Advertisement

யாக்ஞவல்கியர்

ஒரு முக்கியமான முடிவை எடுக்கும் தருணத்தில், அனைத்து மகரிஷிகளையும் மந்திரிப் பிரதானிகளையும் அழைத்து, அவர்களின் கருத்துக்களைத் தெரிந்துகொள்வது அந்நாளைய வழக்கம் அப்படிக் கூடும் கூட்டத்துக்கு சதஸ் என்று பெயர். மாமன்னர் ஜனகரும் சதஸ் ஒன்றைக் கூட்டினார். அவர் ஏற்கெனவே வேதங்களை அறிந்த ஞானியாக இருந்தாலும், யாக்ஞ வல்கியரின் சீடராக இருந்து, வேதங்களின் நுண்பொருளை அறிய விருப்பம் கொண்டார். அதற்கு முன்னதாக, அவர் ஒரு மகத்தான பிரம்மஞானி என்று உலகத்தினர் அனைவரும் அறியும்படி செய்ய வேண்டும் என்பது ஜனகரின் எண்ணம். அவரது உத்தரவின்படி, ஆயிரம் பசுக்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றின் கொம்புகளில் இருபது தங்கக் காசுகள் கட்டப்பட்ட முடிச்சுகள் இருந்தன. யார் பிரம்மஞானியோ, அவருக்கே இந்தப் பசுக்கள் தானமாக வழங்கப்படும் என்று அறிவித்தார் மன்னர். எவரும் வாய் திறக்கத் துணியவில்லை. காரணம், பிரம்மஞானியாக்கப்பட்டவர் தம்மை அப்படிக் காட்டிக் கொள்ள முயன்றால், அந்தக் கணமே அவருக்கு அந்தத் தகுதி இல்லாமல் போய்விடும் என்பது விதி. இந்நிலையில், யாக்ஞவல்கியர் முன்வந்து, தனது சீடர்களை அழைத்து, ஆயிரம் பசுக்களையும் ஓட்டிச் செல்லும்படி சைகையில் கட்டளையிட்டார். இவரது மனத்தின் உறுதியை அறிந்த ஜனகர் மனத்துக்குள் மகிழ்ச்சி கொண்டார். அவரது விருப்பமும் பூர்த்தியாயிற்று. ஆனால் மற்ற முனிவர்களுக்குப் பொறாதம எழுந்தது. நர் பிரும்மஞானி என்பதால்தான் பசுக்களை ஓட்டிச் செல்லும்படி உமது சீடர்களுக்குப் பணித்தீரோ? என்று வினவ, யாக்ஞவல்கியர் நான் அப்படிச் சொல்லவில்லையே! நீங்கள் அனைவரும் சேர்ந்துதான் இப்போது என்னை பிரம்மஞானியாக ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று பதிலளித்தார். யாக்ஞவல்கியரது இந்தச் சாதுர்யமான பதில் ஜனகருக்கு மகிழ்ச்சியை அளித்ததோடு அவரது புத்திகூர்மையும் சமயோசித உணர்வும் மற்ற முனிவர்களுக்கும் புலனாயிற்று. யாக்ஞவல்கியர் தமது வாழ்க்கையின் நிறைவுக் காலத்தில் துறவறம் பூண்டு, வனத்தில் வாழ்க்கை நடத்தினார். இவருக்கு முன்னர் எந்த முனிவரும் சந்நியாச வாழ்க்கை மேற்கொண்டதில்லை. அந்த வகையில் இவர் பிரும்மஞானியாகவும், முதல் சந்நியாசியாகவும் திகழ்ந்தார். யாக்ஞவல்கியரது சிறப்பு, அவர் வாழ்ந்த தவ வாழ்க்கையில் மட்டுமல்லாமல், அவர் உபதேசித்த தத்துவங்களை அறியும்போது பன்மடங்காக அதிகரிக்கிறது. இந்து தர்மசாஸ்திரத்தை விளக்கும் மூன்று முக்கிய ஆதாரங்களாக மனுஸ்ம்ருதி, யாக்ஞவல்கிய ஸ்ம்ருதி, கவுடில்யரின் அர்த்த சாஸ்திரம் ஆகியவை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இவற்றையே இந்து மதச் சட்டங்களின் ஆணி வேராக, அடிப்படையாக, இங்கிலாந்து உச்சநீதிமன்றத்தின் ப்ரிவி கவுன்சில் ஏற்றுக் கொண்டிருக்கிறது. யாக்ஞவல்கியரது ஸ்ம்ருதி பிரம்மம், பரப்பிரம்மம், பரமாத்மா, பஞ்சபூதங்கள் போன்ற உயர்ந்த விஷயங்கள் மட்டுமல்லாமல், கருவின் பரிணாம வளர்ச்சி, உடல்ரீதியான அறிவியல் போன்றவற்றையும் விளக்குகிறது. ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன், எந்தவிதமான நவீன கருவிகளும் இல்லாத நிலையில், தனது ஞானத்தால் மட்டுமே யாக்ஞவல்கியர் கண்டுணர்ந்து சொன்ன உண்மைகள் இன்றைய அறிவியலுக்கும் பொருத்தமானதாக இருக்கின்றன. இவை தவிர, ராஜ்யம் சார்ந்த நிர்வாகம், மன்னர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள், வருமானம், சேமிப்பு, மக்களின் மனோபாவ மாற்றங்கள், பிரம்மசரியம், சந்நியாசம், மக்கள் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கங்கள், திருமணப் பொருத்தங்கள், திருமண வகைகள், யாகங்கள், நில ஒப்பந்தங்கள், வட்டி விகிதங்கள், வெளிநாட்டு ஒப்பந்தங்கள்.... ஆகிய அனைத்தும் தெளிவாக விளக்கப்படுகிறது. யாக்ஞவல்கியரின் காலம் 6,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
வேதங்களின் உட்பொருள்களையெல்லாம் அலசி ஆராய்ந்து, சுக்ல, யஜுர் வேதத்தை மஹா சக்தி வாய்ந்த சூரிய பகவானிடமிருந்து விடா முயற்சியுடன் நேரிலேயே கற்றறிந்த பெரும் ஞானியாவார் யாக்ஞவல்க்ய மஹரிஷி. மஹா விஷ்ணுவின் அம்சமாகப் பிறந்த அவர் இளம் பிராயத்திலிருந்தே சகல கலைகளையும் காலாகாலத்தில் கசடறக் கற்று, தெய்வத் தம்பதிகளான பிரம்மரதர், சுநந்தா என்ற தன் பெற்றோர்களை மகிழ்வித்தார்! அந்த தெய்வக் குழந்தை வேதங்களைப் பற்றின சகல நுட்பமான கருத்துக்களிலும் அறிவு பெறுவதற்காகத் தகுந்த ஒரு குருவிடம் அனுப்ப விழைந்தார் பிரம்மரதர். வர்த்தமானபுரி என்ற இடத்தில் ஆஸ்ரமம் வைத்துக்கொண்டு, வேத விற்பன்னரும், தன் மைத்துனருமான வைசம்பாயனர் என்பவரிடம் குருகுலவாசம் செய்ய அனுப்பினார் யாக்ஞ்யரை. வெகு சிறிது காலத்திலேயே நான்கு வேதங்களையும் ஐயம் திரிபறக்கற்று மற்றெல்லா மாணவரைக் காட்டிலும் உயர்ந்தவராக விளங்கினார் யாக்ஞவல்க்யர்! ஆனால், குருவுக்கு மிஞ்சின சீடனாக விளங்கிய அவரிடம், குரு வைசம்பாயனருக்கே பொறாமை துளிர்விட ஆரம்பித்தது!

அக்காலத்தில் வைசம்பாயனரை சமஸ்தான குருவாகக் கொண்டு அவருக்கு மிகுந்த ஆதரவளித்து வந்தான் சுப்ரியா என்ற அரசன். கெட்டகாலம், துஷ்டகிரஹங்கள் அவனை ஆட்டிப் படைக்க ஆரம்பித்தன. நாளா வட்டத்தில் அந்த அரசன் தீய வழிகளில் சென்று தீராத நோய் வாய்ப்பட்டான்! தன் குருவான வைசம்பாயனரின் உதவியை நாடினான். தான் குணமடைவதற்காக சகலவிதமான ஹோமங்களையும் செய்யுமாறு கட்டளையிட்டான். வைசம்பாயனர் சாந்தி ஹோமம் என்ற கடுமையான ஹோமத்தை தானே செய்ததோடல்லாமல் தன் சீடர்களையெல்லாம் விளித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக அரசன் முன்னிலையிலே சாந்தி ஹோமம் செய்யும்படி ஏற்பாடு செய்தார். குரு வைசம்பாயனர், அன்றாடம் ஹோமம் செய்த புனித தீர்த்தத்தையும் பிரசாதத்தையும் அரசனுக்குக் கொடுத்து வந்தனர். அந்தோ அரசனுடைய நோய் குறையவில்லை.

உள்ளத்தில் கெட்ட எண்ணத்தையும் பொறாமையும் கொண்டிருந்த வைசம்பாயனர் எல்லோருக்கும் கடைசியாக, யாக்ஞவல்க்யரை அரசனிடம் அனுப்பினார். தன் உடல்நிலை சிறிதும் குணமாகாததைக் கண்ட அரசன் சுப்ரியா - மனம் தளர்ந்தான்! இப்பொழுது யாக்ஞவல்க்யரின் முறை வந்தது. எப்பொழுதும் தன் அழகிய தோற்றத்துக்கு ஏற்றவாறு உத்தமமான, உயர்ந்த கம்பீரமான உடையணிந்து வந்த யாக்ஞவல்க்யரை நோக்கினான் அரசன். அவன் உள்ளத்தில் வளர்ந்த கோபமும் வருத்தமும் தீரவில்லை. யாக்ஞவல்க்யரை எள்ளி வெகுண்டான், எல்லோரும் எவ்வளவு மன்றாடியும் அவன் மனம் மாறவில்லை! அந்தோ! அந்த உன்னுடைய புனித நீரையும் பிரசாதத்தையும் அதோ தெரிகிறது மரக்கட்டைகளின் மீது எறிந்து விட்டுப் போ, என்று ஏசினான். இதுதான் தெய்வத்தின் சித்தமோ? என்று யாக்ஞவல்க்கயர் புனிதநீரையும் பிரசாதத்தையும் கட்டைகளின் மேல் எறிந்தார். அப்பொழுது ஒரு பேராச்சர்யம் நிகழ்ந்தது. யாக்ஞவல்க்யரின் ஹோம தீர்த்தமும் பிரசாதமும் பட்ட மாத்திரத்தில் பட்டுப்போன காய்ந்த மரக்கட்டைகள் வெகு விரைவில் தழைத்த பச்சிலைகளால் நிறைந்து ஓங்கி வளர்ந்த மரங்களாயின! அதிசயத்திலும் அதிசயம்! கண்டோர் அனைவரும் தம்பித்து நின்றனர்.

மன்னன் சுப்ரியாவின் வியாதி அதிசயத்தக்க முறையில் குணமாகியது. யாக்யவல்க்யரின் தெய்வச்சக்தியை எண்ணி எண்ணி அனைவரும் வியந்தனர். சாட்சாத் மஹா விஷ்ணுவின் அவதாரமாகப் பிறந்தவரல்லவா அவர்? சிறந்த அறவாழ்க்கை நடந்தி வந்த பிரம்மரதர் தம்பதிகளுக்குப் பலநாள்வரை மழலைச் செல்வம் இல்லாம லிருந்து பிரம்மரதர், கேதார ÷க்ஷத்திரம் சென்று ஸ்ரீமந் நாராயணனைக் குறித்து கடுந்தவம் இயற்றிய பொழுது ஸ்ரீமந் நாராயணன் பிரத்யக்ஷமாகி என்ன வரம் வேண்டும்? என்று கேட்க, பிரம்மரதர். சர்வ வேதாந்த சாஸ்திரங்களையும் உணர்ந்து, ஒப்பற்ற அழகும் அதி மேதாவியாகவும் சிறந்த பண்புகளையும் உடைய ஒரு ஆண் மகவு வேண்டும் என்று கேட்டார். அப்படியானால் நானேதான் உன் புத்திரனாகப் பிறக்க வேண்டும். தந்தேன் வரம், என்றார் மகாவிஷ்ணு. சுனந்தா தெய்வக் குழந்தையை வயிற்றில் சுமந்து அதிசுந்தரவதியாய் விளங்கினாள்! ஐந்து வருடங்கள் கர்ப்பத்திலேயே இருந்து சிசு பேசலுற்றது. அந்த ஆண்டவனது அவதாரமே ஆனாலும் அவனுடைய மாயா, லீலா விநோதங்கள் இல்லாமலிருக்க வேண்டும் என்று மஹா விஷ்ணுவிடம் வாக்குறுதி வாங்கிக் கொண்டு ஒரு சிறந்த நன்னாளில் குழந்தை பிறந்தது. இவ்வாறாக மஹாவிஷ்ணுவின் அம்சமாகப் பிறந்தார் யாக்ஞவல்கிய மஹரிஷி.

Advertisement
 
Advertisement