Advertisement

மண்டைக் காட்டில் சக்கர தீவெட்டி பவனி

நாகர்கோவில்: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், மாசி திருவிழாவில், பக்தி பரவசமூட்டும் சக்கர தீவெட்டி பவனி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேவி வழிபாட்டுக்கு பெயர் பெற்ற திருத்தலங்களில் ஒன்று, மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில். கேரள பெண்கள், இங்கு, இருமுடி கட்டுடன் வந்து வழிபடுவதால், இக்கோயில், பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு மாசி பெருந்திருவிழா, 4ம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் விழாவில், அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பல ஊர்களில் இருந்து, அம்மனுக்கு, யானை மீது சந்தனம் எடுத்து வரப்பட்டது. ஒன்பதாம் நாள் விழாவில், இரவு அத்தாழ பூஜைக்கு பின், அம்மன், வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளினார். அப்போது, 41 தீபங்கள் இரண்டு வளையங்களில் ஏற்றப்பட்டு,தேர் போன்ற வாகனத்தில் இழுத்து வரப்பட்டது. அந்த தீ வளையத்துக்குள், முதியவர் ஒருவர் நின்றது, பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்தது. கோயிலைச் சுற்றி, நான்கு தெருக்களில் வலம் வந்த பின், இந்த பவனி நிறைவு பெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement
 
Advertisement