Advertisement

புராண ஓவியங்களால்... மிளிரும் வடபழநி ஆண்டவர் கோவில்

சென்னை: முருக பெருமானின் வரலாற்றை விளக்கும் ஓவியங்களால், வடபழநி ஆண்டவர் கோவில் மிளிருகிறது.

சென்னை, வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 23ம் தேதி, அரசின் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இரண்டு ஆண்டுகளாக புனரமைப்பு பணிகள் மட்டுமல்லாமல், பல புதிய பணிகள் நடந்துஉள்ளன. அவற்றில், கோவிலின் தல புராணத்தையும், முருகனின் வரலாற்றையும் விளக்கும் வர்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதும், புதிதாக உற்சவர் மண்டபம் கட்டியுள்ளதும் முக்கியமானதாகும்.தமிழகத்தின் முக்கிய கோவில்களில் ஒன்றாக உள்ள வடபழநி ஆண்டவர் கோவில் பற்றியும், அதன் வரலாறு பற்றியும் அறிந்து கொள்வதில், பக்தர்கள் பெரிதும் ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக, கோவிலின் தெற்கு நுழைவுப்பகுதியில், வடபழநி முருகன் கோவில் உருவாகிய தல புராண வரலாறு, 12 ஓவியங்களில் அழகுற வரையப்பட்டு உள்ளது.

பக்தர்கள் கோவிலுக்குள் நுழையும்போது, அவர்கள் கண்ணில்படும்படியாக வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்கள் பற்றி பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் புரிந்து கொள்ளும்படியான, எளிமையான தமிழில் விளக்கமும் கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பூரிப்பு ஏற்படுவது நிச்சயம்.இதே போல், கோவிலின் வடக்கு பக்கம் பயனற்று இருந்த சுவரில், முருகப்பெருமானின் வரலாறான கந்த புராணம் எழிலுடன் வரையப்பட்டு உள்ளது. கி.பி., 12ம் நுாற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த குமரக் கோட்டத்தின் அர்ச்சகர் கச்சியப்ப சிவாசாரியார்.

குமரக் கோட்டத்து முருகக்கடவுளுக்கு நாள்தோறும் பூசனை செய்த மெய்யன்பில், வடமொழிப் புராணத்தின் சிறப்பினைத் தமிழ்கூறு நல்லுலகம் அறியும்படி, கந்த புராணத்தை இயற்றினார். 135 படலங்களையும், 10 ஆயிரத்து 345 பாடல்களையும் கொண்ட முருகப்பெருமானின் வரலாற்றை முறையாகவும், முழுமையாகவும் கூறும் கந்த புராணத்தின் சாறு பிழிந்து தந்தது போல, இந்த ஓவியங்கள் இங்கு அமையப் பெற்றுள்ளன, கும்பாபிஷேகத்தன்றும், அதன் பிறகும் வரக்கூடிய பக்தர்கள், இந்த வர்ண ஓவியங்களை பார்த்து மகிழப்போவது நிச்சயம். புதிய கொடிமரம் பிரதிஷ்டைவடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவில் முன்புறம், 36 அடி உயர புதிய கொடிமரம் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிறப்பு பூஜைக்கு பின்னர், கிரேன் உதவியுடன் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

Advertisement
 
Advertisement