Advertisement

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: 418 ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கிறது

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 418 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூலை 6 ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் நேற்று தொடங்கின. திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் தோற்றத்துடன் திருவட்டாரில் ஆதிகேசவ பெருமாள் கோயில் கட்டப்பட்டது. இங்கு பெருமாள் அனந்த சயனத்தில் காட்சியளிக்கிறார். நுாறாண்டுகள் கடந்து 15 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு கும்பாபிஷேக பணிகள் தொடங்கியது. இந்தப் பணிகள் நிறைவு பெற்று வரும் ஜூலை 6ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதையடுத்து ஒரு மாதமாக சிறப்பு பூஜைகள் நடந்து வந்த நிலையில் நேற்று கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கியது. கணபதி ேஹாமத்துக்கு பின்னர் காலை 9:00 மணிக்கு மூலவர் திருமேனியை, திருப்பணி செய்த புரோகிதர் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் சடங்கு நடந்தது. இன்று காலை பாலாலய பிரதிஷ்டையில் இருக்கும் அர்ச்சனை விக்ரகம் ஒற்றைக்கல் மண்டபத்துக்கு எழுந்தருளிய பின்னர், மூலவர் சன்னதியில் பூஜைகள் தொடங்கும், வரும் 6ம் தேதி காலை 6:00 முதல் 6:50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்.இக்கோயில் நுாற்றாண்டுகளைக் கடந்து கும்பாபிஷேகம் காண்பதால் திருவட்டார் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. கோயில் வண்ண விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருவட்டார் பகுதி டாஸ்மாக் கடைகள் அன்றைய தினம் அடைக்கப்படுகிறது. கும்பாபிஷேக தரிசனத்துக்கு பாஸ் வழங்கப்படாது; முதலில் வருவோர் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும், தாமதமாக வருவோர் கோயிலுக்கு வெளியே பெரிய திரையில் கும்பாபிஷேகத்தை காணலாம் என, தெரிவிக்கப்பட்டது.

Advertisement
 
Advertisement