Advertisement

குறுந்தொகை (பகுதி-7)

குறுந்தொகை - 301. குறிஞ்சி - தலைவி கூற்று முழவுமுத லரைய தடவுநிலைப் பெண்ணைக்
கொழுமட லிழைத்த சிறுகோற் குடம்பைக்
கருங்கா லன்றிற் காமர் கடுஞ்சூல்
வயவுப்பெடை யகவும் பானாட் கங்குல்
மன்றம் போழும் இனமணி நெடுந்தேர் 5
வாரா தாயினும் வருவது போலச்
செவிமுத லிசைக்கு மரவமொடு
துயில்துறந் தனவால் தோழியென் கண்ணே.
- குன்றியனார். குறுந்தொகை - 302. குறிஞ்சி - தலைவி கூற்று உரைத்திசின் தோழியது புரைத்தோ அன்றே
அருந்துயர் உழத்தலும் ஆற்றாம் இதன்றலைப்
பெரும்பிறி தாகல் அதனினும் அஞ்சுதும்
அன்னோ இன்னும் நன்மலை நாடன்
பிரியா நண்பினர் இருவரும் என்னும் 5
அலரதற் கஞ்சினன் கொல்லோ பலருடன்
துஞ்சூர் யாமத் தானுமென்
நெஞ்சத் தல்லது வரவறி யானே.
- மாங்குடிகிழார். குறுந்தொகை - 303. நெய்தல் - தோழி கூற்று கழிதேர்ந் தசைஇய கருங்கால் வெண்குரு
கடைகரைத் தாழைக் குழீஇப் பெருங்கடல்
உடைதிரை ஒலியில் துஞ்சுந் துறைவ
தொன்னிலை நெகிழ்ந்த வளைய ளீங்குப்
பசந்தனள் மன்னென் தோழி யென்னொடும் 5
இன்னிணர்ப் புன்னையம் புகர்நிழற்
பொன்வரி அலவன் ஆட்டிய ஞான்றே.
- அம்மூவனார். குறுந்தொகை - 304. நெய்தல் - தலைவி கூற்று கொல்வினைப் பொலிந்த கூர்வா யெறியுளி
முகம்பட மடுத்த முளிவெதிர் நோன்காழ்
தாங்கரு நீர்ச்சுரத் தெறிந்து வாங்குவிசைக்
கொடுந்திமிற் பரதவர் கோட்டுமீ னெறிய
நெடுங்கரை யிருந்த குறுங்கா லன்னத்து 5
வெண்டோ டிரியும் வீததை கானற்
கைதையந் தண்புனற் சேர்ப்பனொடு
செய்தனெ மன்றவோர் பகைதரு நட்பே.
- கணக்காயர் தத்தனார்.

குறுந்தொகை - 305. மருதம் - தலைவி கூற்று கண்தர வந்த காம ஒள்ளெரி
என்புற நலியினும் அவரொடு பேணிச்
சென்றுநாம் முயங்கற் கருங்காட் சியமே
வந்தஞர் களைதலை அவராற் றலரே
உய்த்தனர் விடாஅர் பிரித்திடை களையார் 5
குப்பைக் கோழித் தனிப்போர் போல
விளிவாங்கு விளியி னல்லது
களைவோர் இலையா முற்ற நோயே.
- குப்பைக்கோழியார். குறுந்தொகை - 306. நெய்தல் - தலைவி கூற்று மெல்லிய இனிய மேவரு தகுந
இவைமொழி யாமெனச் சொல்லினு மவைநீ
மறத்தியோ வாழியென் னெஞ்சே பலவுடன்
காமர் மாஅத்துத் தாதமர் பூவின்
வண்டுவீழ் பயருங் கானல் 5
தண்கடற் சேர்ப்பனைக் கண்ட பின்னே.
- அம்மூவனார். குறுந்தொகை - 307. பாலை - தலைவி கூற்று வளையுடைத் தனைய தாகிப் பலர்தொழச்
செவ்வாய் வானத் தையெனத் தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே அன்னோ
மறந்தனர் கொல்லோ தாமே களிறுதன்
உயங்குநடை மடப்பிடி வருத்த நோனாது 5
நிலையுயர் யாஅந் தொலையக் குத்தி
வெண்ணார் கொண்டு கைசுவைத் தண்ணாந்
தழுங்க னெஞ்சமொடு முழங்கும்
அத்த நீளிடை அழப்பிரிந் தோரே.
- கடம்பனூர்ச் சாண்டிலியனார். குறுந்தொகை - 308. குறிஞ்சி - தோழி கூற்று சோலை வாழைச் சுரிநுகும் பினைய
அணங்குடை அருந்தலை நீவலின் மதனழிந்து
மயங்குதுயர் உற்ற மையல் வேழம்
உயங்குயிர் மடப்பிடி யுலைபுறந் தைவர
ஆமிழி சிலம்பின் அரிதுகண் படுக்கும் 5
மாமலை நாடன் கேண்மை
காமந் தருவதோர் கைதாழ்ந் தன்றே.
- பெருந்தோட் குறுஞ்சாத்தனார். குறுந்தொகை - 309. மருதம் - தோழி கூற்று கைவினை மாக்கடம் செய்வினை முடிமார்
சுரும்புண மலர்ந்த வாசங் கீழ்ப்பட
நீடின வரம்பின் வாடிய விடினும்
கொடியரோ நிலம்பெயர்ந் துறைவே மென்னாது
பெயர்த்துங் கடிந்த செறுவிற் பூக்கும் 5
நின்னூர் நெய்த லனையேம் பெரும
நீயெமக், கின்னா தனபல செய்யினும்
நின்னின் றமைதல் வல்லா மாறே.
- உறையூர்ச் சல்லியன் குமாரனார். குறுந்தொகை - 310. நெய்தல் - தலைவி கூற்று புள்ளும் புலம்பின பூவிங் கூம்பின
கானலும் புலம்புநனி யுடைத்தே வானமும்
நம்மே போலும் மம்மர்த் தாகி
எல்லைகழியப் புல்லென் றன்றே
இன்னும் உளெனே தோழி இந்நிலை 5
தண்ணிய கமழுஞாழல்
தண்ணந் துறைவர்க் குரைக்குநர்ப் பெறினே.
- பெருங்கண்ணனார். குறுந்தொகை - 311. நெய்தல் - தலைவி கூற்று அலர்யாங் கொழிவ தோழி பெருங்கடற்
புலவுநா றகன்றுறை வலவன் தாங்கவும்
நில்லாது கழிந்த கல்லென் கடுந்தேர்
யான்கண் டனனோ இலனோ பானாள்
ஓங்கல் வெண்மணல் தாழ்ந்த புன்னைத் 5
தாதுசேர் நிகர்மலர் கொய்யும்
ஆயம் எல்லாம் உடன்கண் டன்றே.
- சேந்தன் கீரனார். குறுந்தொகை - 312. குறிஞ்சி - தலைவன் கூற்று இரண்டறி கள்விநங் காத லோளே
முரண்கொள் துப்பிற் செவ்வேன் மலையன்
முள்ளூர்க் கான நாற வந்து
நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள்
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச் 5
சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி
அமரா முகத்த ளாகித்
தமரோ ரன்னள் வைகறை யானே.
- கபிலர்.

குறுந்தொகை - 313. நெய்தல் - தலைவி கூற்று பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
நீத்துநீர் இருங்கழி இரைதேர்ந் துண்டு
பூக்கமழ் பொதும்பிற் சேக்குந் துறைவனொடு
யாத்தேம் யாத்தன்று நட்பே
அவிழ்த்தற் கரிதது முடிந்தமைந் தன்றே. 5
- ...... குறுந்தொகை - 314. முல்லை - தலைவி கூற்று சேயுயர் விசும்பி னீருறு கமஞ்சூல்
தண்குரல் எழிலி ஒண்சுடர் இமைப்பப்
பெயர்தாழ் பிருளிய புலம்புகொள் மாலையும்
வாரார் வாழி தோழி வரூஉம்
இன்னுறழ் இளமுலை ஞெமுங்க 5
இன்னா வைப்பின் சுரனிறந் தோரே.
- பேரிசாத்தனார். குறுந்தொகை - 315. குறிஞ்சி - தலைவி கூற்று எழுதரு மதியங் கடற்கண் டாஅங்
கொழுகுவெள் ளருவி யோங்குமலை நாடன்
ஞாயி றனையன் தோழி
நெருஞ்சி யனையவென் பெரும்பணைத் தோளே.
- மதுரை வேள்ஆதத்தனார்.

குறுந்தொகை - 316. நெய்தல் - தலைவி கூற்று ஆய்வளை ஞெகிழவு மயர்வுமெய் நிறுப்பவும்
நோய்மலி வருத்தம் அன்னை யறியின்
உளெனோ வாழி தோழி விளியா
துரவுக்கடல் பொருத விரவுமண லடைகரை
ஓரை மகளி ரோராங் காட்ட 5
வாய்ந்த லவன் துன்புறு துனைபரி
ஓங்குவரல் விரிதிரை களையும்
துறைவன் கொல்லோ பிறவா யினவே.
- தும்பிசேர் கீரனார். குறுந்தொகை - 317. குறிஞ்சி - தோழி கூற்று புரிமட மரையான் கருநரை நல்லேறு
தீம்புளி நெல்லி மாந்தி யயலது
தேம்பாய் மாமலர் நடுங்க வெய்துயிர்த்
தோங்குமலைப் பைஞ்சுனை பருகு நாடன்
நம்மைவிட் டமையுமோ மற்றே கைம்மிக 5
வடபுல வாடைக் கழிமழை
தென்புலம் படருந் தண்பனி நாளே.
- மதுரைக் கண்டரதத்தனார். குறுந்தொகை - 318. நெய்தல் - தலைவி கூற்று எறிசுறாக் கலித்த இலங்குநீர்ப் பரப்பின்
நறுவீ ஞாழலொடு புன்னை தாஅய்
வெறியயர் களத்தினில் தோன்றுந் துறைவன்
குறியா னாயினும் குறிப்பினும் பிறிதொன்
றறியாற் குரைப்பலோ யானே யெய்த்தவிப் 5
பணையெழின் மென்றோ ளணைஇய வந்நாட்
பிழையா வஞ்சினஞ் செய்த
கள்வனும் கடவனும் புனைவனுந் தானே.
- அம்மூவனார். குறுந்தொகை - 319. முல்லை - தலைவி கூற்று மானேறு மடப்பிணை தழீஇ மருள்கூர்ந்து
கான நண்ணிய புதன்மறைந் தொடுங்கவும்
கையுடை நன்மாப் பிடியொடு பொருந்தி
மையணி மருங்கின் மலையகஞ் சேரவும்
மாலைவந் தன்று மாரி மாமழை 5
பொன்னேர் மேனி நன்னலஞ் சிதைத்தோர்
இன்னும் வாரார் ஆயின்
என்னாந் தோழிநம் இன்னுயிர் நிலையே.
- தாயங் கண்ணனார். குறுந்தொகை - 320. நெய்தல் - தலைவி கூற்று பெருங்கடற் பரதவர் கொண்மீன் உணங்கல்
அருங்கழிக் கொண்ட இறவின் வாடலொடு
நிலவுநிற வெண்மணல் புலவப் பலவுடன்
எக்கர்தொறும் பரக்குந் துறைவனொ டொருநாள்
நக்கதோர் பழியு மிலமே போதவிழ் 5
பொன்னிணர் மரீஇய புள்ளிமிழ் பொங்கர்ப்
புன்னையஞ் சேரி யிவ்வூர்
கொன்னலர் தூற்றந்தன் கொடுமை யானே.
- தும்பிசேர் கீரனார். குறுந்தொகை - 321. குறிஞ்சி - தோழி கூற்று மலைச்செஞ் சாந்தின் ஆர மார்பினன்
சுனைப்பூங் குவளைச் சுரும்பார் கண்ணியன்
நடுநாள் வந்து நம்மனைப் பெயரும்
மடவர லரிவைநின் மார்பமர் இன்றுணை
மன்ற மரையா இரிய ஏறட்டுச் 5
செங்கண் இரும்புலி குழுமும் அதனால்
மறைத்தற் காலையோ அன்றே
திறப்பல் வாழிவேண் டன்னைநம் கதவே.
- ...... குறுந்தொகை - 322. குறிஞ்சி - தலைவி கூற்று அமர்க்க ணாமான் அஞ்செவிக் குழவி
கானவ ரெடுப்ப வெரீஇ யினந்தீர்ந்து
கான நண்ணிய சிறுகுடிப் பட்டென
இளைய ரோம்ப மரீஇயவ ணயந்து
மனையுறை வாழ்க்கை வல்லி யாங்கு 5
மருவின் இனியவு முளவோ
செல்வாந் தோழி யொல்வாங்கு நடந்தே.
- ஐயூர் முடவனார். குறுந்தொகை - 323. முல்லை - தலைவன் கூற்று எல்லாம் எவனோ பதடி வைகல்
பாணர் படுமலை பண்ணிய எழாலின்
வானத் தெழுஞ்சுவர் நல்லிசை வீழப்
பெய்த புலத்துப் பூத்த முல்லைப்
பசுமுகைத் தாது நாறும் நறுநுதல் 5
அரிவை தோளிணைத் துஞ்சிக்
கழிந்த நாளிவண் வாழு நாளே.
- பதடி வைகலார். குறுந்தொகை - 324. நெய்தல் - தோழி கூற்று கொடுங்கால் முதலைக் கோள்வ லேற்றை
வழிவழக் கறுக்குங் கானலம் பெருந்துறை
இனமீன் இருங்கழி நீந்தி நீநின்
நயனுடை மையின் வருதி யிவடன்
மடனுடை மையின் உயங்கும் யானது 5
கவைமக நஞ்சுண் டாஅங்
கஞ்சுவல் பெருமவென் னெஞ்சத் தானே.
- கவை மகனார் குறுந்தொகை - 325. நெய்தல் - தலைவி கூற்று சேறுஞ் சேறு மென்றலின் பண்டைத்தன்
மாயச் செலவாச் செத்து மருங்கற்று
மன்னிக் கழிகென் றேனே அன்னோ
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
கருங்கால் வெண்குருகு மேயும் 5
பெருங்குளம் ஆயிற்றென் இடைமுலை நிறைந்தே.
- நன்னாகையார். குறுந்தொகை - 326. நெய்தல் - தலைவி கூற்று துணைத்த கோதைப் பணைப்பெருந் தோளினர்
கடலாடு மகளிர் கான லிழைத்த
சிறுமனைப் புணர்ந்த நட்பே தோழி
ஒருநாள் துறைவன் துறப்பின்
பன்னாள் வரூஉம் இன்னா மைத்தே. 5
- ......

குறுந்தொகை - 327. குறிஞ்சி - தலைவி கூற்று நல்கின் வாழும் நல்கூர்ந் தோர்வயின்
நயனில ராகுதல் நன்றென உணர்ந்த
குன்ற நாடன் தன்னினும் நன்றும்
நின்னிலை கொடிதால் தீய கலுழி
நம்மனை மடமகள் இன்ன மென்மைச் 5
சாயலள் அளியள் என்னாய்
வாழைதந் தனையாற் சிலம்புபுல் லெனவே.
- அம்மூவனார். குறுந்தொகை - 328. நெய்தல் - தோழி கூற்று சிறுவீ ஞாழல் வேரளைப் பள்ளி
அலவன் சிறுமனை சிதையப் புணரி
குணில்வாய் முரசின் இயங்குந் துறைவன்
நல்கிய நாள்தவச் சிலவே அலரே
வில்கெழு தானை விச்சியர் பெருமகன் 5
வேந்தரொடு பொருத ஞான்றைப் பாணர்
புலிநோக் குறழ்நிலை கண்ட
கலிகெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே.
- பரணர். குறுந்தொகை - 329. பாலை - தலைவி கூற்று கான விருப்பை வேனல் வெண்பூ
வளிபொரு நெடுஞ்சினை உகுத்தலி னார்கழல்பு
களிறுவழங்கு சிறுநெறி புதையத் தாஅம்
பிறங்குமலை அருஞ்சுரம் இறந்தவர்ப் படர்ந்து
பயிலிருள் நடுநாள் துயிலரி தாகித் 5
தெண்ணீர் நிகர்மலர் புரையும்
நன்மலர் மழைக்கணிற் கெளியவாற் பனியே.
- ஓதலாந்தையார். குறுந்தொகை - 330. மருதம் - தலைவி கூற்று நலத்தகைப் புலைத்தி பசைதோய்த் தெடுத்துத்
தலைப்புடைப் போக்கித் தண்கயத் திட்ட
நீரிற் பிரியாப் பரூஉத்திரி கடுக்கும்
பேரிலைப் பகன்றைப் பொதியவிழ் வான்பூ
இன்கடுங் கள்ளின் மணமில கமழும் 5
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே.
- கழார்க் கீரனெயிற்றியனார். குறுந்தொகை - 331. பாலை - தோழி கூற்று நெடுங்கழை திரங்கிய நீரி லாரிடை
ஆறுசெல் வம்பலர் தொலைய மாறுநின்று
கொடுஞ்சிலை மறவர் கடறுகூட் டுண்ணும்
கடுங்கண் யானைக் கான நீந்தி
இரப்பர்கொல் வாழி தோழி நறுவடிப் 5
பைங்கால் மாஅத் தந்தளி ரன்ன
நன்மா மேனி பசப்ப
நம்மினுஞ் சிறந்த அரும்பொருள் தரற்கே.
- வாடாப் பிரபந்தனார். குறுந்தொகை - 332. பாலை - தோழி கூற்று வந்த வாடைச் சில்பெயற் கடைநாள்
நோய்நீந் தரும்படர் தீரநீ நயந்து
கூறின் எவனோ தோழி நாறுயிர்
மடப்பிடி தழீஇத் தடக்கை யானை
குன்றச் சிறுகுடி யிழிதரு 5
மன்ற நண்ணிய மலைகிழ வோற்கே.
- மதுரை மருதங்கிழார் மகனார் இளம்போத்தனார். குறுந்தொகை - 333. குறிஞ்சி - தோழி கூற்று குறும்படைப் பகழிக் கொடுவிற் கானவன்
புனமுண்டு கடிந்த பைங்கண் யானை
நறுந்தழை மகளிர் ஓப்புங் கிள்ளையொடு
குறும்பொறைக் கணவுங் குன்ற நாடன்
பணிக்குறை வருத்தம் வீடத் 5
துணியின் எவனோ தோழிநம் மறையே.
- உழுந்தினைம்புலவனார். குறுந்தொகை - 334. நெய்தல் - தலைவி கூற்று சிறுவெண் காக்கைச் செவ்வாய்ப் பெருந்தோ
டெறிதிரைத் திவலை யீர்ம்புற நனைப்பப்
பனிபுலந் துறையும் பல்பூங் கானல்
விரிநீர்ச் சேர்ப்பன் நீப்பி னொருநம்
இன்னுயி ரல்லது பிறிதொன் 5
றெவனோ தோழி நாமிழப் பதுவே.
- இளம்பூதனார். குறுந்தொகை - 335. குறிஞ்சி - தோழி கூற்று நிரைவளை முன்கை நேரிழை மகளிர்
இருங்கல் வியலறைச் செந்தினை பரப்பிச்
சுனைபாய் சோர்விடை நோக்கிச் சினையிழிந்து
பைங்கண் மந்தி பார்ப்போடு கவரும்
வெற்பிடை நண்ணி யதுவே வார்கோல் 5
வல்விற் கானவர் தங்கைப்
பெருந்தோட் கொடிச்சி யிருந்த வூரே.
- இருந்தையூர்க் கொற்றன் புலவனார். குறுந்தொகை - 336. குறிஞ்சி - தோழி கூற்று செறுவர்க் குவகை யாகத் தெறுவர
ஈங்கனம் வருபவோ தேம்பாய் துறைவ
சிறுநா வொண்மணி விளரி யார்ப்பக்
கடுமா நெடுந்தேர் நேமி போகிய
இருங்கழி நெய்தல் போல 5
வருந்தின ளளியணீ பிரிந்திசி னோளே.
- குன்றியனார். குறுந்தொகை - 337. குறிஞ்சி - தலைவன் கூற்று முலையே முகிழ்முகிழ்த் தனவே தலையே
கிளைஇய மென்குரல் கிழக்கு வீழ்ந் தனவே
செறிநிரை வெண்பலும் பறிமுறை நிரம்பின
சுணங்குஞ் சிலதோன் றினவே யணங்குதற்
கியான்ற னறிவலே தானறி யலளே 5
யாங்கா குவள்கொ றானே
பெருமுது செல்வ ரொருமட மகளே.
- பொதுக்கயத்துக் கீரந்தையார். குறுந்தொகை - 338. பாலை - தோழி கூற்று திரிமருப் பிரலை யண்ணல் நல்லேறு
அரிமடப் பிணையோ டல்குநிழ லசைஇ
வீததை வியலரில் துஞ்சிப் பொழுதுசெலச்
செழும்பயறு கறிக்கும் புன்கண் மாலைப்
பின்பனிக் கடைநாள் தண்பனி அச்சிரம் 5
வந்தன்று பெருவிறல் தேரே பணைத்தோள்
விளங்குநக ரடங்கிய கற்பின்
நலங்கே ழரிவை புலம்பசா விடவே.
- பெருங்குன்றூர்கிழார்.

குறுந்தொகை - 339. குறிஞ்சி - தோழி கூற்று நறையகில் வயங்கிய நளிபுன நறும்புகை
உறையறு மையிற் போகிச் சாரற்
குறவர் பாக்கத் திழிதரு நாடன்
மயங்குமலர்க் கோதை நன்மார்பு முயங்கல்
இனிதுமன் வாழி தோழி மாயிதழ்க் 5
குவளை யுண்கண் கலுழப்
பசலை யாகா வூங்கலங் கடையே.
- பேயார். குறுந்தொகை - 340. நெய்தல் - தலைவி கூற்று காமங் கடையிற் காதலர்ப் படர்ந்து
நாமவர்ப் புலம்பி னம்மோ டாகி
ஒருபாற் படுதல் செல்லா தாயிடை
அழுவ நின்ற அலர்வேய் கண்டல்
கழிபெயர் மருங்கி னொல்கி யோதம் 5
பெயர்தரப் பெயர்தந் தாங்கு
வருந்துந் தோழியவ ரிருந்தவென் நெஞ்சே.
- அம்மூவனார். குறுந்தொகை - 341. நெய்தல் - தலைவி கூற்று பல்வீ பட்ட பசுநனைக் குரவம்
பொரிப்பூம் புன்கொடு பொழிலணிக் கொளாஅச்
சினையினி தாகிய காலையுங் காதலர்
பேணா ராயினும் பெரியோர் நெஞ்சத்துக்
கண்ணிய ஆண்மை கடவ தன்றென 5
வலியா நெஞ்சம் வலிப்ப
வாழ்வேன் தோழியென் வன்க ணானே.
- மிளைகிழார் நல்வேட்டனார். குறுந்தொகை - 342. குறிஞ்சி - தோழி கூற்று கலைகை தொட்ட கமழ்சுளைப் பெரும்பழம்
காவல் மறந்த கானவன் ஞாங்கர்க்
கடியுடை மரந்தொறும் படுவலை மாட்டும்
குன்ற நாட தகுமோ பைஞ்சுனைக்
குவளைத் தண்தழை யிவளீண்டு வருந்த 5
நயந்தோர் புன்கண் தீர்க்கும்
பயந்தலைப் படாஅப் பண்பினை எனினே.
- காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார். குறுந்தொகை - 343. பாலை - தோழி கூற்று நினையாய் வாழி தோழி நனைகவுள்
அண்ணல் யானை அணிமுகம் பாய்ந்தென
மிகுவலி இரும்புலிப் பகுவா யேற்றை
வெண்கொடு செம்மறுக் கொளீஇ விடர்முகைக்
கோடை யொற்றிய கருங்கால் வேங்கை 5
வாடுபூஞ் சினையிற் கிடக்கும்
உயர்வரை நாடனொடு பெயரும் ஆறே.
- ஈழத்துப் பூதன்றேவனார். குறுந்தொகை - 344. முல்லை - தலைவி கூற்று நோற்றோர் மன்ற தோழி தண்ணெனத்
தூற்றுந் துவலைப் பனிக்கடுந் திங்கட்
புலம்பயி ரருந்த அண்ண லேற்றொடு
நிலந்தூங் கணல வீங்குமுலைச் செருத்தல்
பால்வார்பு குழவி யுள்ளி நிரையிறந் 5
தூர்வயிற் பெயரும் புன்கண் மாலை
அரும்பெறற் பொருட்பிணிப் போகிப்
பிரிந்துறை காதலர் வரக்காண் போரே.
- குறுங்குடி மருதனார். குறுந்தொகை - 345. நெய்தல் - தோழி கூற்று இழையணிந் தியல்வருங் கொடுஞ்சி நெடுந்தேர்
வரைமருள் நெடுமணல் தவிர்த்துநின் றசைஇத்
தங்கினி ராயின் தவறோ தெய்ய
தழைதாழ் அல்குல் இவள்புலம் பகலத்
தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங்கழி 5
இழுமென ஒலிக்கும் ஆங்கண்
பெருநீர் வேலியெம் சிறுநல் லூரே.
- அண்டர்மகன் குறுவழுதியார். குறுந்தொகை - 346. குறிஞ்சி - தோழி கூற்று நாகுபிடி நயந்த முளைக்கோட் டிளங்களிறு
குன்றம் நண்ணிக் குறவர் ஆர்ப்ப
மன்றம் போழு நாடன் தோழி
சுனைப்பூங் குவளைத் தொடலை தந்தும்
தினைப்புன மருங்கிற் படுகிளி யோப்பியும் 5
காலை வந்து மாலைப் பொழுதில்
நல்லக நயந்துதான் உயங்கிச்
சொல்லவும் ஆகா தகி யோனே.
- வாயிலிளங் கண்ணனார். குறுந்தொகை - 347. பாலை - தலைவன் கூற்று மல்குசுனை புலர்ந்த நல்கூர் சுரமுதற்
குமரி வாகைக் கோலுடை நறுவீ
மடமாத் தோகைக் குடுமியிற் றோன்றும்
கான நீளிடைத் தானு நம்மொடு
ஒன்றுமணஞ் செய்தனள் இவளெனின் 5
நன்றே நெஞ்சம் நயந்தநின் துணிவே.
- காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தங் கண்ணனார். குறுந்தொகை - 348. பாலை - தோழி கூற்று தாமே செல்ப வாயிற் கானத்துப்
புலந்தேர் யானைக் கோட்டிடை யொழிந்த
சிறுவீ முல்லைக் கொம்பிற் றாஅய்
இதழழிந் தூறுங் கண்பனி மதரெழிற்
பூணக வனமுலை நனைத்தலும் 5
காணார் கொல்லோ மாணிழை நமரே.
- மாவளத்தனார். குறுந்தொகை - 349. நெய்தல் - தலைவி கூற்று அடும்பவிழ் அணிமலர் சிதைஇமீன் அருந்தும்
தடந்தாள் நாரை இருக்கும் எக்கர்த்
தண்ணந் துறைவற் றொடுத்து நந்நலம்
கொள்வாம் என்றி தோழி கொள்வாம்
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய 5
கொடுத்தவை தாவென் சொல்லினும்
இன்னா தோநம் இன்னுயிர் இழப்பே.
- சாத்தனார். குறுந்தொகை - 350. பாலை - தோழி கூற்று அம்ம வாழி தோழி முன்னின்று
பனிக்கடுங் குரையஞ் செல்லா தீமெனச்
சொல்லின மாயிற் செல்வர் கொல்லோ
ஆற்றய லிருந்த இருந்தோட் டஞ்சிறை
நெடுங்காற் கணந்துள் ஆளறி வுறீஇ 5
ஆறுசெல் வம்பலர் படைதலை பெயர்க்கும்
மலையுடைக் கான நீந்தி
நிலையாப் பொருட்பிணிப் பிரிந்திசி னோரே.
- ஆலத்தூர் கிழார்.

Advertisement
 
Advertisement