Advertisement

சுந்தரகாண்டம் பகுதி-1

தேவி! ஸ்ரீமன் நாராயணன், ராமாவதாரம் எடுக்கப் போகிறார். ராமசேவைக்கு நம்மாலானதையும் செய்ய வேண்டும். ராமனுக்கு தேவர்கள் மட்டுமல்ல, ரிஷிகள், மனிதர்களுடன் விலங்குகளும், பறவைகளும் கூட சேவை செய்யப் போகின்றன. அந்த விலங்கினங்களில் வானரங்களும் அடக்கம். பார்வதி! நீ ஒரு வானரப் பிள்ளையைப் பெற்றுத் தருவாயா? என பார்வதியிடம் கேட்டார் சர்வேஸ்வரன். நாதா! எனக்கு அழகான இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், ஒரு வானரக் குழந்தையைப் பெற வேண்டும் எனக் கூறுகிறீர்களே! என்றதும் சர்வேஸ்வரன் சிரித்தார்.எல்லாம் காரணப்படியே நடக்கிறது. பார்வதி மறுத்தால் என்ன? ருத்ராம்சமான தன் சக்தி உலகத்தில் எத்தனையோ குழந்தையில்லாத தாய்மார்களில் ஒருத்திக்கு கிடைக்கட்டுமே என நினைத்தார் பரமேஸ்வரன். தன் சக்தியை எடுத்துச்செல்லும் படி வாயு பகவானுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், புஞ்ஜிகஸ்தலை என்ற தேவலோக அப்சரஸ் பூலோகம் வந்தாள். ஒரு காட்டில் தவம் செய்து கொண்டிருந்த ரிஷியின் உருவத்தைப் பார்த்து கேலி செய்தாள். இந்த பூமியில் பிறக்கும் எல்லோரும் அழகாக இருப்பதில்லை. குறிப்பாக கருத்த பெண்களை மாப்பிள்ளைகள் ஒதுக்குவதும், கருத்த ஆண்களை பெண்கள் ஒதுக்குவதுமான சூழ்நிலையால் பலரது வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை நிர்ப்பந்தம் காரணமாக இவர்கள் வாழ்வில் இணைந்திருந்தாலும் கூட, எதையோ இழந்தது போல துக்கத்துடன் வாழ்கிறார்கள். இப்படி ஒரு பழக்கம் கூடவே கூடாது. அழகு, நிறம் ஆகியவற்றை விட மனதை உற்றுப் பார்க்க வேண்டும். மகரிஷியின் தோற்றத்தைப் பார்த்து சிரித்து கேலி செய்த புஞ்ஜிகஸ்தலைக்கு அவருக்குள் உறைந்து கிடந்த தவவலிமை புரியாமல் போய்விட்டது. ஏ பெண்ணே! உருவத்தைப் பார்த்து எள்ளி நகையாடிய நீ, குரங்காய் போ, என சாபமிட்டு விட்டார். புஞ்ஜிகஸ்தலையின் முகம் வானர முகமாகி விட்டது. அவள் அழுது புலம்பினாள். ரிஷியின் சாபம் எப்படி மாறும்? மேலும், எல்லாமே காரண காரியத்துடனேயே அல்லவா நடக்கிறது. அவள் சாப விமோசனம் கேட்டாள். அவளது கண்ணீரைக் கண்டு கலங்கிய ரிஷி, கோபம் காரணமாக அவள் முகத்தை மாற்றி விட்டோமே என வருந்தி, பெண்ணே! நீ நினைத்த நேரத்தில் நினைத்த உருவம் எடுக்கும் சக்தியைத் தருகிறேன், என்ற விதிவிலக்கையும் அளித்தார்.அந்தப்பெண் ஒரு பிறவியில், கேஸரி என்ற வானரனுக்கு வாழ்க்கைப்பட்டாள். அந்தப் பிறவியில் அவளுக்கு அஞ்ஜனை என்ற பெயர் அமைந்தது. கேஸரி என்றால் சிங்கம். அஞ்ஜனை என்றால் பேரழகு. ஒருநாள், தன் வடிவை மறைத்து, அப்சரஸாக உருமாறி ஒரு மலைச்சிகரத்தில் உலவிக் கொண்டிருந்தாள்.அப்போது தான் வாயு பகவான் அவளைப் பார்த்தான்.இப்படி ஒரு சுந்தரியா? அவன் அவளை நெருங்கி ஆலிங்கனம் செய்தான். யாரோ தன்னை அணைப்பதை உணர்ந்த அந்தப்பெண், எந்த ஒரு உருவத்தையும் காண முடியாமல், ஒரு ஸ்திரீயிடம் இப்படி முரட்டுத்தனமாக நடந்து கொள்வது யார்? எனக் கதறினாள்.அப்போது வாயு பகவான் அவளுக்கு தரிசனம் தந்தார். பெண்ணே! தவறான நோக்கத்துடன் உன்னை நான் ஆலிங்கனம் செய்யவில்லை. உன் அழகில் மெய்மறந்து மனதால் மட்டுமே உன்னை ஸ்பரிசித்தேன். ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கும் முன் அவர்கள் தேவர்களுக்கு சொந்தமாகிறார்கள் என்பதை நீ அறிந்திருக்கத்தானே செய்கிறாய். நானும் ஒரு தேவன் என்பதால், உன் கற்புக்கேதும் களங்கம் ஏற்படவில்லை. அன்பு ததும்பும் முகம் கொண்டவளே! நீ உலகம் புகழும் ஒரு புத்திரனைப் பெறுவாய், என சொல்லி மறைந்தார்.அஞ்ஜனை கர்ப்பமானாள். மார்கழி மூல நட்சத்திரத்தில் அழகான ஒரு புத்திரனைப் பெற்றெடுத்தாள். வாயுபுத்திரன் பூமிக்கு வந்தவுடனேயே வானில் பறக்கத் துவங்கி விட்டான். அழகில் சிறந்த அவனுக்கு மாருதி என்று பெயர் சூட்டினாள் அஞ்ஜனை. அவன் வேகமாக வான மண்டலத்தை சுற்றி வந்தான். அப்போது சூரியன் வெளிப்பட்டான். சிவந்த பழம் போல் அது காட்சியளித்தது. வானரமாயிற்றே! பழமென்றால் விட்டு வைக்குமா? அதிலும், சாதாரண வானரமே எண்பதடி பாயும். இவன் வாயு செல்வன்! கேட்கவா வேண்டும். சூரியனை நோக்கிப் பறந்தான்.அன்று கிரகணம். ராகு என்னும் நாகம் சூரியனைக் கவ்விப்பிடிக்க எத்தனித்து அவனை விரட்டிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில், சூரியனைக் கவ்விப்பிடிக்கவும், மாருதி அங்கே வரவும் சரியாக இருந்தது. ராகுவை ஓட ஓட விரட்டியடித்தான். குரங்குகளுக்கு பிறர் கையிலுள்ளதை பிடுங்குவது ஜென்ம சுபாவம். விடுவானா நம் சின்ன மாருதி? ராகுவை விரட்டிக்கொண்டே இருந்தான்.இந்திரா! தேவேந்திரா! என்னைக் காப்பாற்று, இந்தக் குரங்கு என்னை விரட்டுகிறது, எனக் கதறிக் கொண்டே இந்திரலோகத் திற்குள் புகுந்தான் ராகு.அங்கே இந்திராணியுடன் ஜெகஜோதியாக வீற்றிருந்த தேவேந்திரன், தன் வஜ்ராயுதத்தை எடுத்து மாருதியின் மீது வீசினான். அது சக்தி வாய்ந்த ஆயுதம். மாருதி பச்சைப் பிள்ளையல்லவா! தாங்குவானா? அந்த ஆயுதம் அவன் மேல் பட்டு, கதறியபடியே கீழே விழுந்தான். ஒரு மலை முகட்டில் அவன் விழுந்த போது, தோள்பட்டை எலும்பு முறிந்து விட்டது. குழந்தை கதறுகின்ற சப்தம் கேட்டு அஞ்ஜனை ஓடோடி வந்தாள்.ஏ தேவேந்திரா! இது உனக்கே அடுக்குமா? உன் துன்புறுத்தலுக்கு என் பச்சைக்குழந்தை தானா கிடைத்தான்? பார்...பார்...ஒரு வழி செய்கிறேன், என்றவள் வாயு பகவானைப் பிõர்த்தித்தாள்.நடந்ததைப் பார்த்தீர்கள் அல்லவா? உங்கள் பிள்ளை அடிபட்டுக் கிடக்கிறான். நீங்கள் அமைதியாக நிற்கிறீர்களே! என்றாள்.வாயுவுக்கும் கடும் கோபம். மகனை அன்போடு அணைத்தான். அந்த மலையில் இருந்த குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டான். வாயு உடலுக்குள் நின்றாலும் கஷ்டம்... வெளியில் நின்றாலும் கஷ்டம்...உலக ஜீவன்களெல்லாம் திணறின. தேவர்கள் மூச்சுவிட முடியாமல் திணறினர். தேவேந்திரன் உட்பட...!

Advertisement
 
Advertisement