Advertisement

பழமையான சிவன் கோவிலில் மர்ம நபர்கள் புதையல் தேடி பள்ளம்

செஞ்சி: செஞ்சி அருகே பழுமையான சிவன் கோவில் கருவரையில் புதையல் எடுக்க மர்ம நபர்கள் பள்ளம் தோண்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரலாற்று பின்னனி கொண்ட செஞ்சி நகரம் வரலாற்று காலத்தில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய நகரமாக இருந்துள்ளது. இதில் 9 முதல் 11ம் நுாற்றாண்டு வரை பல்லவர்களும், 14 மற்றும் 15ம் நுாற்றாண்டுகளில் விஜயநகர மன்னர்களும், நாயக்க மன்னர்களும் செஞ்சியை ஆட்சி செய்தனர்.

அப்போது செஞ்சி கோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமான சிவன் கோவில்களை கட்டி உள்ளனர். இதே போன்ற சிவன் கோவில் ஒன்று செஞ்சியை அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில், வடகால் செல்லும் வழியில் உள்ளது. பல்லவர்கால கட்டடக்கலையுடன் காணப்படும் இந்த கோவில் படையெடுப்புகளின் போது இடித்து சின்னபின்னமாக்கி உள்ளனர். இடிபாடுகளுடன் இருந்த கோவிலின் சாமி சிலைகள் சிலவற்றை எடுத்து கோவிலுக்கு வெளியே வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கருவரை பீடத்தின் கற்களை நகர்த்தி விட்டு அதன் கீழே சுமார் 3 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி புதையலை தேடி உள்ளனர். செஞ்சி பகுதியில் வழிபாடு இல்லாமல் இடிபாடுகளுடன் உள்ள கோவில்களில் புதையல் தேடுபவர்கள் அடிக்கடி இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற கோவில்களில் ஏற்கனவே போரின் போது செல்வங்கள் அனைத்தும் முழுமையாக கொள்ளையடிக்கப்பட்டு விட்டதால் தற்போது கருவரைக்குள் பொன், பொருள் இருப்பதற்கான வாய்ப்பு மிக குறைவே. சோமசமுத்திரம் கோவிலில் புதையல் தேடி பள்ளம் எடுத்துள்ள சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
 
Advertisement