Advertisement

ஜம்முவில் மோசமான வானிலை: அமர்நாத் யாத்திரைக்கு தடை

புதுடில்லி : மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் மலை மீதிருக்கும் அமர்நாத் குகையில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க, ஆண்டு தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். கொரோனா தொற்று பரவல் காரணமாக, 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் அமர்நாத் யாத்திரை அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு ஜூன் 30ல் அமர்நாத் யாத்திரை துவங்கியது. ஆகஸ்ட் 11ல் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுவரை 72 ஆயிரம் பேர் பனி லிங்கத்தை தரிசித்து உள்ளனர். இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக பஹல்கம் என்ற இடம் வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அங்கிருந்து அமர்நாத் குகைக் கோவிலுக்கு செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. வானிலை சீரடைந்ததும் அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த 2019ல் ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அமர்நாத் யாத்திரை பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

Advertisement
 
Advertisement