Advertisement

ஈஷாவுக்கு சம்மன் ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

சென்னை-கோவை ஈஷா மையத்துக்கு, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. கோவை வெள்ளியங்கிரியில் ஈஷா மையம் உள்ளது. தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன், இந்த மையத்துக்கு எதிரான புகாரை விசாரணைக்கு எடுத்து சம்மன் அனுப்பியது. சம்மனை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மையத்தின் நிர்வாகி மனு தாக்கல் செய்தார்.

மனுவில், குழந்தைகளுக்கு அடிப்படை பயிற்சியும், குருகுல கல்வி முறையும் அளிக்கப்படுகிறது. சம்மன் கிடைத்த உடன், குறிப்பிட்ட தேதியில் கமிஷனை நிர்வாகி அணுகினார்; எங்கள் தரப்பை கேட்கவில்லை. அதனால், திரும்பிவிட்டார். எங்கள் தரப்பை கேட்க அவர்கள் தயாராக இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை நிலையிலேயே, நீதிமன்றத்தை மனுதாரர் அணுகி உள்ளார். அதிகாரிகள் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் தரப்பை நிரூபிக்க வேண்டும்.எனவே, மனுதாரர் ஆஜராகி விளக்கம் அளிக்க ஏதுவாக, நான்கு வாரங்களில் புதிதாக சம்மன் அனுப்ப, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷனுக்கு உத்தரவிடப்படுகிறது. சம்மன் கிடைத்த பின், இரண்டு வாரங்களில் மனுதாரர் விளக்கம் அளிக்க வேண்டும். உரிய சந்தர்ப்பம் வழங்கி விசாரணை நடத்தி, எட்டு வாரங்களில் தகுந்த உத்தரவை கமிஷன் பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement
 
Advertisement