Advertisement

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடி தேரோட்டம்

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில், நேற்று ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாள் தேரில் வலம் வந்தார்.

இக்கோயிலில் ஆக. 3 காலை கொடியேற்றத்துடன் பிரம்மோற்ஸவ விழா தொடங்கியது. தினமும் பெருமாள் அன்ன, சிம்ம, சேஷ, கருட, அனுமன், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதி வலம் வந்தார். நேற்று காலை 10:00 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் ஏகாந்த சேவையில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் தேரில் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க ரத வீதிகளில் தேரினை இழுத்துச் சென்றனர். பின்னர் மதியம் 1:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. தொடர்ந்து பெருமாள் கோயில் ஆடி வீதியில் பிரகாரத்தில் வலம் வந்தார். அப்போது பக்தர்கள் நூற்றுக்கணக்கான தேங்காய்களை உடைத்து பெருமாளை வரவேற்றனர். பின்னர் சிறப்பு தீப ஆராதனைக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாலை பெருமாள் சயன திருக்கோலத்தில் பல்லக்கில் அருள் பாலித்தார். இன்று காலை தீர்த்த வாரி உற்சவமும், இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.

Advertisement
 
Advertisement