Advertisement

உடுமலை மாரியம்மன் கும்பாபிஷேக விழா : மங்கள இசையுடன் துவக்கம்

உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா, நேற்று, யாக சாலை பூஜையுடன் துவங்கியது.உடுமலையில், நுாற்றாண்டு பழமையான, பிரசித்தி பெற்ற, மாரியம்மன் கோவில் உள்ளது.

நகரின் காவல் தெய்வமாக போற்றப்படும் இக்கோவிலில், உற்சவ மூர்த்திகளுக்கு புதிய சன்னதி, மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகள் கோபுரம், ராஜகோபுரம் வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வரும், 27ல், மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக, கோவில் வளாகத்தில், 13 குண்டங்கள், 5 வேதிகைகளுடன் அற்புதமாக யாக சாலை அமைக்கப்பட்டது. நேற்று காலை, 9:00 மணிக்கு, மங்கள இசையுடன், கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து, சர்வ தேவதா அனுமதி, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், மாலை, 6:15 மணிக்கு, வாஸ்துசாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.இன்று, காலை 9:00 மணிக்கு, மங்கள இசை, 9:15 மணிக்கு, சாந்தி ேஹாமம், திசா ேஹாமம், நவக்ரக ஹோமம் உட்பட ஹோமங்களும், மாலை 6:00 மணிக்கு, மங்கள இசை, 6:15 மணிக்கு மிருத்சங்கிரகணம் உட்பட வழிபாடுகள் நடக்கிறது.வரும் 27ல் காலை, 9:30க்கு, யாத்ரா ஹோமம், கடம்புறப்பாடு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 10:00 மணிக்கு, மாரியம்மன், சக்திவிநாயகர், செல்வமுத்துக்குமரன், உற்சவர் சன்னதி மற்றும் மூலவர் கோபுரங்களுக்கு மகா கும்பாபிேஷகமும், 10:30 மணிக்கு, மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.மாலை, 4:30க்கு, சுவாமி திருக்கல்யாண உற்சவமும், திருவீதி உலாவும் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

Advertisement
 
Advertisement