Advertisement

வேலூர் தங்கக் கோவில் 6ம் ஆண்டு துவக்க விழா!

வேலூர்: வேலூர் தங்கக் கோவில், ஆறாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, புனித நீர் புஷ்ப ரதம் ஊர்வலம் நடந்தது. வேலூர் அடுத்த திருமலைக்கோடி ஓம் சக்தி நாராயணி பீடம் சார்பில், சக்தி அம்மா ஆன்மிக பணிகளுடன் பல்வேறு வளர்ச்சிப் பணி செய்து வருகின்றார். அதன்படி நாராயணி பீடத்தின் அருகில் ஸ்ரீபுரத்தில், 2007ம் ஆண்டு, 100 ஏக்கர் நிலத்தில், 500 கிலோ தங்கத்தால் தங்கக் கோவில், 600 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது.தங்க கோவில் திறக்கப்பட்டு நேற்றுடன் ஐந்தாம் ஆண்டு முடிந்து ஆறாம் ஆண்டு துவங்கியது. இதையொட்டி புனித நீர் புஷ்ப ரதம் ஊர்வலம் நடந்தது. வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்து புனித நீர் ஊர்வலம், நேற்று காலை, 9 மணிக்கு புறப்பட்டது.கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். தங்க கோவில் இயக்குனர் சுரேஷ்பாபு, நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலாஜி, நாராயணி பீடம் அறக்கட்டளை தலைவர் சவுந்தரராஜன், பீடம் மேலாளர் சம்பத், எம்.எல்.ஏ., கலையரசன், தொழில் அதிபர் வெங்கடசுப்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.கேரள சண்டி மேளம், இசைக்குழு, பம்பை உடுக்கை, மேள வாத்தியங்கள், பக்தி பஜனைகளுடன் ஜெய் ஸ்ரீராம் சேவா சங்கம் சார்பில் நடந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சக்தி அம்மாவின் தொண்டர்கள், ஆயிரத்து எட்டு தட்டுக்களை எடுத்துக் கொண்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் இசைக்கேற்றபடி ஒரு குதிரை நடனமாடிக் கொண்டு சென்றது. 8 கி.மீ., தூரம்உள்ள தங்கக் கோவிலுக்கு ஊர்வலம் சென்றது. பின்னர் சஹஸ்ர சுக்த ஹோமம், மஹா பூர்ணாஹதி, லட்சுமி நாராயணிக்கு சஹஸ்ரகலச அபிஷேகம் நடந்தது. கோவில் வண்ண விளக்குகளால் அலங்காரிக்கப்பட்டு ஜொலித்தது.

Advertisement
 
Advertisement