Advertisement

வென்றிமாலைக் கவிராயர்

சூரபத்மனின் ஆட்சி மிகவும் கொடுமையானதாக இருந்தது. எல்லா உயிர்களையும் துன்பத்துக்கு ஆளாக்கினான் அவன். அப்படிப்பட்டவனை குலம் முழுவதுமாக அழித்து வெற்றிகொண்டார் முருகப்பெருமான், அவர், சூரபத்மனை வெற்றிகொண்ட இடம் ஜயந்திபுரம் என்னும் இன்றைய திருச்செந்தூர். சிந்து என்றால் கடல். அதனால் சிந்துபுரம், சிந்துதேசம், செந்தில், செந்தூர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது இந்தத் திருத்தலம். சிறப்புமிக்க கடல் அலைகள் முருகப்பெருமானின் திருவடிகளில் வந்து வருடுவதால் திருச்சீரலைவாய் என்றும் பெயர் உண்டு. புறத்தே அலை ஓயும் இடத்தில் செந்தூர் முருகன் கோயில் கொண்டுள்ளதுபோல், அகத்தே எங்கு, எப்போது மனஅலை ஓய்கின்றதோ அங்கே, அப்போது ஜோதி முருகன் விளங்கிக் கோயில் கொள்வான் என்னும் தத்துவத்தை உணர்த்தும் திருத்தலம் இந்த திருச்செந்தூர். இங்கே கந்தபெருமானைப் பூஜித்துவரும் அர்ச்சகர்களை திரிசுதந்தரர் என்பார்கள். அக்காலத்தில் இவர்கள் இரண்டாயிரம் பேர் இருந்ததாக வரலாறு. இந்த அர்ச்சகர் மரபில் வந்தவர்களில் ஒருவர் வென்றிமாலை. இளம் வயதில் கல்வி கற்க பள்ளிக்கு அனுப்பப்பட்ட இவருக்குப் பள்ளிப்பாடம் மனத்தில் ஏறவில்லை. மாறாக செந்தூர் முருகன்மீது அளவற்ற பக்திகொண்டு கோயிலை வலம் வந்தார். எப்போதும் கந்தன் நினைவாகவே இருந்தார் இதனால், வேறு வழியில்லாமல் செந்தூர் கோயில் மடப்பள்ளியில், ஸ்வாமிக்கு நிவேதனம் தயார் செய்தளிக்கும் பணியில் அமர்த்தினர் அவரது பெற்றோர். ஒருநாள், நீண்டநேரம் தியானத்தில் இருந்தார் வென்றிமாலை. அந்தத் தியான இன்பத்தில், நிவேதனம் தயாரிக்கும் பணியைத் தொடங்கவே இல்லை என்பதை தாமதமாகத்தான் உணர்ந்தார். மனம் பதைபதைத்தது. மடைப்பள்ளிக்கு வேகமாகச் சென்றவர், நிவேதனம் தயார் செய்யும் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டார். அன்றைய தினம் முருகப்பெருமானுக்கு விசேஷமான அபிஷேகம் எல்லாம் செய்து முடிந்தாகிவிட்டது. நிவேதனம் தான் வந்து சேரவில்லை பரிசாரகர் எங்கே போனார்? நேரமாகிக் கொண்டிருக்கிறதே... என்று அதிகாரிகள் கேட்க, சிலர் மடப்பள்ளியை நோக்கி ஓடினர். அங்கே நிவேதனம் இன்னும் தயார் ஆகாமலேயே இருந்தது. கோபம் கொண்ட கோயில் அதிகாரிகள், வென்றிமாலையை இழுத்து வர ஆணையிட்டனர். பாவம், வென்றிமாலை! அவரை இழுத்து வந்ததோடு, ஒரு மரத்தில் அவரை கட்டி வைத்து நையப் புடைத்தனர். அதோடு, பரிசாரகர் வேலையில் இருந்தும் அவரை நீக்கினர். அன்று முழுவதும் உடல் வலியாலும், மனவலியாலும் மிகவும் அவதிப்பட்டார் வென்றிமாலை. இரவு வந்ததும் கடற்கரைக்குச் சென்றார். வெகுநேரம் கதறி அழுதார். உள்ளம் உருக செந்திலாண்டவனை வேண்டினார். வேலேந்திய வள்ளலே! மயிலேறும் மாமணியே! உணர்வால் உறவுண்டேன்; என்னைச் சிந்திக்க வைத்தது நீதானே? உன் திருவருள்தானே என்னை அப்படி மறக்கச் செய்தது? அதனால், நான் அடிபட்டதில் உனக்கும் பங்கு உண்டு... என்று உள்ளம் குமுறியவர். இனி இந்த உடல் இருந்து பயனில்லை என்று சொல்லியபடி, ஆக்ரோஷமாக கரையில் வந்து மோதிய கடல் அலையை நோக்கி ஓடத் தொடங்கினார். நில்.. நில்..! ஓடாதே..! என்று, யாரோ ஒருவரது குரல் கேட்டது, வாழ்வை முடித்துக்கொள்ளும் எண்ணத்துடன் ஓடியதால், வென்றிமாலை அந்தக் குரலைப் பொருட்படுத்தவில்லை. வேகமாக ஓடியவர், அதே வேகத்தில் கடலுக்குள் போய்விழுந்தார். வேகமாக வந்த அலை அவரை இழுத்துக்கொண்டு போனது. அதன்பிறகு அவரைப் பார்க்கமுடியவில்லை. சற்றுநேரத்தில் அங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்தது. உயிரை மாய்த்துக்கொள்ளக் குதித்த வென்றிமாலையை எந்தக் கடல் அலை இழுத்துக்கொண்டு போனதோ, அதே அலை மறுபடியும் வெளியே கொண்டுவந்து சேர்த்தது. உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைகூட எனக்கு இல்லையா? என்று குலுங்கக் குலுங்க அழுதவர், ஒருவழியாகச் சுதாரித்து எழுந்து நின்றபோது, அசரீரி ஒலித்தது. அன்பனே! உனக்காக ஒரு பெரிய பணி காத்திருக்கிறது. அதனால் நீ வாழ வேண்டும். திருச்செந்தூர் தல புராணத்தை அழகு தமிழில் பாடு. அதற்கு செவலூர் கிருஷ்ண சாஸ்திரியைப் உடனடியாகச் சென்று பார்! என்றது அசரீரி. அந்தக் குரல் ஒலித்து முடிக்கவும். அங்கே மறுபடியும் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. வென்றிமாலைக்கு எதிரே பன்னிரு கரங்களுடன் அழகுமிளிரக் காட்சி தந்தார் கந்தவேள். அவரின் தரிசனத்தைக் கண்டு மெய்சிலிர்த்தார் வென்றிமாலை. என் கருணைக் கடவுளே! நான் மடைத்தொழில் செய்தவன். கல்வியறிவு இல்லாத எனக்கு இக்கட்டளை சரியானதா? என்னையும் ஒரு பொருளாக்கி ஆட்கொண்டாயே! இப்பணியை எப்படி நிறைவேற்றுவேன்? என்று வீழ்ந்து பணிந்து எழுந்தார். அக்கணமே திருமுருகனின் திருவுருவம் மறைந்தது. பொழுது விடிவதற்காகக் காத்திருந்தார் வென்றிமாலை. விடிந்ததும், கடலில் புனித நீராடி அனுஷ்டானங்கள் முடித்து, கந்தன் கட்டளைப்படி செவலூர் சென்றார். ஸ்ரீகிருஷ்ண சாஸ்திரிகளை அவரது இல்லத்தில் சந்தித்தார். சுவாமி! அடியேன் வென்றிமாலை என்னும் பெயருடையவன். தாங்கள் திருச்செந்தூர் மகாத்மியத்தை அறிவீர்களா? என்று தழுதழுத்த குரலில் கேட்டார். ஓ... நீங்கள்தானா அவர்? காலையில் ஒரு பக்தன் திருச்செந்தூர் மகாத்மியத்தைப் பற்றி வந்து விசாரிப்பான். வடமொழியில் உள்ள அந்தப் புராணத்தை மொழிபெயர்த்து சொல்லுமாறு என் கனவில் கந்தவேள் கட்டளையிட்டார். தாங்களும் அதன்படியே வந்து கேட்கிறீர், மிகவும் சந்தோஷம்! என்றார் சாஸ்திரிகள். தொடர்ந்து, வென்றிமாலையை உபசரித்து மகிழ்ந்த சாஸ்திரிகள், வடமொழியில் உள்ள ஸ்லோகங்களை விளக்கிப் பொருள் கூறத் தொடங்கினார். கணபதியைக் கைதொழுது பாடல் புனையத் தொடங்கினார் வென்றிமாலை. முருகனின் திருவருளால், காட்டாற்று வெள்ளம்போல பாடல் பிரவாகம் அவருக்குள் எழுந்தது. சற்று நேரத்தில் 18 சருக்கங்களுடன் 900 பாடல்களைப் பாடி முடித்தார் வென்றமாலை. அன்பரே!. நீர் மிகப்பெரிய தவம் செய்தவர். யாருக்கும் கிடைக்காத செந்தில் ஆண்டவனின் பேரருள் உமக்கு கிடைத்துள்ளது. இன்று முதல் நீர் வென்றிமாலைக் கவிராயர் என்றே அழைக்கப்படுவீர் என்று வாழ்த்தி ஆசீர்வதித்தார் கிருஷ்ண சாஸ்திரிகள். திருச்செந்திலாண்டவன் சந்நிதானத்தில் ஸ்தலபுராணத்தை அரங்கேற்ற வேண்டும் என்ற ஆவலுடன் புறப்பட்டு வந்தார் வென்றிமாலைக் கவிராயர். கோயில் நிர்வாகிகளை அணுகினார். அவர்களோ அவரை எள்ளி நகையாடினர். நேற்றுவரை கோயில் பரிசாரகனாக இருந்தவன் நீ. இன்று அந்தத் தொழிலுக்கும் தகுதியில்லாத நீ, புராணம் பாடியிருக்கிறாயா? நீ என்ன கவிகாளமேகமா? இல்லை கம்பனா? என்று அவர்கள் கேலியாகச் சொன்னபோது, மனம் உடைந்துபோனார் வென்றிமாலைக் கவிராயர். இனி, எல்லாம் ஆண்டவன் திருவருள்படி நடக்கட்டும் என்று தீர்மானித்தவர், கடற்கரையை அடைந்தார். தாம் எழுதிய திருச்செந்தூர் ஸ்தலபுராண ஏடுகளைக் கடலில் வீசியெறிந்தார். பிறகு கடற்கரையோரமாக ஓரிடத்தில் அமர்ந்து தியானம் செய்யத் தொடங்கினார். அப்போது உன் முக்கியமான பணி நிறைவுபெற்றது. இனி நீ என்னிடம் வருக! என்று அவரது உள்ளத்தில் ஒரு குரல் ஒலிக்க.... அதிலேயே லயித்தார் வென்றிமாலைக் கவிராயர் அதேநேரம் கடலில் வீசியெறியப்பட்ட ஏட்டுச் சுவடிகள் இலங்கைக் கடற்கரையில் பனை முனை என்ற இடத்தில் ஒதுங்கின. அவை சிறந்த முருகனடியார் ஒருவர் கையில் கிடைத்தன. அவற்றை எடுத்து படிக்கத் தொடங்கிய அவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. திருச்செந்தூரின் சிறப்புக்களை உணர்ந்து உள்ளம் உருகியவர். தம் கையில் அந்த ஓலைச்சுவடிகளை கிடைக்குமாறு செய்த திருமுருகன் திருவருளை எண்ணிப் புளகாங்கிதம் அடைந்தார். அவற்றை மிகவும் பாதுகாப்புடன் தம் இல்லத்துக்கு எடுத்துச் சென்று நாள்தோறும் பாராயணம் செய்யத் தொடங்கினார். ஒருமுறை சக்கர சுவாசம் என்னும் விஷக்காற்று அப்பகுதி முழுவதும் பரவியது. பலரும் அதனால் துன்பப்பட்ட வேளையில், வென்றிமாலைக் கவிராயர் எழுதிய புராண ஏடு இருந்த தெருவில் மட்டும் ஒருவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அதேவேளையில், முருகப்பெருமான் அதன் அருமை பெருமையை பலரது கனவிலும் உணர்த்தினார். விவரம் அறிந்த பலரும் அந்தப் புராணத்தைப் பல பிரதிகள் செய்து, தங்கள் வீடுகளில் வைத்து ஓதத் தொடங்கினர். அதன் பயனாக விஷக்காற்று நீங்கி, மக்கள் எல்லோரும் மகிழ்ந்தனர். வென்றி மாலைக் கவிராயர் பாடிய திருச்செந்தூர் ஸ்தலபுராணம் அற்புதமான நூல். செந்தூர் முருகன் புகழ்பாடும் இந்த நூலை ஓதுபவர்கள் அனைவருக்கும் எல்லா நலன்களும் பெருகும்.

Advertisement
 
Advertisement