Advertisement

மகாபாரதம் பகுதி-69

தெய்வத்தால் இத்தகைய தகிடுதத்தங்களை செய்ய இயலாது. அதனால் தான் அது மனித வடிவை எடுக்கிறது. கண்ணனை நாராயணனின் அவதாரம் என்பதால், நமக்கு தெய்வமாய் தெரிகிறது. அவன் செய்யும் அற்புதங்கள் தெய்வத்தைப் போல் காட்டுகின்றன. மனிதர்களிலும் அற்புதம் செய்யும் தெய்வப்பிறவிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அது கண்ணனின் அளவுக்கு இல்லை; இருக்க முடியாது. ஏனெனில், கண்ணன் நிஜமாகவே தெய்வம். மனிதன் எதைச் செய்கிறானோ அதையே அடைவான். இதை உணர்த்தவே, அநியாயம் செய்த கவுரவர்களை அநியாயத்தாலேயே அழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் தெய்வத்திற்கு ஏற்படுகிறது. தெய்வநிலையில் அதை செய்ய முடியாது என்பதால் மானிடப் பிறவியை எடுத்து அதனுள் மறைந்து கொள்கிறது. இப்படி அஸ்வத்தாமன் மீதும் சந்தேகத்தை உண்டாக்கி விட்ட நிலையில், கண்ணன் அங்கிருந்து அகன்றார். அஸ்வத்தாமனை சபையிலுள்ள அனைவரும் குற்றம் சாட்டினர். நீ கண்ணன் கொடுத்த சாதாரண பரிசுக்கு விலை போய்விட்டாய், என்றெல்லாம் திட்டினார்கள். அஸ்வத்தாமனால் மறுக்கவும் முடியவில்லை. ஏனெனில், நடந்த சூழ்நிலை அப்படி. அவன் வருத்தத்துடன் அவையை விட்டு வெளியேறினான். அரண்மனையை விட்டு வெளியேறிய கிருஷ்ணர், தேவேந்திரனை மனதால் நினைத்தார். அந்தக்கணமே இந்திரன் அவர் முன்னால் வந்து நின்றான். தேவேந்திரா! உன் மகன் அர்ச்சுனனுக்கு, துரியோதனன் என்ற கொடியவனால் ஆபத்து. அதனால், நான் உன்னை அழைக்க வேண்டியதாயிற்று. அவனது நண்பன் கர்ணனால் மட்டுமே அர்ச்சுனனை அழிக்க முடியும். ஆனால், தேவர் உள்ளிட்ட யாராலும் கர்ணனைக் கொல்ல முடியாது. அத்தகைய பேராண்மை மிக்கவன். சூரியனின் மகனான அவன், அத்தகைய வரம் பெற்று பூமிக்கு வந்தவன். இந்நிலையில், அர்ச்சுனனைக் காப்பாற்றுவது அவன் உனது மகன் என்ற முறையில் உனக்கு கடமையாகிறது. மைத்துனன் என்ற முறையிலும், தர்மம் ஜெயிக்க வேண்டும் என்ற முறையிலும் எனக்கு கடமையாகிறது. எனவே, அர்ச்சுனனைக் கொல்லும் கர்ணன் என்ற கொடிய ஆயுதத்தை நீ கட்டுப்படுத்தியாக வேண்டும். அவன் பிறக்கும்போதே கவச குண்டலங்களுடன் பிறந்தவன். அவை அவனது உடலில் இருக்கும்வரை அவனை யாராலும் கொல்ல முடியாது. எனவே, நீ கர்ணனிடம் செல். அவற்றை அவனிடம் இருந்து யாசித்துப் பெற்று விடு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன், என்றார். இந்திரன் உடனே கர்ணனின் மாளிகைக்கு புறப்பட்டான். ஒரு முதிய அந்தணன் போல் தன்னை மாற்றிக்கொண்டான். அவன் அரண்மனைக்குச் செல்லும் போது இரவாகி விட்டது. காவலர்கள் தடுத்தனர். முதியவரே! எங்கள் கர்ணமகாராஜா கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் வலியெடுத்ததால், எண்ணெய் பூசி இப்போது தான் ஓய்வெடுக்கச் சென்றார். நீர் நாளை வந்து உமக்கு வேண்டியதைப் பெற்றுச்செல்லும், என்றனர். இந்திரன் பதில் ஏதும் பேசாமல், அமைதியாக வாசலிலேயே நின்றான். இதை ஒரு காவலன் ஓடிப்போய் கர்ணனிடம் சொன்னான். அந்த முதியவரை உடனே அனுப்பும்படி சொன்னான் கர்ணன். இந்திரன் உள்ளே வந்தான். கர்ணன் அவனது காலடியில் விழுந்து ஆசிபெற்றான். முதியவரே! காவலர்கள் தங்களை தடுத்தமைக்காக அடியேனை மன்னிக்க வேண்டும். தர்மத்திற்கு ஏது நேரமும் காலமும். எந்த நேரமும் தர்மம் செய்யலாம். தங்களுக்கு என்ன வேண்டும் என்பதைச் சொல்லுங்கள், என்றான். முதிய இந்திரன் விரக்தியுடன் சிரித்தான். கர்ணா! உன்னால், நான் கேட்பதைத் தர முடியாது. ஏன்...தேவலோகத்திலுள்ள எதையும் தரும் கற்பக விருட்சத்தால் கூட தர முடியாது, என்றான். கர்ணன் அவனிடம், முதியவரே! தாங்கள் இருப்பது தேவலோகத்தில் அல்ல. அங்கு ஏதாவது பொருள் கிடைக்காமல் போகலாம். ஆனால், கர்ணனிடம் இல்லாத ஒன்றே கிடையாது. என் உயிர் வேண்டுமா? சொல்லுங்கள்...உடனே தந்து விடுகிறேன், என்றான். கர்ணனின் கொடைத் தன்மையையும், அவனது தர்ம உணர்வையும் கண்டு இந்திரன் நெகிழ்ந்தான். கண்களில் நீர் வழிந்தது. இந்த நல்லவனையா நாம் அநியாயமாகக் கொல்லப் போகிறோம். இவன் இல்லாவிட்டால், உலகில் தர்மம் அழிந்துவிடுமே என வேதனை கொண்டான். இருப்பினும், கிருஷ்ணனின் கட்டளையாலும், தன் மகன் மீது கொண்ட பாசத்தாலும், கர்ணா! உன் உடலோடு ஒட்டியிருக்கும் இந்த கவச குண்டலங் களைத் தருவாயா? என்றதும், கர்ணன், பெரியவரே! இவ்வளவுதானா! இது ஒன்றும் கொடுக்க முடியாத ஒன்றல்லவே! உடனே தருகிறேன், என்றவன், தன் மார்பில் கத்தியை எடுத்து குத்தி அறுக்க ஆரம்பித்த வேளையில், வானில் இருந்து சூரிய பகவான் பேசினார். கர்ணா! என் அன்பு மகனே! வேண்டாம். தகாத இந்த தர்மத்தைச் செய்யாதே. அவை உன் உடலில் இருக்கும்வரை எந்த தேவனாலும் உன்னை அழிக்க முடியாது. அவற்றை இழந்தால், நீ இறப்பாய். வந்திருப்பவன் இந்திரன். கண்ணனின் தூண்டுதலால் வந்திருக்கிறான், என்றார். கர்ணன், சூரியனின் பேச்சை கண்டுகொள்ளவில்லை. சொன்ன சொல் காப்பாற்றுவனே மனிதரில் உயர்ந்தவன் என்ற தத்துவத்தின் அடிப்படையில், அவற்றை அறுத்து ஒரு பொன்தட்டில் வைத்து இந்திரனிடம் நீட்டினான். இந்திரனின் உள்ளம் நொறுங்கிப்போனது. கர்ணா! உத்தமனே! நீ நீடுழி வாழ்க, என சொல்லியபடியே தன் சுயரூபத்தைக் காட்டினான். தேவேந்திரா! உனக்கே தர்மம் செய்யும் பாக்கியத்தை எனக்கு தந்திருக்கிறாய் என்றால், நான் எவ்வளவு கொடுத்து வைத்தவன். இந்த மகிழ்ச்சியை விட உயிர் ஒரு பொருட்டா? நீ இந்த பொருட்களுடன் செல்வாயாக என்றான். தேவேந்திரன், கர்ணனின் உடலில் இருந்து கொட்டிய உதிரத்தை நிறுத்தி, மார்பை பளபளவென மின்னச்செய்தான். அவனுக்கு ஒரு வேலாயுதத்தை வழங்கினான். கர்ணா! இந்த வேல் மிகவும் சக்தி வாய்ந்தது. உன் தர்மத்திற்கு பரிசாக இதை நான் அளிக்கிறேன். யார் மீது இதை வீசினாலும் அது அவனைக் கொன்றுவிட்டு உன்னிடமே திரும்பும். ஆனால்...

Advertisement
 
Advertisement