Advertisement

மைசூரு தசரா யானைகள் இன்று புறப்பாடு விழாவுக்காக 16 கமிட்டிகள் அமைப்பு

பெங்களூரு-மைசூரு தசரா விழாவில் பங்கேற்பதற்கான ஒன்பது யானைகள் கொண்ட முதல் குழு, இன்று காட்டில் இருந்து புறப்படுகிறது. விழா விமரிசையாக நடக்க 16 கமிட்டிகள் அமைக்கப்பட்டன.

உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா, செப்டம்பர் 26ம் தேதி துவங்கி, அக்டோபர் 5ம் தேதி முடிகிறது. இறுதி நாளில் விஜயதசமியை ஒட்டி ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும்.விழாவுக்கு ஒன்றரை மாதத்திற்கு முன்பே, ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகள், காட்டில் இருந்து, அரண்மனைக்கு அழைத்து வரப்படும்.இதற்கான ஆலோசனை கூட்டம், மைசூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.கூட்டுறவு துறை மற்றும் மாவட்ட பொறுப்பு துறை அமைச்சர் சோமசேகர், மேயர் சுனந்தா பாலநேத்ரா, கலெக்டர் பகாதி கவுதம், போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா, மாவட்ட துணை வன காப்பாளர் கரிகாலன் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இரண்டு ஆண்டுகள் போன்று, அம்பாரியை சுமந்து செல்லும் பொறுப்பு, இம்முறையும் அபிமன்யூ யானையிடம் வழங்க தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து விழாவில் பங்கேற்கும் யானைகள் போஸ்டர் வெளியிடப்பட்டது.விழாவை விமரிசையாக கொண்டாடும் வகையில், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையில் 16 கமிட்டிகள் அமைக்கப்பட்டன. இதற்கிடையில், இரண்டு குழுக்களாக, 14 யானைகள் காட்டில் இருந்து மைசூரு நகருக்கு புறப்படுகிறது. முதல் கட்டமாக, ஒன்பது யானைகள் ஹுன்சூர் தாலுகா, வீரனஹொசஹள்ளி கிராமத்தில் இருந்து இன்று காலை 9:01 மணியில் இருந்து 9:35 மணிக்குள் கன்னி லக்னத்தில் கஜபயணம் புறப்படுகிறது.இதற்காக மத்திகொடு யானைகள் முகாமில் இருந்து, வீரனஹொசஹள்ளி கிராமத்துக்கு யானைகள் நேற்று புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
 
Advertisement