Advertisement

ரிஷ்ய சிருங்கர்

ஒரு காலத்தில் ரிஷ்யசிருங்கர் என்ற முனிவர் இருந்தார். இவரது காலடி எங்கு பட்டாலும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி விடும் என்கிறது புராணம். இவரது வரலாற்றை வால்மீகி முனிவர் சுவைபடச் சொல்லியிருக்கிறார். விபண்டகர் என்ற முனிவர் மகாகீர்த்திமான். யாக, ஹோம காரியங்களில் மிக மிக சிறந்தவர். அவரது புத்திரன் ரிஷ்யசிருங்கர். தாய் முகம் அறியாதவர். பிறந்தது முதல் தந்தையை மட்டுமே தெரியும். மழை இல்லாத இடத்தில் அவர் காலடி பட்டாலே போதும். வானம் பொத்துக் கொண்டு ஊற்றும். இவர் பிறந்தது முதல் காட்டிலுள்ள தங்கள் ஆசிரமத்திலேயே வசித்தார். தந்தையும், மகனும் மட்டுமே அங்கு வசித்தனர். அவரது நண்பர்களெல்லாம் காட்டில் வசிக்கும் சிங்கம், புலி, கரடி, மான்கள், மற்ற விலங்குகள் மட்டுமே. இதைத்தவிர வேறு எந்த உலகப் பொருளையும் அறியாதவர் அவர். தந்தையைத் தவிர பிற மனித முகங்களை அவர் பார்த்ததே இல்லை. தந்தைக்கு சேவை செய்வது மட்டுமே இவரது பணி. யாகம், ஹோம முறைகளை தந்தையார் மகனுக்கு கற்றுக் கொடுத்தார். தந்தையார் கொடுக்கும் கனிவகைகள், எப்போதாவது தயாரிக்கும் பட்சண வகைகளைத் தவிர வேறு எந்த உணவையும் பற்றி தெரியாதவர். ஆசை என்ற சொல்லையே அறியாதவர். எனவே, பாவங்கள் செய்ய வழியே இல்லாத <உத்தமராக இருந்தார். இப்படிப்பட்ட அப்பழுக்கற்றவரின் காலடிகள் பட்ட இடத்தில் மழை கொட்டுவதில் வியப்பென்ன! இந்நிலையில் தான் அங்கதேசத்து அரசன் ரோமபாதன் மழையின்றி நாட்டு மக்கள் வாடுவதைக் கண்டு தானும் வாட்ட முற்றான். என்னவெல்லாமோ யாகங்கள் நடத்திப் பார்த்தான். வருண பகவான் மசியவில்லை. ஒன்றல்ல, இரண்டல்ல, பத்தாண்டுகள் மழை தொடர்ந்து பொய்த்து விட்டது. குளங்களில் தேக்கி வைத்த தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தியும் வற்றி விட்டது. மக்கள் இடம் பெயர முடிவெடுத்தனர். அரசன் அவர்களைச் சமாதானம் செய்தான். சிறிதுகாலம் பொறுத்திருக்க வேண்டினான். எப்படியேனும் மழை பெய்ய வைக்க பூஜைகள் நடத்த உறுதியளித்தான். அமைச்சர்களையும், அவ்வூரில் மிகச்சிறந்த பிராமணர்களையும் அழைத்து ஆலோசித்தான். அவர்கள் ரிஷ்யசிருங்கர் பற்றி தாங்கள் கேள்விப்பட்டதைக் கூறினர். அந்த மகான் நம் ஊருக்குள் நுழைந்தாலே, மழை கொட்டிவிடும். ஆனால், அதற்காக ஒரு பிரதி உபகாரம் செய்ய வேண்டும், என்றனர். மழைக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதாக மன்னன் வாக்களித்தான். அரசே! ரிஷ்ய சிருங்கரை எவ்வகையிலாவது அழைத்து வருவது எங்கள் பொறுப்பு. ஆனால், அவருக்கு உங்கள் மகள் சாந்தையை கன்னிகாதானம் செய்து தர வேண்டும். சம்மதமா? என்றனர். காட்டுவாசியாக இதுவரை காலம் கழித்த முனிவருக்கு பெண் கொடுக்க எனக்கு எப்படி மனம் வரும்? அதிலும் நாட்டின் இளவரசியை மணம் செய்து கொடுப்பதென்றால்... என்றெல்லாம் அரசன் பேசவில்லை. முழு மனதுடன் சம்மதித்தான். எனக்கு நாட்டு மக்களின் சுகம் தான் முக்கியம். என் குடும்ப சுகம் அதற்கு பிறகு தான். சாந்தையை உறுதியாக முனிவருக்கு திருமணம் செய்து வைக்கிறேன், என சத்தியம் செய்தான். இதன்பிறகு முனிவரை அழைத்து வர யார் செல்வது என்ற சிக்கல் ஏற்பட்டது. பிற மனித முகங்களையே கண்டறியாத அந்த மகானை தாங்கள் போய் அழைத்தால் வரமாட்டார் என அமைச்சர்களுக்கு தோன்றியது. பிராமணர்களும் அவரை அழைத்து வரத் தயங்கினர். அவர்கள் ஒரு உபாயம் செய்தனர். இவ்வுலகில் பெண்ணால் ஆகாதது எதுவுமில்லை. எனவே தாசிகளை அனுப்பி அவரை மயக்கி அழைத்து வருவதென்று முடிவு செய்யப்பட்டது. தாசிகள் காட்டிற்கு அனுப்பப்பட்டனர். சந்தனம், அகில், வாசனைத் திரவியங்கள் பூசி, அலங்காரம் செய்து, மனதை மயக்கும் அழகுடன், அந்நாட்டிலேயே மிகச்சிறந்த தாசிப் பெண்கள் காட்டிற்கு சென்றனர். அவர்கள் விதவிதமான பட்சணங்களையும் தயாரித்திருந்தனர். காட்டிற்கு சென்ற தாசிகள் ரிஷ்யசிருங்கரின் தந்தை எங்காவது வெளியே போகட்டும் என ஒளிந்து காத்திருந்தனர். அவர்கள் நினைத்தது போலவே, விபண்டகர் வெளியே போய் விட்டார். அந்தப் பெண்கள் இதுதான் சமயமென்று ஆஸ்ரமத்திற்குள் சென்று, முனிவரைப் பணிவாக வணங்கினர். ரிஷ்யசிருங்கருக்கு ஆச்சரியம். உலகத்தில் இத்தனை அழகான ஜீவன்கள் இருக்கிறதா? இவையெல்லாம் நம்மைப் போல் இல்லையே. கண், காது, மூக்கு, கை, கால்கள் அப்படியே இருக்கிறது. ஆனால், உடை மாறியிருக்கிறது. இன்னும் சில வேற்றுமைகள் தென்படுகின்றன. இவர்கள் உடலில் நறுமணம் கமழ்கிறது, என ஆச்சரியப்பட்டார். அப்பெண்களை அவர் உபசரித்தார். ஆஸ்ரமத்திலுள்ள கனிகள், கிழங்குகளைக் கொடுத்தார். அவர்களுக்கு பூஜை செய்தார். அப்பெண்களும் பதிலுக்கு தாங்கள் கொண்டு வந்த பட்சணங்களைக் கொடுத்து சாப்பிடும்படி வேண்டினர். அவர் சாப்பிட்டுப் பார்த்தார். தினமும் ஒரே வகையான பழமும், கிழங்கும் தின்றவருக்கு இந்த பட்சணங்கள் தேனாய் சுவைத்தன. ருசியோ ருசி. தன்னை மறந்த நிலையில் இருந்த சிருங்கரிடம், மகாமுனிவரே! தாங்கள் எங்களுடன் எங்கள் ஆஸ்ரமத்திற்கு வாருங்கள். அங்கு வந்தால், வித விதமான பட்சணங்கள் கிடைக்கும், என்றனர். ரிஷ்யசிருங்கர் ஒரு வித்தியாசமான உலகம் எங்கோ இருப்பதைப் புரிந்து கொண்டார். தந்தை வரும் முன் கிளம்புவது உசிதமென அப்பெண்கள் தாபத்துடன் தூபம் போட, அவர் அங்கதேசத்துக்கு கிளம்பினார். அந்நாட்டு எல்லையில் நுழைந்தாரோ, இல்லையோ, மழை ஊற்றித் தள்ளியது. பத்து ஆண்டுகளாக தலைமறைவான மழை, ஒரே நாளில் கொட்டி தீர்த்து விட்டது. மக்கள், மன்னன் மகிழ்ந்தனர். கால்நடைகள் குதித்தாடின. சிறுவர்கள் மழையில் நனைந்து விளையாடினர். மன்னன் ரிஷ்யசிருங்கரை மகிழ்ச்சியுடன் வரவேற்றான். தங்கள் நிலையை எடுத்துச் சொன்னான். ஒரு நல்ல காரியத்திற்காக தாசிகளை அனுப்பி உங்களை வரவழைக்க வேண்டியதாயிற்று. இதற்காக எங்களை மன்னிக்க வேண்டும். தங்களைப் போன்ற தவசீலர்கள் அவர்களிடம் நட்பு கொள்ளாலாகாது. தாங்கள் என் மகள் சாந்தையை திருமணம் செய்து கொள்ள வேண்டும், என்றான். உலகம் என்றால் இன்னதென்று அறிந்து கொண்டு, நீண்ட நாட்களாக அங்கு தங்கியிருந்த முனிவர், சாந்தையை திருமணம் செய்து சுக வாழ்வு வாழ்ந்தார். அந்நாடு என்றும் செழித்திருந்தது. ரிஷ்ய சிருங்கரின் கதையைப் படித்த நாமும் நம் தமிழகத்தில் தேவையான மழை கொட்டுமென நம்புவோம்.

Advertisement
 
Advertisement