Advertisement

திருவச்சூர் மதுர காளியம்மன் கோவிலுக்கு புதுச்சேரியில் தயாராகும் பிரமாண்ட சிற்பங்கள்

புதுச்சேரி: திருவச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக பிரமாண்டமான சுடுமண் சிற்பங்கள் புதுச்சேரியில் தயாராகி வருகிறது.

பெரம்பலுார் மாவட்டம் திருவச்சூரில் பிரசித்திப் பெற்ற மதுர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் காட்டுக்குள் அமைந்துள்ள திருவச்சூர் காளியம்மன் கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகிறது. வரும் 27ம் தேதியன்று கும்பாபிேஷகத்திற்கு தேதி குறிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக பிரமாண்டமான சுடுமண் சிற்பங்கள், பத்மஸ்ரீ விருது பெற்ற கலைஞரான முனுசாமி தலைமையிலான குழுவினரின் கை வண்ணத்தில் உருவாகி வருகிறது. வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில், சுடுமண் சிற்பங்களை உருவாக்கும் பணியில் கலைஞர்கள் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, 25 அடி உயரமுள்ள பொன்னுசாமி, 23 அடி உயரமுள்ள செங்கமலை அய்யா, 21 அடி உயரமுள்ள பெரியசாமி, செல்லியம்மாள், பொன்னன் சடையார், ஆத்தடியார், கிணத்தடியார், லாட சன்னியாசி, பொன்னார், கொரபுலியான், நாக கன்னி உள்ளிட்ட கிராம தெய்வங்களின் சிற்பங்கள் தெய்வீக அழகுடன் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், 20 அடி உயரமுள்ள பட்டத்து குதிரை, 13 அடி உயரமுள்ள 4 குதிரைகள், 7 அடி உயரமுள்ள 6 மாடுகள் ஆகியவையும் அழகிய வேலைபாடுகளுடனும், தத்ரூபமாகவும் உருவாகி உள்ளது. மொத்தம் 29 சுடுமண் சிற்பங்கள் தெய்வீகமான கம்பீரத்துடனும் தயாராகி விட்டது. சங்கராபரணி ஆற்றின் களிமண்ணை எடுத்து வைக்கோல் கூளம், நெற்பதர் ஆகியவற்றை கலந்து பாரம்பரியமான முறையில் சுடுமண் சிற்பங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய முறையில் சுடுமண் சிற்பங்கள் செய்யும் தொழிலை, 22வது தலைமுறையாக முனுசாமி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஓராண்டாக நடந்து வருகின்ற சிற்பங்கள் செய்யும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. களிமண்ணில் தயார் செய்யப்பட்டுள்ள சிற்பங்களை சூளையில் வைத்து சுடும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்தவுடன் வண்ணம் தீட்டப்பட்டு, லாரிகளில் திருவச்சூருக்கு எடுத்து செல்லப்பட்டு கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படும்.

சுடுமண் சிற்பத்தின் தனித்தன்மை: சுடுமண் சிற்ப கலைஞர் முனுசாமி கூறும்போது, புதுச்சேரியில் ஓடுகின்ற சங்கராபரணி ஆற்று மண்ணுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. பெரிய சுடுமண் சிற்பங்கள் செய்வதற்கு, சங்கராபரணி ஆற்று மண் மிகவும் ஏற்றதாக உள்ளது. சங்கராபரணி மண்ணை பயன்படுத்தி, திருவச்சூர் கோவிலுக்கு அனைத்து சிற்பங்களும் நல்லமுறையில் உருவாகி உள்ளது. சுடுமண் சிற்பங்கள் செய்வதை பாரம்பரியமாக செய்து வருகிறோம். 22வது தலைமுறையாக நானும், 23வது தலைமுறையாக எனது மகனும் இந்த தொழிலில் உள்ளோம். எங்களது அனுபவத்தில் கூறுவது என்னவென்றால், பெரிய சுடுமண் சிற்பங்கள் உள்ள ஊரில் இடி விழாது. அப்படியே விழுந்தாலும் பெரிய சுடுமண் சிற்பங்கள் இடியை உள்வாங்கி பூமியில் செலுத்தி விடும். மண், நீர், ஆகாயம், காற்று, அக்னி ஆகிய பஞ்சபூதங்களை உள்ளடக்கி உருவாக்கப்படும் சுடுமண் சிற்பங்களுக்கு சில விசேஷ குணங்கள் உள்ளன. நமது உடலில் உள்ள வைரஸ்களை சுடுமண் சிற்பங்கள் ஈர்த்து விடும். இதனால், கிராம தேவதைகளை நாடி வந்து வணங்குபவர்களுக்கு நோய் பாதிப்பு இருக்காது என்றார்.

Advertisement
 
Advertisement