Advertisement

பழநி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

பழநி: பழநியில் பங்குனி உத்திர திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவை முன்னிட்டு, நேற்றுமுன்தினம் மாலை பெரியநாயகியம்மன் கோயிலிலிருந்து, திருஆவினன்குடி கோயிலுக்கு முத்துக் குமார சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். வேல், மயில், சேவல் வரையப்பட்ட கொடிப்படம், திருஆவினன்குடி கோயில் வெளிப் பிரகாரம் சுற்றி வந்து, பாத விநாயகர் கோயில் வரை சென்று வந்தது. 6 கலசங்கள் வைத்து, கொடிமர பூஜையுடன், காலை 11.40 மணிக்கு கொடியேற்றப்பட்டது. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என பக்தர்கள் சரண கோஷம் எழுப்பினர். பெரியநாயகியம்மன் கோயிலிலும், மலை கோயிலிலும் காப்புக்கட்டுதல் நடந்தது. பழநி கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன், துணை கமிஷனர் ராஜமாணிக்கம் உட்பட பலர் பங்கேற்றனர். முக்கிய நிகழ்ச்சிகளான மார்ச் 25 இரவு 7.30 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், 8 மணிக்கு மேல் வெள்ளித் தேரோட்டமும், மார்ச் 26 மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது.

Advertisement
 
Advertisement