Advertisement

கூரத்தாழ்வார்

திருவரங்கனுடைய அடியார்களில் ஒருவரான உத்தமநம்பி என்பவர், லட்சுமீகாவ்யம் என்ற மிகவும் அழகிய காவியத்தை இயற்றியுள்ளார். அந்த நூலில் உள்ளபடி, கூரத்தாழ்வாருடைய வாழ்க்கை வரலாற்றை இங்கு விவரிக்கிறோம். கூரத்தாழ்வார் ஹாரீத கோத்திரத்தைச் சார்ந்த தனவானான அந்தணர். இவர் காஞ்சீபுரத்துக்கு வடக்கே இரண்டு கல் தொலைவுள்ள கூரக்கிரகாரத்தில் வாழ்ந்தார். அங்கே பெரிய நிலக்கிழாராக இருந்ததனால் கூரேசர் என்றும் கூரநாதர் என்றும் புகழ் பெற்றார். தமக்குத் தக்க தர்மபத்தினியான ஆண்டாள் என்ற மங்கையை மணந்த இவர், தமது அளவற்ற செல்வத்தை ஏழை எளியோர்களுக்கு வாரி வழங்குவதில் செலவிட்டார். சிறுவயதிலிருந்தே இவர் ராமானுஜரிடம் மிகவும் மதிப்புக் கொண்டிருந்தார். யதிராஜர் துறவறம் ஏற்ற பிறகு தம் மனைவியுடன் வந்து, அவருக்குச் சீடராகி, ஆசாரியனுடனேயே எப்பொழுதும் இருக்கலானார். இவர் பெரிய பண்டிதர். முன்பே கூறியபடி ஒப்பற்ற ஞாபகசக்தி வாய்ந்தவர். ஒருதடவை இவர் காதில் எது விழுந்தாலும் அல்லது இவர் எதைப் படித்தாலும் பிறகு அதை எக்காலத்திலும் நினைவில் கொள்வார். இவருடைய உதவி கொண்டுதான் ராமானுஜர் மகாபண்டிதரான யாதவப் பிரகாசரை விவாதத்தில் தோல்வியுறச் செய்தார். கூரத்தாழ்வாருடைய அரண்மனை போன்ற திருமாளிகையில் நள்ளிரவு வரையில், பெறுங்கள் கொடுங்கள், மகிழுங்கள் என்ற கோஷமே எப்பொழுதும் கேட்கும் பிறகுதான் வெளியே இரும்பு வாசல் சாத்தப்பெற்று. மீண்டும் அதிகாலையில் திறக்கும் ராமானுஜர் காஞ்சியை விட்டுத் திருவரங்கம் சென்றபிறகு. கூரத்தாழ்வார் செல்வத்திலும் சொத்திலும் இருந்த அனைத்து அக்கறையையும் துறந்துவிட்டார். உலகத் தாயும், பேரருளாளனின் தேவியுமான பெருந்தேவித் தாயார் ஒரு தடவை கூரத்தாழ்வானின் திருமாளிகையின் தலைவாசற்கதவு மூடப்பெறும் ஒலியைக் கேட்டு, இது என்ன சத்தம் என்று வினவ, திருக்கச்சி நம்பி கூரத்தாழ்வானின் பணிகளை வர்ணித்து. அம்மா! அதிகாலையிலிருந்து நள்ளிரவு வரையில் எளியவர், குருடர், நொண்டி, முதலியவர்களுக்கு உதவும் தொண்டு நடைபெறுகிறது. தங்கள் வேலைகள் முடிந்ததும் சிறிது நேரம் இளைப்பாறுவதற்காகச் சேவகர்கள் அந்தத் தருமசாலையின் வெளிவாசலை மூடுகின்றனர். இரவுதோறும் வாசற்கதவு மூடும் சத்தம்தான் இங்கே கேட்கிறது என்று சொன்னாராம். கூரத்தாழ்வாரைக் காண விரும்பிய திருமகள், திருக்கச்சி நம்பியிடம், குழந்தாய்! நாளைக் காலையில் அந்த உத்தம ஆத்மாவை என்னிடம் அழைத்து வா. அவனை நேரில் பார்க்க விரும்புகிறேன் என்றாள். இதன்படியே மறுநாள் காலையில் திருக்கச்சி நம்பி கூரத்தாழ்வாரைச் சந்தித்து, உலகத்தாயின் விருப்பத்தைத் தெரிவித்தபொழுது, அவர் சொன்னார்; மகாத்மாவே! நன்றியற்ற தீய மனம் கொண்ட, பாவியான, ஏமாற்றும் தன்மையுள்ள நான் எங்கே? பிரம்மனும் சிவனும் வழிபடும் உலகத் தாயான திருமகள் எங்கே? புலையன் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்கின்றனர். நான் புலையனையும் விடத் தாழ்ந்தவன். செல்வம் என்ற குப்பை என் உள்ளத்தையும் ஆத்மாவையும் மாசுபடுத்தியுள்ளது. இந்த வாழ்வில் பெருந்தேவித் தாயாரைத் தரிசிக்கும் தகுதி எனக்கு என்ன இருக்கிறது? இப்படிச் சொன்னதுடன் கூரத்தாழ்வார் தாம் அணிந்திருந்த விலையுயர்ந்த பட்டாடைகளைக் கழற்றி வீசியெறிந்தார். பிறகு ஒரு கந்தையாடையை அணிந்து, திருமாளிகையிலிருந்து வெளியே வந்து திருக்கச்சி நம்பியிடம், சுவாமி! தாயாரின் உத்தரவை நான் மீற முடியாது. அவளுடைய தாமரைப் பாதத்தைத் தரிசிக்க, என்னைச் சித்தம் செய்து கொள்கிறேன். பணம் என்ற அழுக்கினால் மாசடைந்த என் உடலையும் மனத்தையும் ஆசாரியரின் திருவடி பதிந்த அமரத்தன்மையுள்ள குளத்தில் மூழ்கி மூழ்கித் தூய்மைபடுத்திக் கொள்ள வேண்டும். இதோ என் மாசை நீக்கப் போகிறேன். இந்த அழுக்கைக் கழுவ எவ்வளவு நேரம் பிடிக்குமோ தெரியாது. உங்களைப் போன்ற மகாத்மாவின் ஆசியினால், இந்த வாழ்க்கையிலேயே உலகமாதாவின் தாமரைத் திருவடிகளைத் தரிசிக்கும் தகுதி கிடைக்கலாம் அல்லவா? என்றார். உடனே கூரத்தாழ்வார் ஸ்ரீரங்கத்தை நோக்கி நடந்தார். ஆண்டாளும் அவரைப் பின்பற்றினார். கணவர் தீர்த்தம் அருந்தும் பொன்வட்டில் ஒன்றை மட்டும் அவள் கையில் எடுத்துக் கொண்டாள். சிறிது தூரம் சென்றதும் ஓர் அடர்ந்த காடு வந்தது. நெஞ்சில் அச்சம் கொண்டு ஆண்டாள் கணவரை, சுவாமி! இந்தக் காட்டில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லையே?... என்று கேட்டாள். பணக்காரர்களுக்குத்தான் அஞ்சுவதற்குக் காரணம் உண்டு. உன்னிடம் பணமோ செல்வமோ இல்லையென்றால், அஞ்சுவதற்கு ஏதுமில்லை வா மேலே நட என்றார் கூரத்தாழ்வார். இதைக் கேட்ட ஆண்டாள் அடுத்த கணமே அந்தப் பொன்வட்டிலைத் தூர வீசி எறிந்தாள். மறுநாள் அவர்கள் திருவரங்கம் சேர்ந்தனர். அந்தத் தம்பதிகளின் வரவை அறிந்து, ராமானுஜர் மிக்க அன்புடன் அவர்களைத் தமது மடத்துக்கு அழைத்து வந்தார். அவர்கள் குளித்து, உண்டு, களைப்பாறிய பின்பு அவர்கள் வாழ்வதற்கு ஒரு தனி வீட்டை ஏற்படுத்திக் கொடுத்தார். கூரத்தாழ்வார் பிட்சையெடுத்து வாழ்ந்தார். இப்பொழுது தம்முடைய பெருமை பொருந்திய ஆசாரியர் உபதேசித்த மந்திரத்தை அவர் எப்போதும் நினைவில் கொண்டு, பரமனைத் துதித்து, தூய சாஸ்திரங்களின் நுட்பம்பற்றி உரையாடித் தம் ஆசாரியரின் பாதகமலங்களைத் தொழுதவண்ணம் பெரிய பாக்கியவனாக வாழ்ந்தார் ஆண்டாளும் அவரது படைவிடையில் ஈடுபட்டு தாங்கள் விட்டுவந்த அளவற்ற செல்வம்பற்றித் துளியும் நினையாமல், வெகு ஆனந்தமாக வாழ்வைத் கழித்தாள். கணவரின் சுகமே அவளுடைய சுகமாக இருந்தது. ஒரு நாள் நண்பகல் வரையில் கடுமழை பொழிவே, கூரத்தாழ்வார் வெளியில் பிட்சைக்குப் போக இயலவில்லை. எனவே கணவரும் மனைவியும் நாள்முழுவதும் உபவாசம் இருந்தனர். கூரத்தாழ்வாருக்குப் பசி பற்றிய நினைவே இல்லை. ஆனால் கணவருக்குப் பணிவிடை செய்வதையே லட்சியமாகக் கொண்டிருந்த ஆண்டாள், கணவர் உபவாசம் இருப்பதைப் பொறுக்காமல், அரங்கநாதனை மனத்துக்குள் வேண்டிக் கொண்டாள். சற்று நேரம் பொறுத்துக் கோவில் அர்ச்சகர். பெருமானுக்கு நிவேதனமான சுவையுள்ள பலவகை அன்னத்தைக் கொண்டு வந்து, கூரத்தாழ்வானிடம் கொடுத்துச் சென்றார். இதைக் கண்டு வியப்புற்ற கூரத்தாழ்வார் மனைவியைப் பார்த்து, நீ உன் மனத்தில் அரங்கனிடம் ஏதாவது வேண்டிக் கொண்டாயா? இல்லையென்றால் காக்கை மலத்தைப் போல நாம் விட்டு வந்த சுகபோகங்களில் பரமன் ஏன் நம்மை மீண்டும் பிணைக்கப் பார்க்கிறான்? என்று கேட்டார். ஆண்டாள் கண்ணில் நீர்வடிய தான் மனத்தில் நினைத்ததை ஒப்புக் கொண்டாள். சரி நடந்தது நடந்துவிட்டது. இனி மறுபடி எப்போதும் இப்படிச் செய்யாதே என்று கூறிய கூரத்தாழ்வார் அந்தப் பிரசாதத்தில் தாம் சிறிது எடுத்துக்கொண்டு, மீதியை மனைவியிடம் உண்ணக் கொடுத்தார். மீதி இரவை அவர் திருவாய் மொழியை ஓதிய வண்ணமே கழித்தார். பரமனின் இந்தப் பாவனமான பிரசாதத்தை உண்டபின் பத்து மாதம் கழித்து, சக வருஷம் 983 இல் சுபக்ருத் ஆண்டு, வெண்மதி நிறைந்த இரவில், அனுஷ நட்சத்திரத்தில் ஆண்டாள் இரட்டை ஆண்குழந்தைகளைப் பெற்றெடுத்தாள் என்பது ஐதிகம். இந்தக் குழந்தைகளின் பிறப்புப்பற்றிச் செவியுற்றவுடனே ராமானுஜர் எம்பாரை அனுப்பிக் குழந்தைகளுக்குப் பிறந்தவுடனே செய்ய வேண்டிய சடங்குகளை செய்யச் சொன்னார். ஜாதகர்மம் ஆனபிறகு, எம்பார் அந்தக் குழந்தைகளின் காதில், ஸ்ரீமந்நாராயணனுடைய திருவடிகளைப் புகலாகப் பற்றுகிறேன்; திருமகளுடன் விளங்கும் நாராயணனுக்கு நமஸ்காரம் என்ற பொருள் கொண்ட ஸ்ரீமந்நாராயண சரணென சரணம் ப்ரபத்யே; ஸ்ரீமத நாராயணாய நம என்ற த்வயமந்திரத்தை ஓதினார். யதிராஜர் அந்தக் குழந்தைகளுக்கு பரமனின் பாஞ்சஜன்யம் சுதரிசனம் கவுமோதகி, நந்தகம், சார்ங்கம் என்ற பஞ்சாயுதம் கொண்ட, பொன்னாற் செய்த ஐம்படைத் தாலியை அவர்கள் கழுத்தில் அணிவித்தார். ஆறு மாதம் கழித்து யதிராஜர் மூத்த குழந்தைக்கு பராசர பட்டர் என்றும், இளைய குழந்தைக்கு வியாச பட்டர் என்றும் பெயர் வைத்தார். அப்பொழுது எம்பாரின் தம்பி சிறிய கோவிந்தப் பெருமாளின் மகனுக்கும் பெயர் வைக்க வேண்டியிருந்தது. ராமானுஜர் அந்தக் குழந்தைக்குப் பராங்குச நம்பி என்று பெயர் சூட்டினார். இப்படி ராமானுஜர் தமது மூன்றாவது உறுதிமொழியை நிறைவேற்றினார். சிறுவயதிலிருந்தே பராசர பட்டர் ஒப்பற்ற அறிவு வாய்த்திருந்தார். அவருக்கு ஐந்து வயதாக இருக்கையில் அனைவரையும் வெற்றி கொள்ளும் பெரும் புலவரான சர்வஜ்ஞ பட்டர் என்பவர் ஒரு நாள் தம் சீடர்கள் பலருடன், தம் விருதுகளைத் தம்பட்டமடித்துக் கொண்டு வீதிவழியே சென்றார். அப்பொழுது பராசர பட்டர் தம் தோழர்களுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். தம்பட்டமடிப்பவன் சொல்வது அவர் காதில் விழுந்தது; உலகம் புகழும் ஸர்வஜ்ஞ பட்டர் இதோ சீடர்களுடன் வருகிறார். அவரிடம் துணிந்து தர்க்கவாதம் செய்யவோ, சீடராகவோ விரும்புகிறவர்கள் அவர் திருவடிகளில் உடனே வந்து விழலாம். இதைக் கேட்ட பராசர பட்டர் சிரித்த முகத்துடன், கைநிறையப் புழுதியை எடுத்துக்கொண்டு, ஸர்வஜ்ஞ பட்டரின் முன்னால் சென்று பெரியவரே! என் கையிலுள்ள புழுதியில் எவ்வளவு மண் இருக்கிறது என்ற உம்மால் சொல்ல முடியுமா? நீர் ஸர்வஜ்ஞ ஆகையால் இது தெரிந்திருக்க வேண்டுமே என்றார். ஒரு சிறுவன் திடீரென்று வந்து இந்தக் கேள்வியைக் கேட்டதும் ஸர்வஜ்ஞ பட்டர் பிரமித்துப் போனார். எல்லாம் அறிந்தவன் என்ற தமது கர்வத்தை விடுத்து, அவர் அந்தக் குழந்தையை மடியில் வைத்து, முன்னுச்சியில் முத்தமிட்டு, குழந்தாய்! நீயே என் குரு. உன் வினாவினால் எனக்குப் புத்தி வந்திருக்கிறது என்றார். பரமனுடைய பிரசாதத்தை உட்கொண்ட பின்பு பிறந்ததனால், பராசர பட்டரும் வியாச பட்டரும் அரங்கனின் குழந்தைகள் என்றே அனைவரும் மதித்தார்கள். உபநயனம் ஆனபின்பு, எம்பார் அவர்களுக்கு உபநிடதங்களைப் போதித்தார். ஒரு நாள் அவர், அணுவினும் மிகச் சிறிய அணுவானவன் மிகப் பெரியதையும் விடப் பெரியவன். என்ற வாக்கியப்படி. பரமனின் பெருமையை விவரித்தபொழுது, சிறுபிள்ளையான பராசர பட்டர். இரண்டு மாறுபட்ட பண்புகள் ஒரே பரமனுக்கு எப்படி இருக்க முடியும்? என்று கேட்டார். எம்பார் வியந்தார். ஆனால் வினாவுக்கு விடைகூற முடியவில்லை. யதிராஜரின் விருப்பப் படியே, உபநயனம் நடந்த சில நாள் கழித்துப் பராசர பட்டர் பெரியநம்பியின் உறவில் இரண்டு மங்கையரை மணந்து கொண்டார்.

Advertisement
 
Advertisement