்லை. இதன்பிறகு ஒரு அற்புதம் நிகழ்ந்தது. ராமகிருஷ்ண பரமஹம்சர், தனது இல்லறச்சீடர்களில் ஒருவரான சுரேந்திரநாதமித்ரர் என்பவரின் கனவில் தோன்றி, மித்ரா! நீ நரேந்திரனுக்கு அவன் கேட்கும் உதவியை செய், என்றார். சுரேந்திரநாதர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவருக்கும் மிகப்பெரிய அளவிற்கு செல்வம் இல்லை. இருந்தாலும், ஒரு சிறிய வீட்டை விவேகானந்தரும், அவரது சீடர்களும் தங்கியிருக்கும் வகையில் வாடகைக்கு அமர்த்திக் கொடுத்தார். வாடகையை அவரே கொடுத்து வந்தார். ஓரளவு உணவு கிடைக்கவும் ஏற்பாடு செய்தார். சுரேந்திரநாதரின் இந்த உதவி, விவேகானந்தரின் கண்களை குளமாக்கி விட்டது. கல்கத்தா அருகிலுள்ள பாராநகர் என்ற இடத்தில்தான் அந்தவீடு இருந்தது. அது படுமோசமான வீடு. பூதங்களும், பேய்களும் குடியிருப்பது போல இருளடைந்து கிடந்தது. ராமகிருஷ்ண பரமஹம்சரை எங்குதகனம் செய்தார்களோ அந்த சுடுகாட்டின் அருகில் வீடு அமைந்திருந்தது. பல்லிகள், எலிகள், பெருச்சாலிகள் வாழும் அந்த கூடாரத்திற்கு அவ்வப்போது பாம்புகளும் வந்துபோயின. பக்கத்தில் ஒரு குட்டை இருந்தது. அங்கிருந்து புறப்படும் கொசுக்கள் சீடர்களை வாட்டி வதைக்கும். இவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் அங்கு தங்குவதை சீடர்கள் பெருமையாகக் கருதினர். துன்பத்தை அனுபவிப்பதுதான் துறவு மேற்கொள்வதற்கு முதல் பயிற்சி என அவர்கள் நினைத்தனர். அந்த வீட்டில் இருந்த ஒரு அறையை அலங்கரித்து தெய்வ படங்களையும், மகான்களின் படங்களையும் வைத்தனர்.

Advertisement
 
Advertisement