Advertisement

சாய்பாபா -பகுதி 8

ஊரார் சத்யா சொன்னதை ஆரம்பத்தில் நம்பவில்லை. அவர்கள் சித்ராவதி நதியைக் கடந்து, வயலில் இருக்கும் கரும்புத்தோகையை எடுத்து வர கிளம்பினார்கள். சின்னப்பையன்... அவனுக்கு என்ன விபரம் தெரியும்? நாம் புறப்படுவோம். மழை வருவதற்குள் கரும்புத்தோகையை எடுத்து வந்து வெங்கம்மாவின் செங்கல் சூளையில் வைப்போம், என்றார் ஒரு பெரியவர்.சத்யா மீண்டும் அடித்து சொன்னான். அவனை நம்பும் சிறுவர்களைத் தவிர வேறு யாரும் அவன் சொன்னதைக் கேட்கவில்லை. வானமோ இன்னும் கருத்தது. சத்யா சொன்னது இதுவரை பொய்த்ததில்லை. ஆனால் வானம் மேலும் மேலும் கறுக்கிறதே! இவன் சொன்னது போல் நடக்காதா? அப்படியானால் இவனது மகிமை என்னாவது? சத்யாவின் நண்பர்கள் கவலைப்பட்டனர்.சத்யாவின் சொல்லைக் கேட்காமல் புறப்பட்டவர்கள் ஆற்றங்கரை வரை தான் சென்றிருப்பார்கள். வானம் திடீரென வெளுத்தது. பெரும் காற்றடித்தது. மேகக்கூட்டம் போன திசை தெரியவில்லை. சத்யாவின் சொல்வாக்கை அப்போது தான் எல்லாரும் உணர்ந்தனர். புறப்பட்டு சென்ற அனைவருமே அவனிடம் ஓடி வந்தனர்.நீ தெய்வப்பிறவி என்பதில் சந்தேகமே இல்லையப்பா! பெரும் மழை பெய்யும் என எதிர்பார்த்தோம். வெங்கம்மாவின் சூளையைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் உன் சொல்லைக் கேட்காமல் போனோம். ஆனால் உன்னைப் புரியாத இந்த ஜென்மங்களுக்கு புத்தி புகட்டி விட்டாய் என அனைவரும் கூறினர். அப்போது அங்கே மழை பெய்தது. என்ன மழை...கண்ணீர் மழை...சத்யாவின் பெருமையை நினைத்து அவனது ஊரார் வடித்த ஆனந்தக் கண்ணீர் மழை! சத்யா பதிலேதும் சொல்லவில்லை. அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே புறப்பட்டான். அவனது நண்பர்களுக்கோ தங்கள் தலைவன் செய்த அற்புதத்தை நினைத்து மிகவும் பெருமை. ஒரு சிறுவன் ஈஸ்வராம்பாவிடம் ஓடிப் போனான். நடந்ததை வரிவிடாமல் சொன்னான். அவர் ஆச்சரியப்பட்டார். பக்கத்து வீட்டு சுப்பம்மாவிடமும் சம்பவம் பற்றி சொன்னார். சுப்பம்மா மகிழ்ச்சியுடன், ஈஸ்வராம்பா! அவன் உனக்கு மட்டுமா பிள்ளை..எனக்கும் பிள்ளை தான். என் பிள்ளை இதை மட்டுமா செய்வான்...ஒரு காலத்தில் உலகமே அவனைப் பார்க்க வரிசையில் காத்துநிற்கும்... வேண்டுமானால் பார்... என பெருமை பொங்க சொன்னார்.ஒருநாள் ஊரில் திருவிழா. கதாகாலட்சேபம் நடத்துவதென முடிவாயிற்று. என்ன தலைப்பு கொடுக்கலாம் என சிந்தித்தனர். பிரகலாதன் கதை சொல்வதென முடிவாயிற்று.காலட்சேபம் நடந்து கொண்டிருந்தது. பிரகலாதன் தன் தந்தை இரண்யனிடம், வாதாடிக் கொண்டிருந்த காட்சி வந்தது.எங்கே உன் நாராயணன்? கர்ஜிக்கிறார் இரண்யன் போல் காலட்சேபம் செய்பவர். பின்பு அவரே குரலை மாற்றி, அவர் இந்தத் தூணில் கூட இருக்கிறார், என்று பிரகலாதன் போல சொல்கிறார்.இரண்யன் கதாயுதத்தால் தூணை பிளக்கும் காட்சியை ஆவேசமாக அவர் சொல்லவும், கதை கேட்டுக் கொண்டிருந்த சத்யா, ஊய் என சத்தமிட்டபடி ஆட்டம் போட்டான்.கிருஷ்ணரின் அவதாரமான சத்யா நரசிம்மராகவே மாறிவிட்டான். அவனை அடக்க யாராலும் இயலவில்லை. பெரியவர்கள் அவன் அருள் வந்து ஆடுவதைக் கண்டு பரவசமும், பயமும் கொண்டனர். நரசிம்ம பகவானே! நீங்கள் சாந்தமடைய வேண்டும், என சில தைரியசாலிகள் கூறினர்.ஆனால் சத்யா அடங்கவில்லை. பின்பு ஊரிலுள்ள பயில்வான்கள் சிலர் வரவழைக்கப்பட்டு, சத்யாவை அடக்க வேண்டியதாயிற்று. இதன் பிறகு, சத்யாவை ஊர்மக்கள் கிருஷ்ணனாகவே பார்க்க துவங்கினர். சத்யாவின் தந்தை வெங்கப்பராஜூவும் சிறந்த நாடக நடிகர். சத்யாவை நாடகங்களில் ஈடுபடுத்தினால் என்ன என்று அவருக்கு தோன்றியது. சத்யாவுக்கு பிடித்த பக்தி நாடகங்களை நடத்துவோம் என முடிவு செய்தார். அவரே சொந்தமாக நாடகங்களை தயாரித்தார். அதில் நடிக்க சத்யாவுக்கு விருப்பமா எனக் கேட்டார்.சத்யா நீ கிருஷ்ணனாக நடிக்கிறாயா?சத்யா சிரித்தான். இறைவனுக்கே வந்த சோதனை என்பது இதுதானோ? கிருஷ்ணனிடமே கிருஷ்ணனாக நடிக்கிறாயா என தந்தை கேட்கிறாரே! எனினும் இப்பிறவியில் சத்யாவைப் பெற்ற தந்தை அல்லவா அவர்? தந்தையின் சொல்லுக்கு மகன் கட்டுப்பட்டான்.கிருஷ்ணனாகவே அவன் மேடைகளில் உருமாறினான். அவனது நடிப்பு எல்லாரையும் கவர்ந்தது. சத்யா மேடையில் வந்தாலே கை தட்டல் தான். பெண் வேடமிட்டும் சத்யா நடித்தான். கிருஷ்ணன் மோகினியாக அவதாரம் எடுத்தவராயிற்றே! எனவே மோகினியாகவும் வேடமிட்டு நடித்தான். கிருஷ்ணனுக்கு பிடித்த திரவுபதியாக நடித்தான். ஏழெட்டு சேலைகளை உடலில் கட்டிக் கொண்டு, துச்சோதனன் துயில் உரியும் காட்சியில் தத்ரூபமாக நடிப்பு அமைந்தது.ஒரு நாடகத்தில் சத்யாவை வெட்டப்போவது போல ஒரு காட்சி. ஈஸ்வராம்பா பயந்து போனார். மேடைக்கு தாவி ஓடி, என் மகனை வெட்டாதீர்கள், என கூக்குரல் இட்டார். சத்யா உட்பட எல்லாரும் சிரித்து விட்டனர்.அம்மா! இங்கு நாடகம் தானே நடக்கிறது? ஏன் பயப்படுகிறீர்கள்? என்றான் சத்யா.பெற்றவள் அந்த அளவு தன் பிள்ளை மீது பாசம் வைத்திருந்தாள்.ஊருக்கு அவன் தெய்வம் போல காட்சி தரலாம். ஆனால் எனக்கு அவன் பிள்ளையல்லவா? என்றே தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்வார் ஈஸ்வராம்பா. இந்தநேரத்தில் தான் பக்கத்து ஊர்களில் காலரா பரவியது. பலர் இறந்து போனார்கள். புட்டபர்த்தியையும் காலரா தாக்கும் என பஞ்சாயத்தில் எச்சரித்தனர். மக்கள் கலவரம் அடைந்தனர். என்னாகுமோ ஏதாகுமோ என்ற பீதி எங்கும் ஏற்பட்டது. அன்று சத்யாவின் உள்ளத்தில் ஒரு மகானைப் பற்றிய எண்ணம் ஏற்பட்டது. மகானின் மனதில் இடம் பெற்ற அந்த மகான் யாராக இருக்கும்?

Advertisement
 
Advertisement