Advertisement

அய்யனாருக்கு காது வளர்க்கும் ஆம்பள வாரிசுகள்!

சிவகங்கை மாவட்டம், சூரக்குடி கிராம கோயிலில் குடியிருக்கிறார், செகுட்டு அய்யனார். ஏழு ஏக்கர் பரப்பளவில் சுற்றிலும் செடிகள் சூழ்ந்திருக்க... திரும்பும் திசையெல்லாம் குதிரைகள்... மண் பாதையில் நடந்து செல்லும் போது, மனதை சிலிர்க்கச் செய்கிறது. செகுட்டு அய்யனார் கோயில் வளைவைத் தொடும் போது, காலணிகளை கழற்றி விட வேண்டும். குறுமணலில் பாதம் பட்டபோது, மனதுக்குள் குறுகுறுப்பு எட்டிப் பார்த்தது. இருபுறமும் செடிகளுடன் நடப்பதற்கான சிறுபாதை முடிவில், வானுயர்ந்த இரண்டு புரவிகளுடன், பூதகணங்கள் பிரமிப்பை தருகின்றன. புரவிகளின்(குதிரை) நடுவில் ஓங்கி உயர்ந்த ஒற்றை யானை, அய்யனாரை நோக்கி வீற்றிருக்க... நாமும் அந்தத் திசையில் பார்வை பதித்தோம். பக்கத்தில் சென்று பார்க்காதீங்க... என்று, நம் கையைப் பிடித்து அன்பாய் அழைத்துச் சென்றனர், கிராமப் பெண்கள். இருபதடி தூரத்தில் நின்று எட்டிப் பார்த்தோம். அய்யனாரைப் படம் எடுப்பதற்கு அனுமதி இல்லை என்பதால், பூஜை முடியும் வரை காத்திருந்த வேளையில், நம் காதுகளில் கிசுகிசுத்தனர், சிலர். அய்யனாருக்கு பூஜை செய்யும் சமூகத்தின் ஆண் வாரிசுகள் அத்தனை பேரின் காதுகளும் நீளமாக இருந்தன. ஆர்வமாய் கேட்டபோது, கதை சொல்ல ஆரம்பித்தனர் பெரியண்ணன், சின்னையா அம்பலம். முன்னோர்கள் இருவர், வளர்ப்பு நாயுடன், காட்டு வழியே இருவேறு பாதைகளில் மானை வேட்டையாட வந்தனர். அப்போது இருட்டத் துவங்கியதால், அதற்குமேல் வீடு செல்லவில்லை. அதில் ஒருவர், பசிக்காக பூமிக்கு அடியில் உள்ள மரவள்ளிக் கிழங்கை தோண்டிய போது, ரத்தம் பீறிட்டது. பதறித் தவித்து கீழே பார்த்தபோது, அவரது கண்ணில் பார்வை போனதாம். தன் வேட்டியை கிழித்து ரத்தத்தில் தோய்த்து, நாயின் வாலில் கட்டி வீட்டிற்கு அனுப்பினராம். நாயைத் தொடர்ந்து அவரது மனைவி காட்டுக்குள் வந்தபோது, கணவரின் கண் பார்வை காணாமல் போனது, கண்டு அழுதார். கண்ணீர் விட்டு கதறினார். அய்யனாரை தொழுதார். இழந்த பார்வை மீண்டும் கிடைத்தது. பூமிக்கு அடியில் இருந்த அய்யனாரின் காதில் கம்பி பாய்ந்ததால் ரத்தம் வந்தது. அதற்கு பரிகாரமாக, என் வழித் தோன்றல்களின் ஆண் வாரிசுகள், இதே போல காதை பிளந்து கொள்வர், என்று, சத்தியம் செய்தாராம். அன்று முதல் இன்று வரை, அய்யனாருக்கு பூஜை செய்யும் ஆண் வாரிசுகள், காது வளர்க்க ஆரம்பித்தனர். பிறந்த மூன்றாம் மாதத்திலேயே காது குத்தி விடுவர். அதன் பின் சோளத் தட்டையை செருகி விடுவர். கனமான அலுமினிய தொங்கட்டான்களை காதில் மாட்டி விடுவர். காது நன்றாக இழுத்தபின், தொங்கட்டான்கள் கழற்றப்படும். நூறாண்டுகளைக் கடந்தும், இந்த சம்பிரதாயம் இன்னமும் கடைபிடிக்கப் படுகிறது. வெளியூர், வெளிநாடு சென்றாலும், காதுகளை வைத்தே, சமூகத்தை கண்டுபிடித்து விடுவோம், என்றனர். வைகாசியில் விசேஷம் இருக்கு. கண்டிப்பா வந்துருங்க... என்றவர்களின் அன்பான உபசரிப்போடு, விடைபெற்றோம். காலணியை அணிந்தபோது, அய்யனார் குளத்தில் இருந்த தண்ணீரை குடத்தில் எடுத்து வந்து கொண்டிருந்தார், பெரியவர். சற்றே பாலின் நிறத்தில் இருந்ததால், இப்படியே குடிப்பீர்களா... வடிகட்டுவீர்களா என்றோம். எங்க அய்யனாருக்கு இந்தத் தண்ணியில தான் பூஜை செய்யுறோம். அப்புறம் நாங்க எப்படி, வடிகட்டி குடிப்போம். இதுல பொதுஜனங்க குளிக்கறதில்லை. தண்ணி சுத்தமா இருக்கும். அதனால அப்படியே குடிப்போம், என்றார் பெரியவர்.

Advertisement
 
Advertisement