Advertisement

சாய்பாபா -பகுதி 9

பகவான் ஷிர்டி சாய்பாபா பற்றிய எண்ணம் தான் அது. இத்தனைக்கும் ஷிர்டிபாபா பற்றி சத்யாவுக்கு யாரும் சொல்லிக் கொடுத்ததில்லை. ஷிர்டிக்கு சென்றதும் கிடையாது. இருப்பினும் அவர் நினைவு வந்தது. அவரைப் பற்றிய பஜனைப் பாடல்களை சத்யா பாடினான். அவனது நண்பர்களும் அதை திரும்பப் பாடினர்.இதனால் புட்டபர்த்தியை காலரா தொட்டுப்பார்க்க கூட இல்லை. மக்களுக்கு ஒரே ஆச்சரியம். சத்யாவின் பஜனைப்பாடல்களின் மகிமையால் தான் இந்த அதிசயம் நிகழ்கிறது என்பதை மட்டும் அவர்களால் உணர முடிந்தது.இப்போது பஜனைக்கு சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் வர ஆரம்பித்தனர். அவர்கள் மற்ற கிராமங்களில் உள்ளவர்களிடம், சத்யா பாடும் ஷிர்டி பஜனைப் பாடல்கள் பற்றி கூறினர். மற்ற ஊர் மக்களும் சத்யாவை தங்கள் கிராமத்திற்கு வந்து பஜனை செய்யும்படி கேட்டனர். ஆனால் காலரா பாதித்த கிராமங்களுக்கு சத்யாவை பெற்றோர் விடுவார்களா? மறுத்து விட்டனர்.சத்யா அவர்களைச் சமாதானம் செய்து அந்த கிராமங்களுக்கு சென்றான். அவனது பஜனை கோஷ்டியும் சென்றது. எங்கும் பக்திப்பரவசம் எழுந்தது. சத்யாவின் காலடிபட்ட கிராமங்களில் காலரா காணாமல் போனது. எல்லாரும் இதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். தெய்வீகச் சிறுவன் என வாழ்த்தினர்.நாடகங்களில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த சத்யாவுக்கு சவால் ஒன்றும் வந்து சேர்ந்தது. புட்டபர்த்தியை சுற்றியுள்ள கிராமங்களில் புதிய நாடகக் கம்பெனி ஒன்று வந்தது. ருஷ்யேந்திரமணி என்ற சிறுமி தான் இந்தக் கம்பெனியின் மிகப்பெரும் சொத்து. அவள் ஆடும் நடனத்திற்காகவே கூட்டம் சேர்ந்தது. அவள் மிகப்பெரிய நடிகை என்பதில் சந்தேகமே இல்லை. ஏனெனில் சத்யாவே, அவள் நடித்த நாடகத்தை காண வந்திருந்தான். அவளது நடன அசைவுகளைக் கவனித்தான்.பாட்டில் ஒன்றை தலையில் வைத்து அது கீழே விழாமல்,குனிந்தும், நிமிர்ந்தும், சுழன்றும் ஆடினாள் அவள். இதைக்கண்டு பார்வையாளர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.சத்யாவுக்கும் இதே ஆசை பிறந்தது. ருஷ்யேந்திராவை விட மிகச்சிறப்பாக ஆடி பெயரைத் தட்டிச் செல்ல வேண்டும் என்பதே அந்த ஆசை. தந்தை வெங்கப்பராஜூவும், தாய் ஈஸ்வராம்பாளும் கூட இதற்கு சம்மதித்தனர். ருஷ்யேந்திரா ஒரு தீப்பெட்டியை தரையில் வைத்து, அதனை ஒரு கைக்குட்டையால் மூடி, பாட்டிலை தலையில் வைத்து வளைந்து நெளிந்து கீழே விழாமல், உதடுகளால் கவ்வி கைக்குட்டையை எடுத்தாள்.இதைவிட அரிய சாகசத்தை நிகழ்த்த சத்யா முடிவு செய்தான். . நண்பர்களிடம் அதைச் செய்து காட்டினான். நண்பர்கள் சத்யாவிடம், பக்கத்து ஊர் திருவிழாவில் இந்த நடனத்தை ஆடிக்காட்டு. நம் நாடகக்குழுவின் பெருமையை உயர்த்து, என்றனர்.சத்யாவை, அவரது சகோதரிகள் ருஷ்யேந்திரமணி போலவே அலங்கரித்தனர். சத்யா பெண் வேடத்தில் ஜொலித்தான். இறைவன் ஆணும், பெண்ணுமாக இருக்கிறான். அவனுக்கு இருபிரிவும் ஒன்றே என்பதை சத்யசாய் இங்கே குறிப்பால் உணர்த்தியிருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.சத்யா நாடக மேடையில் ஏறினான். கம்சனின் அவையில் ஒரு நடன மாது ஆடுவது போன்ற காட்சி. சத்யா இசைக்கேற்ப ஆடினான். தலையில் பாட்டில் இருந்தது. எவ்வளவு சுழன்று ஆடியும் கீழே விழவில்லை. இறைவன் ஆனந்தநடனம் புரிவது போல, பார்வையாளர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். சத்யா கீழே குனிந்தான். ருஷ்யேந்திரமணி உதடுகளால் கைக்குட்டையைத் தானே எடுத்தாள்! ஆனால் சத்யாவோ கண் இமைகளால் ஒரு குண்டூசியையே எடுத்து சாதனை படைத்து விட்டான்.நாடகம் நடந்த திடலே கரகோஷத்தால் அதிர்ந்தது. ஈஸ்வராம்பாவும், வெங்கப்பராஜூவும் மகனின் திறமை கண்டு, ஆனந்தக் கண்ணீர் சிந்தினர்.ஈஸ்வராம்பாவுக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் உண்டு. வயதுக்கு மீறிய சக்தியுடன் சத்யா பல காரியங்களைச் செய்கிறான். அவன் செய்யும் ஒவ்வொரு காரியமும் ஒரு அற்புதமாகவே தெரிகிறது. இதனால் அவனுக்கு திருஷ்டி ஏற்பட்டு, ஏதாவது ஆகி விட்டால் என்ன செய்வது, என யோசிப்பார்.தன் சந்தேகத்தை பக்கத்து வீட்டு தோழியும், சத்யாவை தன் மகன் போல பாசம் செலுத்தியவருமான சுப்பம்மாவிடம் கேட்டார். சத்யா! இப்படி செய்வதால் திருஷ்டி ஏற்பட்டு, அவனுக்கு ஏதும் ஆகி விடுமோ? என்றார்.சுப்பம்மா சிரித்தார்.அடி போடி! ஏன் அஞ்சுகிறாய். அவன் உன் பிள்ளை மட்டுமல்ல. என் பிள்ளையும் தான். அவன் இங்கு தான் பொழுது போக்குகிறான். இங்கு தான் சாப்பிடுகிறான். அவனை பெற்ற தாயான உன்னை விட முழுமையாக நான் அறிவேன். அவன் குழந்தைகளிடம், சினிமா, பொழுதுபோக்கு என தறிகெட்டு அலையாதீர்கள். அந்த நேரத்தை இறை வழிபாட்டுக்கு பயன்படுத்துங்கள். பண்டரிநாதன் புகழ் பரப்பும் பஜனையைப் பாடுங்கள், என்று புத்திமதி சொல்கிறான். இதிலிருந்து அவன் சாதாரண பிள்øளா? இறைவனே அவன் தான் என எனக்கு தோன்றுகிறது. இறைவனுக்கு திருஷ்டி எப்படி ஏற்படும்? நீ மனதைக் குழப்பாதே! அவனுக்கு ஏதும் ஆகாது, என்றார்.ஆனால் இந்த விஷயத்தில் ஈஸ்வராம்பாவே ஜெயித்தார். கம்சநாடகம் முடிந்த மறுநாளே ஊரார் கண்பட்டதாலோ என்னவோ? சத்யாவுக்கு கடும் ஜூரம் அடித்தது. ஈஸ்வராம்பா என்ன செய்வதென தெரியாமல் தவித்தார். அன்று இரவில் ஒரு பெரிய அதிசயம் நடந்தது. யாரோ ஒருவர் வீட்டுக்குள் வந்தது போன்ற ஒரு உணர்ச்சி...அவரது காலில் மரத்தால் ஆன காலணி. அதன் சத்தத்துடன், வந்த உருவம் சத்யா இருந்த அறைப்பக்கம் சென்றது. சற்று நேரத்தில் சத்தம் நின்றுவிட்டது. ஈஸ்வராம்பா நடுங்கியபடி சத்யாவின் அறைக்குள் சென்றார். அங்கே சத்யா அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். உடம்பில் கையை வைத்து பார்த்தார் ஈஸ்வராம்பா. காய்ச்சல் இல்லை. உடம்பே ஜில்லிட்டு இருந்தது. காய்ச்சல் குணமானதற்கும், உள்ளே வந்த உருவத்துக்கும் என்ன சம்பந்தம்? அது புரியாத புதிராகவே இருந்தது.அடுத்தநாள் சத்யா சகஜமாகி விட்டான். வீட்டுத் திண்ணையில் அவன் அமர்ந்திருந்த போது, அவ்வூர் சிறுவர்கள் சிலர் அலறி அடித்து ஓடினர். பெரியவர்கள் அவர்களை வீட்டுக்குள் இழுத்துப் போட்டு கதவுகளை அடைத்தனர். ஒரு சில பெரியவர்கள் மட்டுமே எதையும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சத்யா அங்கே என்ன நடக்கிறது என்பதை அறிய ஆவலுடன் இருந்தான்.அப்போது ஒருவர் கடாமீசையுடன் ஊருக்குள் வந்தார். ராணுவ சீருடை, கையில் துப்பாக்கி சகிதமாக வந்த அவர், உறுமலான குரலில் தோரணையுடன், ஒரு பெரியவரிடம், அந்த மந்திரவாதி பையனை எங்கே? என்று கேட்டார்.

Advertisement
 
Advertisement