Advertisement

அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்?

இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாமே. அன்று உப்பு, அரிசி மற்றும் தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என வாங்கலாம். எப்படியும் நாம் மாதாமாதம் மளிகைப் பொருட்கள் வாங்கி ஆக வேண்டும். அதனை இம்மாதத்தில் மட்டும் இந்த அட்சயதிரிதியை நாளில் வாங்கி வளம் பெறலாமே. வட இந்தியாவில் இந்நாளை அகஜித் என்பர். ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள். அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான்.

ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான். எனவே, அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும். நம் இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும். அன்று செய்யும் தானதர்மத்தால் மரண பயம் நீங்கி உடல் நலம் உண்டாகும். அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும். தானதர்மங்கள் செய்தால் எம வேதனை கிடையாது. நலிந்தவர்களுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும். ஆடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும்; பழங்கள் தானம் செய்தால் உயர் பதவிகள் கிடைக்கும். மோர், பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும்; தானியங்கள் தானம் கொடுத்தால் அகால மரணம் ஏற்படாது. தயிர் சாதம் தானம் அளித்தால் பாவ விமோசனம் ஏற்படும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும். அட்சய திருதியை அன்று ஆலிலையில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜபித்து, அதை நோயாளிகளின் தலையணையின் அடியில் வைத்தால் நோய் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

அட்சயதிருதியை தினம் விலை உயர்ந்த ஆபரணங்கள், பொருட்களை வாங்க மட்டுமன்றி, வணிகத்தினைத் துவங்குதல், பூமி பூஜை போடுதல், புதிய கலையினைக் கற்க ஆரம்பித்தல் போன்றவற்றுக்கும் உரியதாகக் கருதப்படுகிறது. அட்சய தினத்தன்று ஆலிலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜபித்து, தலையணை அடியில் வைத்தால், நோய்களின் கடுமை குறையும். குழந்தைகளின் படுக்கை அடியில் வைத்தால், கண் திருஷ்டி கழியும், பயங்கள் போகும். பூஜை அறையில் அல்லது வியாபார தலத்தில் வைத்திருந்தால் எதிரிபயம் விலகும். இந்த நாளில், குபேரபூஜை, லட்சுமி நாராயண பூஜை, சிவ பூஜை, மகாலட்சுமி பூஜை போன்றவற்றைச் செய்வது, நற்பலன்களைத் தரும். அட்சய திருதியை நாளில் இயன்ற அளவில் தானம் செய்வது மிக மிகச் சிறந்தது. இந்நாளில் செய்யப்படும் தானங்கள், பல மடங்கு அதிக நன்மை தரும். பித்ருகளை வணங்கவும், அவர்களுக்கு உரிய நீத்தார் கடன்களை செய்யவும் உரிய நாள் இது. இதனால் கிட்டும் முன்னோரின் ஆசி மூவாயிரம் மடங்கு நற்பலனைத் தரும் என்பது ஐதிகம்.

Advertisement
 
Advertisement