Advertisement

ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்பு கோயிலுக்கு திரும்பிய குன்றத்து யானை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை 14 வயது தெய்வானை ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்பு நேற்று கோயிலுக்கு திரும்பியது. பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோயிலில் இருந்த யானை அவ்வை உடல் நலக்குறைவால் 2012ல் இறந்தது. 2016இல் அசாமில் இருந்து உபயதாரர் மூலம் 9வயது யானை குட்டி கோயிலுக்கு வந்தது. அதற்கு கோயில் நிர்வாகம் சார்பில் தெய்வானை என பெயர் சூட்டப்பட்டது. கடந்த ஆண்டு யானை தாக்கியதில் பாகன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பின்பு யானை தெய்வானை 2020 ஜுன் மாதம் திருச்சி எம்.ஆர். பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கே 8 மாதங்கள் யானைக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பின்பு யானை தெய்வானை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு 10 மாதங்கள் பராமரிக்கப்பட்டது. நேற்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் யானை தெய்வானைக்கு தீபாராதனை பூஜைகள் முடிந்து திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. கால்நடை மருத்துவர்கள், சுப்பிரமணிய சுவாமி கோயில் பேஷ்கார் புகழேந்தி, யானை பராமரிப்பு எழுத்தர் நெடுஞ்செழியன், பணியாளர்கள் உதயகுமார், இருளப்பன், நாக பாண்டி ஆகியோர் உடன் வந்தனர். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்பு யானை தெய்வானை திருப்பரங்குன்றத்திற்கு வந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோயில் துணை கமிஷனர் ராமசாமி: முதுமலையில் யானைகளை பராமரிப்பு பணி செய்த சிவகுமார் அவரது மகனும் தற்போது யானை தெய்வானையை பராமரிக்க பாகன்களாக அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர் குடும்பத்துடன் திருப்பரங்குன்றத்தில் தங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யானை தெய்வானை நல்ல நிலையில் உள்ளது என ஒரு மாதத்திற்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தெய்வானையை பரிசோதித்த தமிழ்நாடு யானைகள் பராமரிப்பு உயர்மட்டக்குழு உறுப்பினர் டாக்டர் சிவகணேசன் தெரிவித்திருந்தார். யானை தெய்வானை நல்ல உடல் நிலையில் உள்ளது. என்றார்.

Advertisement
 
Advertisement