Advertisement

செண்பகவல்லியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் பங்குனிப் பெருந்திருவிழா இன்று (ஏப்.5) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 13ந்தேதி தேர்த்திருவிழாவும், 14ந்தேதி தீர்த்தவாரியும், 14ந்தேதி தெப்பத்தேர் திருவிழாவும் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் பங்குனிப் பெருந்திருவிழா மிகவும் விஷேசமானதாகும். இந்தாண்டு பங்குனிப் பெருந்திருவிழா இன்று (ஏப்.5) கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி நேற்று (ஏப்.4) அங்குரார்பணம் நடந்ததை தொடர்ந்து இன்று (ஏப்.5) கொடியேற்றம் கோலாகலமாக நடக்கிறது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் மண்டகபடிதாரர் முறையில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் காலையும் மாலையும் சுசுவாமி அம்பாள் திருவீதியுலா நடக்கிறது. தொடர்ந்து பங்குனிப் பெருந்திரு விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9வது திருநாளான வரும் 13ந்தேதி காலையில் தேர்வடம் பிடித்தல் நடக்கிறது. இதையடுத்து 10வது திருநாளாக வரும் 14ந்தேதி தீர்த்தவாரியும், 11வது திருநாளாக தெப்பத்தேர் திருவிழாவும் நடக்கிறது. பங்குனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலை சுற்றியுள்ள பகுதிகள், காந்தி மைதானம் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பலகாரக்கடைகள், டெல்லி அப்பளக்கடைகள், விதவிதமான ராட்டினங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. விழா ஏற்பாடுகளை செண்பகவல்லியம்மன் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Advertisement
 
Advertisement