Advertisement

ஆயிரக்கணக்கானோர் பனசங்கரி அம்மன் ரத உற்சவத்தில் பங்கேற்பு

பாகல்கோட்: தடை உத்தரவை மீறி, ஆயிரக்கணக்கானோர் பனசங்கரி அம்மன் ரத உற்சவத்தில் பங்கேற்றதால் போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைக்க முயன்றனர்.கொரோனா பரவலால் பாகல்கோட் மாவட்டம், பாதாமி தாலுகா, பனசங்கரி அம்மன் கோவில் ரத உற்சவம் நடத்த கூடாது. கோவிலில் பூஜை மட்டுமே செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. வரும் 31 வரை பக்தர்கள் தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.உளவுத்துறை மூலம் வந்த தகவலை அடுத்த ஊருக்குள் நுழையாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு மூன்று நாட்களாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.ஊர் தலைவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க பவுர்ணமியை ஒட்டி எளிமையான முறையில் ரத உற்சவம் நடத்த, நேற்று மதியம் அனுமதி அளிக்கப்பட்டது.அப்போது, தடை உத்தரவை மீறி ஆயிரக்கணக்கானோர் ரத உற்சவத்தில் பங்கேற்றனர். முக கவசம் அணியவில்லை; சமூக விலகல் கடைபிடிக்கவில்லை. தடுப்புகளை உடைத்தெறிந்து பலரும் உற்சவம் நடந்த பகுதிக்கு நுழைந்தனர். கூட்டம் நெரிசல் அதிகமானதால் போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். ஆனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே முறை நுழைந்ததால் போலீசாராலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.இதற்கிடையில் நாதஸ்வரத்துடன் பனசங்கரி அம்மன் உற்சவ மூர்த்தி ரத உற்சவத்தில் திருவீதி உலா வந்தது. பக்தர்கள் உற்சாகத்துடன் தரிசனம் செய்தனர்.

Advertisement
 
Advertisement